என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்... மருத்துவர் அன்பின் முன்னே’ எனப் புதுப்பாடல் இயற்றும் அளவுக்கு இந்த நெருக்கடியான கரோனா காலத்தில் தன்னலம் கருதாமல் செயலாற்றிவருகிறார்கள் மருத்துவர்கள். அவர்கள் மட்டுமல்லாது செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் என அனைத்து முன்களப் பணியாளர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு கரோனா களத்தில் நிற்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே, இந்தக் கொடுங்காலத்துக்கு நடுவே மனிதத்துவத்தைப் பறைசாற்றும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில் கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில், இந்து மதத்தைச் சேர்ந்த மருத்துவர் ரேகா கிருஷ்ணன், இறுதிக் கணத்தில் இருந்த இஸ்லாமியப் பெண்ணின் காதில் ‘ஸகராத்’ சொன்ன சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
முஸ்லிம் ஒருவரின் வாழ்வு முழுமைபெற இஸ்லாம் ஐந்து கடமைகளைச் சொல்கிறது. அதில் முதன்மையானது இறைவனின் மீதான நம்பிக்கை. இஸ்லாமியர்கள் மரணத்தின் விளிம்பில் இருக்கும் நோயாளிக்காக, ‘லாயிலாஹா இல்லல்லாஹீ… முகம்மது ரசூலுல்லாஹ்’ என உச்சரிப்பார்கள். நோயாளியும் மீண்டும் அதைச் சொல்வார். ‘இறைவன் ஒருவனே. அவனே அல்லா. அவனுக்கு இணை, துணை இல்லை. முகமது நபி அவனின் தூதனாக இருப்பார்கள்’ என்பது இதன் அர்த்தம். இப்படிச் சொல்வதன் மூலம், மரணப் படுக்கையில் இருப்பவரின் வலி குறையும் என்பதும், இறைவன் வலியின்றி அந்த உயிரை எடுத்துக்கொள்வார் என்பதும் முஸ்லிம்களின் நம்பிக்கை. இதை ‘ஸகராத்’ வேளை பிரார்த்தனை என்கிறார்கள்.