ஜெய்
jeyakumar.r@hindutamil.co.in
ராசியில்லாத வீடுகள், வாகனங்களைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள் உலவுவதைக் கேள்விப்பட்டிருப்போம். பதவி பறிபோகும் என்பதில் தொடங்கி உயிர் பலியே ஏற்படலாம் என்பதுவரை பல்வேறு புரளிகள் கொடிகட்டிப் பறக்கும். பல நேரங்களில் ரியல் எஸ்டேட் தில்லுமுல்லுகளுக்காக, வேண்டுமென்றே சிலர் பரவலான வதந்தியை வளர்த்தெடுப்பதும் உண்டு. தமிழக அரசியல் வட்டாரத்தில் இதுபோன்ற புரளிகள் நிறைய உண்டு. ஆனால், முற்போக்குச் சிந்தனை கொண்ட கேரள இடதுசாரிகளையும் இது தொற்றிக்கொண்டிருப்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். திருவனந்தபுரத்தில் உள்ள மன்மோகன் பங்களாவும், அரசு அலுவல் வாகனமான வரிசை எண் 13-ஐ கொண்ட டொயோட்டா குவாலிஸ் காரும்தான் இந்தக் கட்டுக்கதைகளுக்கு உள்ளாகியிருக்கின்றன.
தவிர்க்கப்படும் இல்லம்
எல்லா மாநிலங்களையும் போலவே, கேரளத்திலும் அமைச்சர் களுக்கான அரசு இல்லங்கள் ஒதுக்கப்படுகின்றன. அவற்றில் ‘கிளிஃப் ஹவுஸ்’ என்பது பிரதமர் இல்லத்தைப் போல் பிரசித்தி பெற்றது. அது ஒரு கவுரவமான அடையாளம். அதற்கு நிகரான பெயரைப் பெற்றது மன்மோகன் பங்களா. ஆனால், மன்மோகன் பங்களாவுக்குக் கிடைத்திருப்பதோ எதிர்மறையான புகழ் என்பதுதான் விஷயம்.