கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in
சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவராக போற்றப்படும் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், தனது கீர்த்தனைகள் மூலம் ராமபிரான் மீதுள்ள பக்தியை வெளிப்படுத்தியவர். கர்னாடக இசைக்கு அளப்பறிய சேவை புரிந்த தியாக பிரம்மம், சிறந்த இசைஞானியாக போற்றப்படுகிறார். பிரகலாதன், நாரத முனிவர் முதலானோருடன் ஒப்பிடத் தகுந்த பக்தராகவும், வைராக்கியம் நிறைந்த ஆத்ம ஞானியாகவும், சிறந்த கவியாகவும், சிறந்த நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தவர் தியாகராஜ சுவாமிகள்.
கிபி 18-ம் நூற்றாண்டில் திருவாரூரில் ராமபிரம்மம் – சீதாம்மா தம்பதி வசித்து வந்தனர். ராம பக்தரான ராமபிரம்மம் தெலுங்கு அந்தணர் குலத்தில் பிறந்தமையால் தெலுங்கு, சம்ஸ்கிருத மொழிகளில் சிறந்து விளங்கினார். ராமாயண உபன்யாசங்களும் நிகழ்த்தி வந்தார். சீதாம்மா கர்னாடக இசையில் நன்கு புலமை பெற்றவர். இவர்களுக்கு, பஞ்சநாத பிரம்மம், பஞ்சாபகேச பிரம்மத்துக்குப் பிறகு, 1767-ம் ஆண்டு (04-05-1767) மூன்றாவது மகனாக தியாகபிரம்மம் பிறந்தார். முதல் இரண்டு மகன்களும் குணமற்றவர்களாக இருந்ததால், அண்டை வீட்டாரின் புகார் காரணமாக இடம் பெயரலாம் என்று ராமபிரம்மம் முடிவு செய்தார்.
முதலில் குடும்பத்தினருடன் காசி யாத்திரை செல்லலாம் என்று முடிவெடுத்த ராமபிரம்மம், கனவில் தோன்றிய திருவாரூர் தியாகராஜ சுவாமியின் கட்டளைப்படி, தனது குடும்பத்துடன் தஞ்சாவூருக்கு அருகே உள்ள திருவையாறில் குடியேறினார்.
தெலுங்கு, சம்ஸ்கிருத மொழிகளை தன் தந்தையிடம் பயின்றார் தியாகராஜர். சீதாம்மா அவருக்கு பக்திப் பாடல்களைக் கற்றுக் கொடுத்தார். சொண்டி வெங்கடரமணய்யாவிடம் கர்னாடக இசையை முறையாகப் பயின்றார் தியாகராஜர்.
தியாகராஜரை அவரது 8 வயதிலிருந்தே (உபநயனத்துக்குப் பிறகு) சீதா, ராமபிரான், லட்சுமணர், அனுமன் விக்கிரகங்களுக்கு பூஜை செய்ய பணித்தார் ராமபிரம்மம். அப்போது தனக்குத் தெரிந்த மொழிகளில் ராமபிரான் மீது கீர்த்தனைகளை இயற்றி, தானே ராகம் அமைத்து பாடத் தொடங்கினார் தியாகராஜர். ‘நமோ நமோ ராகவாய’ என்ற கீர்த்தனையைத் தேசிக தோடி ராகத்தில் முதன்முதலாகப் பாடினார். ராமபிரான் மீது மட்டுமல்லாமல் கிருஷ்ணர், சிவபெருமான், சக்தி, விநாயகர், சுப்பிரமணியர், சரஸ்வதி, அனுமன் மீதும் கீர்த்தனைகள் பாடத் தொடங்கினார் தியாகராஜர்.