இனி எல்லாமே ஏ.ஐ - 26: விலங்குகளைக் காக்க வீடியோ பார்க்கும் ஏ.ஐ

By சைபர்சிம்மன்

வனவிலங்குகள் பாதுகாப்பில், எப்போதுமே தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றிவருகிறது. நிலத்திலும் நீரிலும் வனவிலங்குகளைக் கண்காணிக்கவும், அவற்றைப் பின்தொடர்ந்து ஆய்வு செய்யவும், ஆர்.எஃப்.ஐ.டி எனப்படும் ரேடியோ அலைவரிசை அடையாளப் பட்டைகளைப் பொருத்துவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தத் தொழில்நுட்பப் பயன்பாட்டின் நீட்சியாக, இப்போது செயற்கை நுண்ணறிவும் வனவிலங்குகள் பாதுகாப்பில் மனிதர்களுக்குக் கைகொடுக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கான உதாரணங்களைத் தொடர்ந்து பார்க்கலாம்.

எளிதில் அடையாளம் காணும்

கண்காணிப்புக் கேமரா காட்சிகள் மற்றும் ட்ரோன் வழி படங்களில் உள்ள விலங்குகளை அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிட ஏ.ஐ நுட்பம் உதவுவது பற்றி பார்த்தோம். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ‘வைல்டு மீ’ நிறுவனம் உருவாக்கிய, வனப்புத்தகத்தின் (வைல்டு புக்) ஏ.ஐ மென்பொருள், ஒட்டகச்சிவிங்கிகளை அடையாளம் காண உதவுதையும் பார்த்தோம்.

வைல்டு புக் மென்பொருள், கணினி பார்வைத்திறன் கொண்டது. செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் நுட்பத்தின் மூலம், பார்க்கும் படங்களில் உள்ள விலங்குகளை அது அடையாளம் கண்டு சொல்கிறது. ஆயிரக்கணக்கான படங்களில் எந்தப் படத்தில் விலங்குகள் இருக்கின்றன என்பதைப் படு வேகமாக அடையாளம் காண்பதோடு, தனிப்பட்ட விலங்குகளை அறியும் திறனையும் இது கொண்டிருக்கிறது. மனிதர்கள் இந்த வேலையைச் செய்வதாக இருந்தால் வாரக்கணக்கில் ஆகலாம், மாதக்கணக்கிலும் ஆகலாம். ஆனால் ஏ.ஐ மின்னல் வேகத்தில் செயல்படுவதால், விலங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அவற்றின் பாதுக்காப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முடிகிறது. இவ்விதமாக, ‘வைல்டு புக்’ மென்பொருள் சிறுத்தைகள் முதல் வரிக்குதிரை வரை இருபதுக்கும் மேற்பட்ட விலங்குகளுக்கான தரவுப் பட்டியலைக் கொண்டிருக்கிறது. திமிங்கலம் உள்ளிட்ட கடல் விலங்கையும் இதனால் கண்காணிக்க முடியும்.

சரியான தருணத்தில் படம் 

காடுகளில் விலங்குகளைப் படமெடுப்பதிலும் ஏ.ஐ உதவிக்கு வருகிறது. விலங்குகள் நடமாட்டம் உள்ள இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவதுகூட எளிதுதான். ஆனால், விலங்குகள் அந்த வழியே போகும் தருணத்தைக் கண்டறிந்து படம் எடுப்பது முக்கியம் அல்லவா? இந்த இடத்தில்தான் ஏ.ஐ உதவுகிறது.

கேமரா பின்னே இயங்கும் மென்பொருள் நிலத்தில் அசைவு அல்லது நடமாட்டத்தை உணர்ந்து, உடனே கேமராவை இயக்கிப் படம் எடுக்க வைக்கிறது. இப்படி எடுக்கப்படும் படங்களில் உள்ள தனி விலங்குகளை ஏ.ஐ கட்டம் போட்டுக் காட்டிவிடுகிறது. படங்களில் உள்ள பொருட்கள் அல்லது உருவங்களை அடையாளம் காண்பதிலும், இந்தக் கட்டமிட்டுக்காட்டும் நுட்பம் கைகொடுக்கிறது. குறிப்பிட்ட அம்சங்கள் கொண்ட பொருட்களை அடையாளம் காண பயிற்சி அளிக்கப்பட்ட மென்பொருள், புகைப்படங்களில் அவற்றைக் கட்டம் போட்டுக் காட்டுகிறது.

இப்படிப் படம் பார்ப்பதில் மட்டும் அல்ல, வீடியோ பார்ப்பதிலும் ஏ.ஐ சிறந்து விளங்குகிறது. ஆம், நாம் யூடியூப் வீடியோக்களைப் பார்ப்பது போல, கணினி பார்வை பயின்ற ஏ.ஐ மென்பொருளும் மணிக்கணக்கில் வீடியோ பார்க்கிறது. ஆனால், நாம் பொழுதுபோக்கிற்காக அல்லது கலை ரசனையோடு பார்க்கிறோம் என்றால் ஏ.ஐ தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற வீடியோ பார்க்கிறது. வீடியோக்களில் குறிப்பிட்ட வகை விலங்குகள் இருக்கின்றனவா என தேடிக் கண்டுபிடித்துச் சொல்வதுதான் அந்தக் கடமை.

கணக்கிட, காக்க!

விலங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது மிகவும் சிக்கலான செயல். உலகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளிலிருந்து தகவல்களைச் சேகரிக்க வேண்டும். ஆனால், எல்லா இடங்களிலும் ஆய்வாளர்கள் சென்று தகவல் சேகரிக்க முடியாது. அதற்கான ஆள் பலமும் இல்லை, பட்ஜெட்டும் இருப்பதில்லை. இதற்குத் தீர்வாகத்தான், வீடியோக்களை நாடுகின்றனர். சுற்றுலாப் பயணிகள் அல்லது தனிநபர்கள் வனப்பகுதியில் எடுக்கும் வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றுவது உண்டு. விலங்குகளைக் கண்டறிய இந்த வீடியோக்கள் நல்ல வழி. ஆனால், மனிதர்களால் மணிக்கணக்கில் இந்த வீடியோக்களைப் பார்ப்பதோ, அப்படியே பார்த்தாலும் அவற்றில் உள்ள விலங்குகளைக் கணக்கிடுவதோ சாத்தியம் இல்லை.

இந்தப் பணியை ஏ.ஐ மென்பொருள் கச்சிதமாகச் செய்கிறது. ‘வைல்டு புக்’ உருவாக்கிய மென்பொருள், இப்படி கடல் பகுதிகளில் இருக்கும் திமிங்கலங்களை வீடியோவில் பார்த்து கணக்கிட்டுச் சொல்கிறது. இந்த முறையில், விலங்குகளின் நடமாட்டத்தையும், தற்போதைய எண்ணிக்கையையும் ஆய்வாளர்கள் சரியாக அறிய முடியும். 2017-ல் செயல்படத் தொடங்கியது முதல், இந்த மென்பொருள் இதுவரை 1,700-க்கும் மேற்பட்ட திமிங்கலங்களைக் கணக்கிட்டிருக்கிறது. இதை வைத்து திமிங்கலங்கள் தொடர்பான நிலை மற்றும் அவற்றைக் காக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக எளிதாகத் தீர்மானிக்கலாம்.

இதே போல, பறவைகளின் ஒலிகளையும் ஏ.ஐ மூலம் பகுப்பாய்வு செய்யலாம். அமெரிக்காவில் இப்படி மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில், பறவைகள் மின்கம்பிகள் மீது பட்டு இறப்பது அதிகரித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மின்கம்பிகளைப் பறவைகள் அடையாளம் காணும் வகையில் நவீன விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வனவிலங்குப் பாதுகாப்பில் இன்னொரு விதத்திலும் ஏ.ஐ உறுதுணையாக இருக்கிறது. உலகம் முழுவதும் விலங்குகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்படுகின்றன. வேட்டையாடுபவர்களைப் பிடிப்பதற்காக வன காவலர்கள் ரோந்து செல்வதுண்டு என்றாலும், இது காட்டில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் போன்றது. ஏனெனில், வனத்தில் எந்தப் பாதையில் வேட்டையாடுபவர்கள் செல்வார்கள் என்பது தெரியாது. வன விலங்குக் காவலர்கள் ஒரு பாதையில் சென்றால், வேட்டையாடுபவர்கள் வேறு பாதையில் சென்று தப்பிவிடலாம்.

இந்தச் சிக்கலுக்குச் செயற்கை நுண்ணறிவின் உட்பிரிவான இயந்திரக் கற்றல் அழகாகத் தீர்வு சொல்கிறது. தரவுப் பட்டியலைக் கொடுத்தால், இயந்திரக் கற்றல் அதிலிருந்து ஒரு மாதிரியைக் கண்டறிந்து அதனடிப்படையில் எதிர்காலச் செயல்பாட்டைக் கணித்துச் சொல்லிவிடும். இதே முறையில், வேட்டையாடுபவர்கள் புழங்கும் பாதைகள் மற்றும் வன விலங்கு ரோந்துப்பணிகள் பாதை தொடர்பான தகவல்களைக் கொடுத்தால், இயந்திரக் கற்றல், அடுத்த ரோந்தை எந்தப் பாதையில் மேற்கொள்ளலாம் எனக் கணித்துச்சொல்கிறது. இது அதிகப் பயனளிப்பதாகவும் இருக்கிறது. இப்படி இயற்கை வளங்களைக் காக்க துணை நிற்கிறது ஏ.ஐ!

(தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE