அசராத ரங்கசாமி... அடங்கிப்போன பாஜக!- புதுவையில் புஸ்வாணமான தாமரை அஸ்திரம்

By காமதேனு

எம்.கபிலன்
readers@kamadenu.in

புதுச்சேரியில் முதல்வர் பதவிக்கே இலக்குவைத்து செயல்பட்ட பாஜகவை, ‘சரி, கொடுப்பதைக் கொடுங்கள்’ என்று இறங்கிவர வைத்ததன்மூலம் தன்னுடைய அரசியல் சாணக்கியத்தனத்தை மீண்டும் நிரூபித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. துணை முதல்வர், மூன்று அமைச்சர்கள், மாநிலங்களவை உறுப்பினர் ஆகிய பதவிகளை ஒதுக்க வேண்டும் என பாஜக நெருக்கடி கொடுத்துவந்த நிலையில், சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவிகளை மட்டும்தான் தர முடியும் என உறுதியாகச் சொல்லி, தன்னை யாராலும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது என்பதையும் அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் ரங்கசாமி.

இதற்காக அவர் பெரிய ராஜதந்திர நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. அவரது வழக்கமான எதையும் தள்ளிப்போடும் நிதானமான போக்கும், நீண்ட மவுனமும்தான் இதைச் சாதித்துக் கொடுத்திருக்கின்றன.

புதுவையில் தாமரை ஆட்சி என்பதில் ஆரம்பத்திலிருந்தே முனைப்பாக இருந்தது பாஜக. அதற்காக ரங்கசாமியிடம் சரிபாதி எண்ணிக்கையிலான தொகுதிகளைக் கேட்டு அடம்பிடித்தது. ஆனால், அவர்களுக்கு உடனடியாக எந்தப் பதிலையும் சொல்லாமல் இழுத்தடித்து கடைசி நேரத்தில் அதிமுகவுக்கும் சேர்த்து 14 தொகுதிகளை மட்டும் அவர் கொடுத்தார். அங்கேயே பாஜகவுக்கு முதல் சறுக்கல் ஆரம்பித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE