எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
ஊரடங்கு, வீடடங்கு என நம்மைப் பூட்டிக்கொண்டாலும், கரோனா அரக்கனின் மாயக்கரங்கள் பல வகையிலும் நம்மைத் துரத்தவே செய்கின்றன. வீட்டுக்கு வெளியே உடல்நலனைப் பாதிக்கும் பெருந்தொற்று அபாயம் காத்திருக்கிறது என்றால், அதே பெருந்தொற்று சார்ந்த பல்வேறு மனநல பாதிப்புகள் வீட்டுக்குள் ஊடுருவிவிடுகின்றன. கவலை, சோர்வு, அச்சம், தூக்கமின்மை, மன அழுத்தம், நம்பிக்கையின்மை, விரக்தி என நம்மை நெரிக்கும் இந்த மாயக்கரங்களை அறிந்துகொள்வதும் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் அவசியமாகிறது.
துயரம் பரிமாறும் ‘நியூ நார்மல்’
‘நியூ நார்மல்’ நியதிகளுக்கு கோவிட் முதல் அலையே நம்மைத் தயார்செய்துவிட்டது. ஆனபோதும் அதிகரிக்கும் உயிரிழப்புகளால் இரண்டாம் அலையில் இந்த ‘நியூ நார்மல்’ கோர முகம் காட்டி வருகிறது. காலையில் எழுந்ததும் வாட்ஸ்-அப் குழுக்களைத் திறக்கவே தயக்கம் மேலிடுகிறது. ஃபேஸ்புக்கில் எவர் குறித்தேனும் ஒரு பதிவை வாசிக்கத் தொடங்கும்போதே, ‘கடவுளே... இது இரங்கல் பதிவாக இருக்கக்கூடாது’ என மனம் பதறுகிறது. கிஞ்சித்தும் ஊகித்திராத இளம் வயதினரின் இறப்பு தகவல்கள் காய்ச்சிய ஈயமாய் காதில் பாய்கின்றன. எங்கோ ஒரு மூலையில் என கேள்விப்பட்ட அகால மரணங்கள் பக்கத்துத் தெரு, எதிர் வீடு என நெருங்கும்போது மன அழுத்தம் எகிற கதவுகளுக்குள் இறுக்கிக்கொள்கிறோம். மனதைப் பாதிக்கும் இந்தக் கவலைகளே வீட்டினுள் ஊடுருவும் புதிய வகை பிறழ் தொற்றென நம்மைப் பீடித்து உலுக்குகின்றன.