கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்; பணம் தின்னிக் கழுகுகள்தான்!- திருப்பூர் எம்.பி., கே. சுப்பராயன் சுளீர்

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

தனியார் மருத்துவமனைகளை, ‘பணம் தின்னிக் கழுகுகள்’ என்று விமர்சித்திருப்பதன் மூலம் புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன். மே 26-ல் மலை கிராமங்களில் உள்ள சுமார் 10 அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து, அங்கு நடக்கும் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள், குறைபாடுகள், தேவைகளைத் தொகுத்து முதல்வருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் சுப்பராயன். அதே வேகத்தில் தனியார் மருத்துமனைகளை, ‘பணம் தின்னிக் கழுகுகள்’ என்று குறிப்பிட்டு தன் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் அவர் எழுதப்போக அதற்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ).

இதையடுத்து அவரது கருத்து பல்வேறு ஊர்களில் போஸ்டர்களாகவும் வடிவமெடுத்திருக்கிறது. ‘சுப்பராயன் உண்மையைத்தானே சொன்னார்? நோயாளிகளை ஓரிரு நாட்கள் வைத்திருந்து 2 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை கறந்துவிட்டு,  உயிரைக் காப்பாற்றாத தனியார் மருத்துவர்களின் செய்கை எந்த வகையிலானது?’ என சுப்பராயனுக்கு ஆதரவாகப் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே, “சுப்பராயனுக்கும், அவர் குடும்பத்தினருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை பார்க்கக்கூடாது” என்று மருத்துவர் ஒருவர் எழுதிய பின்னூட்டமும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. பதிலுக்கு, ‘‘நான் சொன்ன ‘பணம் தின்னி’ எனும் பதம் சிறிய மருத்துவமனைகள், க்ளினிக்குகள், மருத்துவர்கள் குறித்ததல்ல. கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையைக் குறித்ததே அது. மக்களின் இன்னல்களை, பிரச்சினைகளை வெளியிடும் கடமையும் உரிமையும் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் எனக்குண்டு. இந்நிலையில் எம்பிக்கோ அவரது குடும்பத்துக்கோ இனிமேல் மருத்துவம் பார்க்கக் கூடாது என்று மருத்துவர் ஒருவர் சொன்னதை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளேன். அந்த ‘நல்ல மனிதருக்கு' தலைவணங்குகிறேன்’’ என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் சுப்பராயன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE