இசை வலம்: தங்கவாளால் தலையை வெட்டிக்கொள்வதா?

By காமதேனு

வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

மண்ணின் மணம், மனித நேயம், காதல், வீரம், பாசம் ஆகியவற்றைப் பாடுவது, விவசாயம் செய்யும் உழவனின் மேன்மையைப் போற்றுவது, காதலித்து ஏமாற்றும் ஆடவனின் சிறுமையைச் சாடுவது... இப்படிப் பலதரப்பட்ட பாடுபொருட்களைப் பாடல்களாக எழுதி அதைக் காணொளிகளாகத் தயாரித்து ‘நாட்படு தேறல்’ எனும் பெயரில் தனது யூடியூப் அலைவரிசையில் வெளியிட்டுவருகிறார் கவிஞர் வைரமுத்து. இந்த முறையில் 100 பாடல்களைக் காணொளி குறும்படங்களாகவே தயாரிக்க திட்டமிட்டிருக்கின்றனர். ஒவ்வொரு பாடலையும் இயக்குவதற்கும் இசையமைப்பதற்கும் பாடுவதற்கும் புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் கவிஞரின் முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும்.

இதுவரை ‘நாட்படு தேறல்’ பகுதியில் எட்டு பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. ‘தமிழ் ஈழக் காற்றே’, ‘அடையாளம் ஏராளம்’, ‘நாம் நடந்தா’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘இந்த இரவு’, ‘நாக்கு சிவந்தவரே’ என்று ஒவ்வொன்றும் ஒவ்வொறு விதமாக ரசனையைத் தூண்டுகின்றன. அண்மையில் வெளிவந்திருக்கும் ‘என் காதலா’ பாடலை ரகுநந்தனின் இசையில் ஷிநிஷா மிகவும் இனிமையாக பாடியிருக்கிறார். இனிமை சொட்டும் இந்தப் பாடலின் உள்ளடக்கம் இனிமையானதாக இல்லை என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்!

இலக்கியத்தில் ஒரு வகைமையாக எடுத்தாளப்பட்ட பொருந்தாக் காதல், பொருந்தாக் காமம் என்னும் வகைமையில் ‘என் காதலா’ பாடலை எழுதியிருக்கிறார் கவிஞர். சுருக்கமாக எல்லோருக்கும் புரியும்படி சொல்வதானால், திரையில் திருப்புமுனையை ஏற்படுத்திய ‘முதல் மரியாதை’ காதல்! ஆனால் அந்தத் திரைப்படத்தில் வெளிப்பட்டது கண்ணியமான காதல். இதில் அப்பட்டமாகப் பாடுபொருளாகியிருப்பது எதிர் பாலினக் கவர்ச்சி. நாட்டில் பெண் குழந்தைகள் படும் அவலத்தைப் பார்த்து பதைபதைக்கும் உள்ளத்தோடு இருப்பவர்களை ஆற்றுப்படுத்துவதுதான் படைப்பின் நோக்கமாக இருக்க வேண்டும். மாறாக, இந்தப் பாடுபொருளில் நாயகியாக ஒரு பள்ளி மாணவியைக் காட்டியிருப்பது பெரும் நெருடல். பாடலுக்கான காட்சிப்படுத்தலும் மிகவும் செயற்கையாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE