தனியார் நிறுவனங்களும் துணை நிற்கட்டும்!

By காமதேனு

பிற மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் கரோனா பரவலின் காரணமாக மருத்துவ சிகிச்சைக்கான ஆக்ஸிஜனின் தேவை கணிசமாக அதிகரித்திருக்கிறது. ஆரம்பத்தில் 200 மெட்ரிக் டன்னாக இருந்த ஆக்ஸிஜன் தேவை மே மாத இறுதியில் 650 மெட்ரிக் டன்னாக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், ஆக்ஸிஜன் மற்றும் உயிர் காக்கும் கருவிகளைத் தமிழ்நாட்டிலேயே தயாரிக்கும் சூழல் உருவாகியிருப்பது ஆறுதல் அளிக்கிறது.

கரோனா தொற்றால் தீவிரமாகப் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, ஆக்ஸிஜன் அவசியம் எனும் நிலையில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக மரணங்கள் நிகழ்ந்தன. இதையடுத்து ஆக்ஸிஜன் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ சாதனங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆக்ஸிஜன் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை உற்பத்தி செய்ய 45 நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. இப்படி முன்வரும் நிறுவனங்களுக்கு, மாநில தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் உதவிகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்பட வேண்டும். கரோனா இன்னமும் கட்டுக்குள் வராத நிலையில், இந்தச் சாதனங்களுக்கான தேவையும் அதிகமாகவே இருக்கிறது. இதுபோன்ற தருணங்களில் இன்னும் அதிகமான நிறுவனங்கள் மக்கள் சேவையில் ஈடுபட முன்வர வேண்டும். இதன் மூலம் தங்கள் வருவாய்க்கான உத்தரவாதத்தையும் நிறுவனங்கள் உறுதிசெய்துகொள்ளலாம்.

மேலும், கார்ப்பரேட் சமூகப் பொறுப்பைக் கொண்டுள்ள தனியார் நிறுவனங்கள் பெயரளவில் அல்லாமல் அர்ப்பணிப்புடன் இதற்கான பணிகளை முன்னெடுக்கலாம். தொழுநோய், ஊட்டச்சத்துக் குறைபாடு என சுகாதாரம் சார்ந்த சிக்கல்களைக் களைய டாடா போன்ற முன்னோடி நிறுவனங்கள் அளித்துவரும் பங்களிப்பை பிற தனியார் நிறுவனங்களும் பின்பற்றலாம். அரசு, தனியார், மக்கள் எனும் கூட்டுப் பொறுப்பால்தான் இந்தக் கொடுங்காலத்திலிருந்து நாம் மீண்டு வர முடியும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE