வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
சமூக வலைதள உலகத்தில் அரசியல், சமூக ரீதியிலான எதிர்மறைக் கருத்துகளும், அவதூறுகளும், வன்முறையைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுக்களும், வதந்திகளும், ஆபாசக் குப்பைகளும் குவிந்துகிடக்கின்றன. மறுபுறம் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள், புதிய திறமைசாலிகளின் அறிமுகங்கள், பெருந்தொற்று, இயற்கைச் சீற்றங்கள் போன்ற பேரிடர்களுக்கிடையே தடைபடாத தகவல் தொடர்பு, பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை ஒருங்கிணைத்தல் என்பன உள்ளிட்ட நன்மைகளும் சாத்தியமாகின்றன. இப்படி நன்மையும் தீமையுமாக, உண்மையும் பொய்யுமாகக் கலந்து விரவிக்கிடக்கும் சமூக வலைதளங்களுக்கு இந்தியாவில் கடிவாளம் போடும் முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன. இது தேசநலனுக்கு ஆதரவானதா, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதா எனும் விவாதமும் தொடங்கியிருக்கிறது.
ட்விட்டர் அலுவலகத்தில் டெல்லி போலீஸ்
மே 24-ம் தேதி இரவு, டெல்லியின் லாடு சராய் பகுதியில் உள்ள ட்விட்டர் அலுவலகத்திலும், ஹரியாணாவின் குருகிராமில் இயங்கிவரும் ட்விட்டர் அலுவலகத்திலும் டெல்லி சிறப்புப் படைப் போலீஸார் குவிந்தது உலகமெங்கும் கவனத்தை ஈர்த்தது (டெல்லி காவல் துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது கவனிக்கத்தக்கது). ‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘தி கார்டியன், ‘அல் ஜஸீரா’ என சர்வதேச ஊடகங்களிலும் இந்தச் செய்தி எதிரொலித்தது.