வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
1969 ஜூலை 20-ம் தேதி. அமெரிக்க விண்கலமான ‘அப்பல்லோ 11’ சுமந்து சென்ற விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் காலடி எடுத்துவைத்த வரலாற்று நிகழ்வைத் தனது தாத்தா அருகில் அமர்ந்து டிவியில் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த ஐந்து வயது பாலகன். விண்வெளிக் கனவை இளம் வயதிலேயே நேரலையாகப் பார்த்து வியந்த அந்தச் சிறுவன் விண்வெளி வீரனாக ஆசைப்பட்டு, பின்னாட்களில் வேறு துறையில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டான். இன்றைக்கு அந்தச் சிறுவன் தனது விண்வெளிக் கனவை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டது.
வணிகரீதியான பயணம்
உலகின் பெரும் செல்வந்தர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்தான் அந்தச் சிறுவன். அவரது ‘ப்ளூ ஆரிஜின்’ விண்வெளி நிறுவனத்தின் ‘நியூ ஷெப்பர்டு’ ராக்கெட்தான் அவரது பிள்ளைப் பிராயத்துக் கனவை நிஜமாக்கப்போகிறது. தனது தம்பி மார்க் பெசோஸையும் மேலும் இருவரையும் அழைத்துக்கொண்டு விண்வெளிக்குச் சென்றுவர திட்டமிட்டிருக்கிறார் ஜெஃப். இந்தப் பயணத்தின் மூலம் வணிக ரீதியிலான விண்வெளிப் பயணத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டுசெல்கிறார் ஜெஃப்.