செயற்கை நுண்ணறிவு பல திசைகளில் கிளை பரப்பி வளர்ந்துகொண்டிருந்தாலும், அதன் ஆதாரமாக இருக்கும் அம்சங்களில், கணிதமும் தர்க்கமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, நிகழ்தகவு எனும் கணிதப் பிரிவு சார்ந்த கோட்பாடுகள் பலவிதமான செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடுகளில் மையமாக இருக்கின்றன.
நிகழ்தகவு என்பது கணிப்புடன் நெருக்கமான தொடர்புகொண்டது. ஒரு நிகழ்வு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் கணிதவியல் அடிப்படையில் விளக்குவதாக நிகழ்தகவு அமைகிறது. நாணயத்தைச் சுண்டிப் போட்டு வரும் முடிவு தொடங்கி, பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கமான போக்கு வரை, நிகழ்தகவு சார்ந்த கோட்பாடுகளின் தாக்கத்தைப் பார்க்கலாம். பங்குச்சந்தை கணிப்பில் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தைப் பார்க்கும்போது இதைத் தனியே பார்க்கலாம் என்பதால் இப்போதைக்கு, வங்கித் துறைக்குத் திரும்புவோம். அந்த வகையில் லூயிஸ் பேச்லியரிடமிருந்தே தொடரலாம்.
ஊகக் கோட்பாடு
காசு, பணம், கொடுக்கல் வாங்கல், முதலீடு, வட்டி பலன் என வங்கித் துறையின் எல்லா அம்சங்களிலும் எண்கள் பிரதானமாக இருப்பதால், வங்கிகளில் கணிதப் பயன்பாட்டைப் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால், கூட்டல், கழித்தல் போன்ற அடிப்படைச் செயல்பாடுகளைக் கடந்து உயர் கணிதத்தை நிதித் துறையில் பயன்படுத்தலாம் என்பதை முதலில் உணர்த்திய மேதைகளில் ஒருவராக பேச்லியர் அமைகிறார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பேச்லியர், கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஊகக் கோட்பாடு எனும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.
பங்குகளின் போக்கைக் கணிதத்தின் உதவியோடு கணிப்பதற்கான முதல் ஆய்வு முயற்சிகளில் ஒன்றாக இது அமைந்தது. இந்தக் கட்டுரை வெளியான காலத்தில், அவரது கருத்து பரவலாக ஏற்கப்படவில்லை. 50 ஆண்டுகளுக்கு பிறகே நிதித் துறை வல்லுநர்கள் இந்தக் கோட்பாட்டை முக்கியமாகக் கொண்டு செயல்படத் தொடங்கினர். ஏறக்குறைய செயற்கை நுண்ணறிவு எனும் துறையின் தொடக்கத்தோடு இது ஒத்துப்போவது தற்செயலானது அல்ல.
புள்ளியியல் சார்ந்த மாதிரிகளை உருவாக்கி கணிப்பில் ஈடுபடுவது எனும் ஆரம்ப கால நிதித் துறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளுக்கான அடிப்படையாகவும் இது அமைந்தது. இதன் தொடர்ச்சியாக, 1960-களில் பேயிசிய புள்ளியியல் (Bayesian statistics) எழுச்சி பெற்றது. புள்ளியியலை அடிப்படையாகக் கொண்டு நிகழ்தகவின் உதவியோடு, தகவல் சார்ந்த முடிவுகளை எடுக்க பேயிசிய கோட்பாடு பயன்படுத்தப்பட்டது. ராபர்ட் ஸ்லைபர் (Robert Schlaifer) என்பவர் இந்தப் பிரிவில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
கணினியின் வளர்ச்சி
இந்தக் காலகட்டத்தில் கணினி வளர்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியிருந்ததைக் கவனிக்க வேண்டும். ஆரம்பத்தில் ஆய்வு நோக்கிலேயே பிரதானமாகப் பயன்படுத்தப்பட்ட கணினிகள் நடைமுறை பலன் மிக்கதாக உருவாக்கப்பட்ட நிலையில், அவை முதலில் பயன்படுத்தப்பட்ட துறைகளில் வங்கித் துறை முதன்மையாக இருந்தது. எண்களின் அடிப்படையில் இயங்கியதால் இதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
கணக்கு வழக்குகளைக் கையாள்வது, காசோலைகளை பைசல் செய்வது உள்ளிட்ட வங்கிப் பணிகள் கணினிமயமாகத் தொடங்கின. இதனிடையே பணப் பட்டுவாடாவுக்கான ஏடிஎம் இயந்திர வசதியும், பணப் பரிவர்த்தனைக்கான கிரெடிட் கார்டு வசதியும் அறிமுகமாகியிருந்தன. ஆக, ஒரு பக்கம், செயற்கை நுண்ணறிவு துறை வளர்ந்துகொண்டிருந்த நிலையில், அதன் பயன்பாட்டுக்கு வங்கித் துறையும் தன்னைத் தயார் செய்துகொண்டிருந்தது.
வல்லுநர் அமைப்பு
இந்த மாற்றங்களும் முன்னேற்றங்களும் பெரும்பாலும் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் மையமாகக் கொண்டு நிகழ்ந்த நிலையில், 1980-களில் ஜப்பானும் அதில் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியது. அப்போது மின்னணுவியலில் முன்னணியில் இருந்த ஜப்பான் கணினித் துறையிலும் தன்னால் முன்னிலை வகிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பியது. இதற்கேற்ப ஜப்பானிய அரசும், ஐந்தாம் தலைமுறை கணினி சார்ந்த ஆய்வை முடுக்கிவிட்டது.
இந்தக் காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு துறையில் செயற்கை நியூரான்கள் வலைப்பின்னல் மற்றும் மனித முடிவெடுத்தல் போலவே செயல்படக்கூடிய அமைப்புகளை உருவாக்கும் ‘ஃபஸி லாஜிக்’ (Fuzzy logic) என்று அழைக்கப்படும் தெளிவில்லாத் தர்க்கம் போன்ற நுட்பங்கள் பிரபலமானாலும், ‘எக்ஸ்பர்ட் சிஸ்டம்ஸ்’ என குறிப்பிடப்படும் வல்லுநர் அமைப்புகள் நுட்பமும் தனிக் கவனம் பெற்றது. அறிவு சார்ந்த அமைப்பு எனக் கருதப்படும் இந்த நுட்பம், மருத்துவத் துறை உள்ளிட்டவற்றில் கண்ணுக்குத் தெரியாத மூலக்கூறு வடிவங்களைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டதோடு, நிதித் துறையிலும் முக்கியமான பயன்பாட்டைக் கொண்டிருந்தது. உதாரணத்துக்கு, அமெரிக்க வர்த்தக நிறுவனமான டூபாண்ட் தனது நிதிச் செயல்பாடுகளில் வல்லுநர் அமைப்பைப் பிரதானமாகப் பயன்படுத்தி, பெருமளவு செலவை மிச்சம் செய்தது.
இதே போல பங்குகள் பரிவர்த்தனை கணிப்புக்கான ‘புரோடிரேடர்’ எனும் வல்லுநர் அமைப்பும் உருவாக்கப்பட்டது. தவிர, வாடிக்கையாளர்களுக்கான நிதித் திட்டமிடலை உருவாக்கித் தரக்கூடிய ‘பிளான் பவர்’ (Plan Power) எனும் அமைப்பும் ‘அபெக்ஸ்’ எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. வருமானவரி தாக்கல் சேவை, காப்பீட்டு ஆலோசனைகள் போன்றவற்றிலும் இந்த மென்பொருள் அமைப்புகள் பயன்பட்டன.
கண்ணுக்குத் தெரியாத வளர்ச்சி
இவை எல்லாம் பெரும்பாலும் வெகுமக்களின் பார்வைக்கு வராமல் வங்கித் துறையில் நிகழ்ந்த மாற்றங்கள். 1980-களில், இந்தச் செயல்பாடுகளுக்கு வலு சேர்க்கும் வகையில், வங்கிகள் வேகமாகக் கணினிமயமாகிக் கொண்டிருந்தன. இந்தியாவிலும் இந்த மாற்றம் வேகமாகவே நிகழ்ந்தது. வங்கிக் கிளைகள் கணினி வலைப்பின்னலால் இணைக்கப்பட்டு மைய வங்கிச்சேவைகள் பரவலாகத் தொடங்கிய நிலையில், ஆன்லைன் சேவைக்கும் வங்கிகள் தயாராகிக் கொண்டிருந்தன. இணைய வசதி பிரபலமாகி, அதன் முக்கிய அங்கமான வைய விரிவு வலை 1990-களில் அறிமுகமான நிலையில், ஆன்லைன் செயல்பாடுகளும், பரிவர்த்தனைகளும் அதிகரித்தன. வங்கித் துறையில் செயற்கை நுண்ணறிவின் தேவை இன்றிமையாததாக மாறிய காலமாகவும் இதைக் கருதலாம். மோசடி தடுப்பில் தொடங்கி, வாடிக்கையாளர் சேவை வரை வங்கித் துறையில் இதன் தாக்கத்தைத் தொடர்ந்து பார்க்கலாம்.
டேப்லெட்டின் வருகை
டேப்லெட் என்றதும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் சாதனம்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், ஐபேடுக்கு முன்னதாகவே, 1989-ல் கிரிட்பேட் எனும் டேப்லெட் கணினி அறிமுகமானது. கிரிட் சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய அந்தப் பலகைக் கணினியை சாம்சங் நிறுவனம் தயாரித்தது. காகிதத்தில் பேனாவால் எழுதுவது போல, கணினி திரை மீது ஸ்டைலஸ் பேனாவால் எழுதி அதை இயக்கக் கூடிய அந்தச் சாதனம், வங்கி ஊழியர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டது. வங்கிப் பணிகளை அங்கும் இங்கும் நடமாடியபடி மேலும் சிறப்பாக மேற்கொள்ள அது வழிசெய்தது.
(தொடரும்)