இசை வலம்: இசை வடிவில் ஒரு விடிவெள்ளி

By காமதேனு

வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

கவிஞர், சமூகச் செயற்பாட்டாளர், ஊடகவியலாளர், அரங்கக் கலைஞர் இப்படி பல பரிமாணங்கள் கொண்ட கலைஞர் அமெரிக்காவில் வாழ்ந்த மாயா ஏஞ்சலோ. அவரின் புகழ்பெற்ற கவிதையான ‘அண்ட் ஸ்டில் ஐ ரைஸ்’ கவிதைக்கேற்ற நடன அசைவுகளைப் பார்ப்பவர்கள் சிலிர்த்துப் போகும் அளவுக்கு அளித்து ‘ரைஸ்’ எனும் தலைப்பில் யூடியூபில் பதிவேற்றியிருக்கிறார் நடிகையும் நடனக் கலைஞருமான ரீமா கல்லிங்கல். மாயா ஏஞ்சலோவின் குரலில் ஒலிக்கும் கவிதை வரிகளில் தெறிக்கிறது யுகப் புரட்சி!

“கறுப்பினப் போராளியாகவும் பெண்ணியவாதியாகவும் சமூகச் செயற்பாட்டாளராகவும் திகழ்ந்த மாயா ஏஞ்சலோவின் வரிகள் நான் துவளும்போதெல்லாம் என்னை நம்பிக்கையோடு எழுந்து நிற்கவைத்திருக்கின்றன. 2014 மே 28-ல் மறைந்த அந்தப் போராளிக்கு ஓர் எளிய அஞ்சலியாகவே கலை உலகுக்கு இதை அளித்திருக்கிறேன். ‘உன்னுடைய சில முயற்சிகள் தோற்றிருக்கலாம்; உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது’ எனும் அவரது கவிதைகளைப் படித்து எனக்குள் உதித்த எண்ணங்களுக்குக் காட்சி வடிவம் கொடுத்துள்ளேன்” என்கிறார் ரீமா. பாடல் காட்சியை வடிவமைத்த சிந்தனை அவருடையதுதான்.

நடனத்தோடு இயக்கத்தையும் நேர்த்தியாகச் செய்திருக்கிறார் பிரதீஷ் ராம்தாஸ். கவிதையின் வரிகளுக்கு ஏற்ற இசையை லாமி வழங்கியிருக்கிறார். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களிலும் ‘ரைஸ்’ பாடல் கவனம் ஈர்க்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE