கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனின் அண்ணன் மகன் என்ற அடையாளத்துடன் அரசியலில் அறிமுகமாகியிருந்தாலும், ராகுல் காந்தியுடனான நெருக்கத்தால் தமிழ்நாடு காங்கிரஸின் முகங்களில் ஒன்றாக மாறியிருப்பவர் மாணிக்கம் தாகூர். தென்தமிழகப் பிரச்சினைகளில், மார்க்சிஸ்ட் எம்பி-யான சு.வெங்கடேசனுடன் இணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கியாகக் குரல் கொடுப்பவர். எந்தக் கேள்வி கேட்டாலும் காத்திரமாகப் பதில் சொல்லும் அவரைக் ‘காமதேனு' மின்னிதழுக்காகத் தொடர்புகொண்டேன். ‘தமிழுக்கும் அமுதென்று பேர்...’ என்ற ‘காலர் ட்யூன்' ஒலித்த பின்னர், பேசத் தொடங்கினார் மாணிக்கம் தாகூர்.
எப்படி இருக்கிறது திமுகவின் ஒரு மாத கால ஆட்சி?
மிகப் பிரமாதமாக இருக்கிறது. மிகப்பெரிய நம்பிக்கை வைத்துத்தான் மக்கள் எங்கள் அணிக்கு வாக்களித்தார்கள் என்றாலும், அந்த நம்பிக்கைக்கும் மேலாக நல்லாட்சி தருகிறார் ஸ்டாலின். இந்த அரசின் ஒவ்வொரு அசைவிலும், ‘இது மக்கள் நலனுக்கான அரசு’ என்கிற செய்தி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசிடம் அடிபணிந்து கிடந்துதான் எதையும் கேட்கவே முடியும் என்கிற கதியை மாற்றி, இப்போது மாநில நலனையும், சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமலும் நம்முடைய உரிமையைக் கேட்டுப்பெற முடியும் என்று இந்த அரசு காட்டியிருக்கிறது. முதல்வர் மட்டுமின்றி நல்ல அமைச்சர்களும், நல்ல அதிகாரிகளும் பொறுப்புக்கு வந்திருப்பதால் ஒட்டுமொத்த அரசின் செயல்பாடும் சிறப்பாகியிருக்கிறது.