சுற்றுலாவில் மிக முக்கியமானது திட்டமிடலுடன் கூடிய சிக்கனம். சுற்றுலாவுக்கு எத்தனை நாள் போகிறோம் என்பதில் தொடங்கி, எந்த விமானத்தில் என்ன கட்டணத்தில் பயணிக்கிறோம், எங்கு தங்குகிறோம் என ஒவ்வொன்றையும் நேரமெடுத்து திட்டமிட வேண்டும். சிக்கனச் சிந்தனை அனைவருக்கும் சீராக அமைவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். புதுவகை உணவும் சிற்றுண்டியும் சுவைப்பதில் சிக்கனம் பார்ப்பார்கள் சிலர். தண்ணீர் குடிப்பது, அயல்நாட்டு மதுவகைகளை ருசிப்பது, பொருட்களும் நினைவுப் பரிசுகளும் வாங்குவது மற்றும் நல்ல தங்குமிடம் பார்ப்பது போன்றவற்றில் கறார் காட்டுவார்கள் சிலர். அனைத்தையும் ரசித்து ருசித்து செரித்துவிட்டு, ‘நுழைவுக் கட்டணம் அதிகம்’ எனச் சொல்லி முக்கியமான இடங்களுக்குள் செல்வதைத் தவிர்ப்பார்கள் சிலர்.
என்னைப் பொறுத்தவரை, சாப்பாட்டை நான் பொருட்படுத்துவதே இல்லை. ஒரு நாளுக்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடங்களை முழுமையாகவும் மனநிறைவாகவும் பார்த்துவிட வேண்டும் என்பதே என் இலக்கு. காலை பத்து மணியோ, மதியம் மூன்று மணியோ... பசிக்கும் நேரமே நான் புசிக்கும் நேரம். தண்ணீரும் உணவும் அளவோடுதான். அதிகாலையிலும், பிறகு நாள் முழுவதும் நினைவுகளைச் சேகரித்துக்கொண்டு அறைக்குத் திரும்பியதும் நிறைய தண்ணீர் குடிப்பது என் வழக்கம். இது, ஊர் சுற்றும் வேளையில் கழிப்பறையைத் தேடிக்கொண்டிருக்க வேண்டாமே என்கிற முன்னெச்சரிக்கையும்கூட. முடிந்தவரை, சிக்கனம் பார்க்காமல் சில்லறையை நான் சிதறவிடுவது வரலாற்றுத் தலங்கள், அருங்காட்சியகங்கள், நினைவிடங்களுக்கான நுழைவுக் கட்டணங்களுக்குத்தான். இவ்விஷயத்தில் கணக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்.
ஒசாகா நீர்வாழினக் காட்சியகம்
ஒசாகா கோட்டை வளாகத்தில் இருந்த துரித உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, இதோ மெட்ரோ ரயிலில் அமர்ந்திருக்கிறேன். ஒசாகா நீர்வாழினக் காட்சியகமான காய்யூக்கன் (Aquarium Kaiyukan) போகிறேன். ‘ஒசாகா காய்யூ (Osaka Kaiyu) ஒரு நாள் பயணச்சீட்டு’ இருந்தால், நீர்வாழினக் காட்சியகத்துக்கும் போகலாம், ஒசாகாவின் அனைத்து மெட்ரோ தடங்களிலும், மேலும் சில நகரப் பேருந்துகளிலும் கூடுதல் செலவில்லாமல் பயணிக்கலாம். நானும் அதை வாங்கியிருந்தேன்.
காய்யூக்கன், பொதுமக்கள் பார்வைக்கு உள்ள புகழ் பெற்றதும் மிகப் பெரியதுமான நீர்வாழினக் காட்சிசாலைகளுள் ஒன்று. 620 இனங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் நீர்வாழ் உயிரினங்கள் இதனுள்ளே வாழ்கின்றன. வருடத்துக்கு 25 லட்சம் மக்கள் இதைப் பார்க்க வருகிறார்கள். சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களும், சிறு வண்டியில் குழந்தைகளை வைத்து மெல்ல தள்ளி வருகிறவர்களும் தடையேதுமின்றி பார்த்து மகிழலாம். பல்வேறு மொழியினரும் அறிந்து புரிந்து பார்ப்பதற்காக 29 மொழிகளில் வரைபடம் தயாரித்துத் தருகிறார்கள். தமிழ் மொழியிலும் கிடைக்கிறது. இலவச அருகலை (Wi-Fi) உள்ளே இருந்ததால், அங்கிருந்தே பலவற்றை என் வீட்டு குட்டீஸ்களுக்குக் காணொளியில் காட்டினேன்.
மீன்களுடன் உலகச் சுற்றுலா
நீர்வாழினங்களைப் பார்க்க, மக்களோடு மக்களாகச் சுரங்கப்பாதை போன்ற நுழைவாயிலில் நுழைந்தேன். ‘தண்ணீர் வாசல்’ (Aqua Gate) என்பது அதன் பெயர். சுரங்கத்தின் மேற்கூரையிலும் இருபுரங்களிலும் நீல வெளிச்சத்தில் எண்ணற்ற மீன்கள் துள்ளி விளையாடுவதை மெய்மறந்து ரசித்தேன்.
தானியங்கி படிக்கட்டில் நின்று, நேரே எட்டாவது மாடிக்குச் சென்றோம். காட்சிகள் அங்கிருந்துதான் தொடங்குகின்றன. நடுவில் உள்ள மிகப் பெரிய தொட்டியைச் சுற்றிச் சுற்றி நடந்து கீழிறங்க வேண்டும். அவ்வாறு இறங்கிக்கொண்டே பார்க்கும் விதமாக ஜப்பான் காடுகள், அலுசியன் தீவுகள், மாண்டரி விரிகுடா, பனாமா வளைகுடா, ஈகுவெடார் மழைக் காடுகள், அண்டார்டிகா, டாஸ்மான் கடல், பெருந்தடுப்புப் பவளப்பாறை (Great Barrier Reef), பசிபிக் பெருங்கடல், ஜப்பான் செடோ உள்நாட்டுக் கடல், அந்தந்தப் பருவத்துக்குரிய காட்சிகள், சிலி கடற்கரை, வடக்கு மற்றும் தெற்கு நியூசிலாந்து தீவுகளை இணைக்கும் குக் நீரிணைப்பு, ஜப்பான் ஆழ்கடல் என பல்வேறு பகுதிகளைக் காணும் வகையில் தொட்டியை உருவாக்கியிருக்கின்றனர்.
பளிச்சென்ற சூரிய வெளிச்சத்துடன் ஜப்பான் காடுகள் மண்டலத்தை உருவாக்கியுள்ளனர். காடுகள், மலைகள், நீரோடைகள், ஆறுகளிலும் அதன் அருகாமையிலும் வாழும் உயிரினங்களை வைத்து கவிதையே செய்திருக்கிறார்கள் எனலாம். அப்படி ஒரு நேர்த்தி. ஜப்பான் ஆழ்கடல் மண்டலத்தில் ‘நானும் ரவுடிதான்’ என ஜப்பானிய சிலந்தி நண்டு கெத்து காட்டுகிறது. நடுவில் உள்ள தொட்டிதான் பசிபிக் பெருங்கடல் மண்டலம். 9 மீட்டர் ஆழமும் 34 மீட்டர் நீளமும் உள்ள இத்தொட்டியில் 5,400 டன் நீர் இருக்கிறது. மூன்று மாடிகள் வரையிலும் தொட்டியைப் பார்க்க முடியும் என்பதால், அதனுள் இருக்கின்ற திமிங்கிலச் சுறா, புலிச்சுறா மற்றும் சிறுத்தை சுறாவையும், ஆயிரக்கணக்கான சிறுசிறு அழகான மீன்களையும் பல்வேறு கோணங்களில் பார்க்க முடிகிறது. நீருயிர் நூலகத்தினுள் கயல்களைப் படித்தன என் விழிகள்.
நீர் நாய், கடல் சிங்கம், பெங்குவின், டால்ஃபின், கணவாய் மீன் உள்ளிட்ட நீரினங்கள் மட்டுமல்ல, நீரிலும் நிலத்திலும் வசிக்கவல்ல உயிரினங்கள், முதுகெலும்பில்லாத கடல்வாழ் உயிர்கள், ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள், மரம், செடிகள் அனைத்தும் கொண்ட பூமிப்பந்தாக உள்ளது ஒசாகா நீர்வாழினக் காட்சியகம். ஆழ்கடல், பனிப் பிரதேசம், பாறைகள், காடுகள் என ஒவ்வொரு மண்டலத்தையும் உண்மைக்கு நிகராக பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார்கள். நீருயிரிகளுடன் உலகச் சுற்றுலா சென்ற உன்னத உணர்வு எனக்கு மேலிட்டது.
உயிரிகள் வாழுகின்ற பகுதிகளையும் அதன் சுற்றுச்சூழலையும் பார்க்க – கேட்க – நுகர – உணர, கலந்துறவாடும் காட்சிப் பகுதியும் (Interactive Exhibit area) உள்ளது. இணையத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு, மீன்களுக்கு உணவு கொடுக்கும் நேரத்தில் சென்றால் கூடுதல் ஆனந்தம் பெறலாம். பயணிகளை ஈர்ப்பதற்காக, திமிங்கிலச் சுறாவின் மாதிரியைச் செய்துவைத்துள்ளார்கள். வாய் திறந்திருக்கும் திமிங்கிலச் சுறாவின் பற்கள் மட்டும் தெரியும்படி, நிழற்படச் சாவடியும் (Photo Booth) அருகில் உள்ளது. ஆர்வத்துடன் அதன் முன் நின்று படம் எடுத்துக்கொண்டேன்.
ஜப்பானியர்களின் நற்குணம்
அங்கிருந்து புறப்பட்டு, கேளிக்கையும், பொழுதுபோக்கும் நிறைந்த டாடம்போரி பகுதியில் காலாற நடந்தேன். இரவில் வண்ண விளக்குகள் ஓவியம் வரைய, குளிரில் உடல் தாளமிட புதுவித உணர்வில் ஊடாடினேன். அங்கேயே இரவு உணவை முடித்துவிட்டு தங்கும் இடம் நோக்கிப் புறப்பட்டேன். தங்குமிடத்துக்கு அருகில் இருந்த தொடர்வண்டி நிலையத்தில் இறங்கினேன். முகவரியை ஒருவரிடம் காட்டினேன். விளக்கம் சொன்னார். படியேறி மேலே சாலைக்கு வந்தேன்.
வெகுதூரம் நடந்தும் பெயர் பலகை கண்ணில் படவில்லை. வரைபடத்தில் இவ்வளவு தூரம் காட்டவில்லையே என சந்தேகித்து, இரண்டாவதாக ஒருவரிடம் கேட்டேன். தன்னைப் பின்தொடருமாறு சைகை செய்தார். சென்றேன். அவர் நினைத்து அழைத்துச் சென்ற இடமும் தவறு. என்ன செய்வதென்று அவருக்கும் தெரியவில்லை. உடல் வளைத்து மன்னிப்புக் கேட்டுவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினார்.
நான் மூன்றாமவரை அணுகினேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இரண்டாம் நபர் திரும்பி வந்தார். என் சார்பாக அவரே ஜப்பானிய மொழியில் விளக்கினார். மூன்றாமவர் தன்னுடைய அலைபேசி வரைபடத்தில் பார்த்து இடத்தை உறுதிசெய்த பிறகு, இரண்டாமவர் விடைபெற்றார். இப்போது மூன்றாமவரைப் பின்தொடர்ந்து நடந்தேன். 200 மீட்டருக்கு மேல் குறுக்குப் பாதையில் வந்தபிறகு, ‘இதோ’ என கைகாட்டினார். ஆமாம் நான் தங்க வேண்டிய இடம் அதுதான். நன்றியோடு அவரை வணங்கினேன். அவர் சென்ற பிறகு மீண்டும் சாலையைப் பார்த்தேன். என்னை நினைத்து நானே சிரித்துக்கொண்டேன்.
ஆமாம்! நான் இறங்கிய தொடர்வண்டி நிலையத்துக்கு நேரெதிரே, சாலையின் மறுபுறம்தான் தங்குமிடம் இருக்கிறது. மரக்கிளைகள் மறைத்திருந்ததால் வழி தெரியாமல் வெகுதூரம் நடந்துவிட்டேன். அதனாலென்ன, ஜப்பானியர்களின் நல்ல குணத்தை வியக்க மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்ததே எனும் மகிழ்வில் உறங்கச் சென்றேன்!
டால்ஃபினும் மானுட வாழ்க்கையும்
காய்யூக்கன் நீர்வாழினக் காட்சியகத்தில் காணப்பட்ட அறிவிப்புப் பலகையில் இப்படி எழுதப்பட்டிருந்தது - ‘1991-ல் வொயிட்-சைடட் டால்ஃபினை (White-sided Dolphin) இங்கே பராமரிக்கத் தொடங்கினோம். அவை குட்டி போட்ட 11 முறையும் நிறைய கற்றுக்கொண்டோம். தாய் டால்ஃபின் பாதுகாப்பாக குட்டி ஈனுவதற்காக எவ்வகையில் நாம் ஆதரவளிக்க முடியும்? குட்டி டால்ஃபின் பாதுகாப்பாக வளர எவ்வகையில் நாம் ஆதரவளிக்க முடியும்? குட்டி டால்ஃபின் எப்படி மீன்களைச் சாப்பிடத் தொடங்குகிறது? மேலும், சிறப்பான சூழலில் டால்ஃபின்கள் வளர, தொடர்ந்து ஆய்வு செய்து, அதைச் செயல்படுத்துகிறோம்.
தன் குழந்தையைச் சிறந்த முறையில் வளர்த்தெடுக்க தாயினால் மட்டுமே முடியும். இருப்பினும், ஒரு குடும்பமோ அல்லது நெருங்கிய நண்பர்களோ இருப்பார்களேயானால் தாயின் வேலைப்பளு குறைகிறது. குழந்தையின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கிறது. இது டால்ஃபினுக்கு மட்டுமல்ல, மனிதகுலத்துக்கும்தான்.’
(பாதை நீளும்)