அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, ஆடுபுலி ஆட்டம், இளைமை ஊஞ்சலாடுகிறது, தப்புத் தாளங்கள் என ரஜினியும் கமலும் தொடக்கம் முதலே இணைந்து நடித்து வந்தனர். கமலுடைய நடிப்புத் திறமையைப் பார்த்து ஆன் தி ஸ்பாட்டில் மனம்விட்டுப் பாராட்ட ரஜினி தயங்கியதே இல்லை. தன்னைவிட வயதில் குறைந்தவர் என்று பார்க்காமல், சிறுவயது முதலே நடித்துவரும் சிறந்த கலைஞர், நடிப்புத்துறையில் சீனியர் என்பதை மனதில் இருத்தி கமலை மதித்தார் ரஜினி. கமலிடம் அவர் அவ்வப்போது ஆலோசனைகளும் கேட்டதுண்டு. அப்போதெல்லாம், ‘நீங்க் இன்ஸ்டிடியூட் ஆள்... நீங்க படிச்சது பெரிய ஜாம்பவான்கள்கிட்ட... உங்களுக்கென்று தனி பாணி இருக்கு. இதுல இடையில எனக்கு எதுக்கு வாத்தியார் வேலை பிரதர்” என்று அக்கறையோடு ரஜினியைப் பாராட்டுவதை கமலும் வழக்கமாக வைத்திருந்தார். இந்த நெருக்கம் இருவரது நட்பை இன்னும் பலப்படுத்தியது. தனிப்பட்ட குடும்ப விஷயங்களை பகிர்ந்துகொள்ளும், பரஸ்பரம் உதவிக்கொள்ளும் அளவுக்கு நட்பின் நெருக்கம் வளர்ந்து வந்தது.
பரஸ்பரம் கைகொடுத்த நண்பர்கள்
‘முள்ளும் மலரும்’ படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துவிட்டது. எடிட்டிங் முடிந்து படத்தின் ‘ஃபைனல் ரஷ்’ போட்டுப் பார்த்த இயக்குநர் மகேந்திரனுக்கு பெரும் மனக்குறை. ‘செந்தாழம் பூவில்’ பாடல் காட்சி தொடங்குவதற்கு முன், ஷோபாவும் அவரது தோழிப் பெண்களும் சரத்பாபுவின் ஜீப்பில் ஏன் ஏறினார்கள் என்பதற்கான ‘லீட் சீன்’ இல்லாமல் காட்சி ‘ஜம்ப்’ அடித்தது. அந்த ஒரு காட்சியைப் படம்பிடித்துவிட்டால், படம் நிறைவாகிவிடும். சரத்பாபுவுக்கும் ஷோபாவுக்கும் முதல் பரிச்சயம் ஏற்படும் காட்சியாகவும் அது இருக்கும். இதை, படத்தின் தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் எடுத்துக் கூறி, “ஒரே ஒரு நாள் மட்டும் பேச் ஒர்க் படப்பிடிப்பு நடத்தவேண்டும்” என்று கேட்டார் மகேந்திரன். ஆனால், “இனி ஒரு பைசா கூட செலவு செய்யமுடியாது” என்று தயாரிப்பாளர் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்த ரஜினி, இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படப்பிடிப்பில் கமலின் காதில் விஷயத்தைப் போட்டார். ரஜினி, கமலிடம் இதைச் சொல்ல ஒரு காரணம் இருந்தது. வேணு செட்டியாரிடம் அந்தப் படத்தை இயக்க, மகேந்திரனை சிபாரிசு செய்தவரே கமல்தான். தயாரிப்பாளர் கறாராக இருந்த நிலையில், ‘அந்த ஒருநாள் படப்பிடிப்பு’க்கான செலவை கமல் ஏற்றுக்கொள்ள, அந்தக் காட்சிப் படம்பிடிக்கப்பட்டு வெளியானது ‘முள்ளும் மலரும்’. ரஜினி எனும் அட்டகாச நடிகரையும் மகேந்திரன் எனும் உன்னதப் படைப்பாளியையும் தமிழகத்துக்கு அடையாளம் காட்டியது.
ஒரு போட்டியாளராக உருவாகிவிட்ட ரஜினியின் படத்துக்கு கமல் உதவிய இந்தச் சம்பவம் அப்போது யாருக்கும் தெரியாது. அதேபோல், தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் படித்து தங்கப் பதக்கம் பெற்ற மாணவரான ருத்ரய்யா, பாலசந்தரின் கலாகேந்திராவுக்கு வருவதும் போவதுமாக இருப்பார். கலாகேந்திராவின் படங்களில் பணிபுரிந்துகொண்டே, சத்யஜித் ராய் மாதிரி மாற்று சினிமா எடுக்க வேண்டும் என்கிற கனவுடன் இருந்த அனந்து, ஆர்.சி.சக்தி, கமல்ஹாசன் ஆகியோரிடம் நட்பை வளர்த்துக்கொண்டிருந்தார் ருத்ரய்யா. கமலும் ரஜினியும் அப்போது பிஸியான நடிகர்கள். அப்போது மிகக் குறைந்த முதலீட்டில் ‘அவள் அப்படித்தான்’ படத்தை ருத்ரய்யா தொடங்கினார்.
அப்போது ருத்ரய்யாவுக்கு உதவும்விதமாக ஸ்ரீப்ரியா, ரஜினி இருவருக்கும் ‘அவள் அப்படித்தான்’ கதையைச் சொல்லி, அதில் நேரம் அமையும்போது நடித்துக்கொடுத்து உதவும்படிக் கேட்டார் கமல். சம்பளம் பற்றி எதுவும் பேசாமல், “நீங்க சொன்னா சரி கமல்” என்று ஒப்புக்கொண்டார் ரஜினி. கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா மூவரும் மற்ற படங்களில் நடித்துக்கொண்டே அவ்வப்போது 2 மணிநேரம் ஒதுக்கி ‘அவள் அப்படித்தான்’ படத்தில் ஒப்பனை இல்லாமல் நடித்துக் கொடுத்தார்கள். எந்தப் படப்பிடிப்பிலிருந்து கிளம்பி வருகிறார்களோ... அப்போது அவர்கள் அணிந்திருந்த உடையிலேயே நடித்தார்கள்.
ஒருமுறை, ‘தாய் மீது சத்தியம்’ முதல்நாள் படப்பிடிப்பிலிருந்து அப்படியே வந்த ரஜினியிடம், “அந்த கௌபாய் தொப்பியை எடுத்துட்டு வரலியா?” என்று பத்திரிகை விளம்பரம் பார்த்துவிட்டுக் கேட்டு சிரிக்க வைத்தார் கமல். படம் முடிந்து டப்பிங் பேசப்பட்டபோது தனக்குக் கொடுக்கப்பட்ட கவுரவமான ஊதியத்தை வாங்க மறுத்துவிட்டார் ரஜினி. அது கமல் எனும் நண்பருக்காகவும் ருத்ரய்யா என்கிற இன்ஸ்டிடியூட் மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் குழுவுக்கும் ரஜினி தயங்காமல் செய்த கைமாறு.
‘அவள் அப்படித்தான்’ வெற்றிகரமாக ஓடாவிட்டாலும் கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா ஆகிய மூவரின் திரை வாழ்க்கையிலும் நவீனத்தின், மீறலின் அடையாளமாக அந்தப் படம் மாறிப்போனது. வண்ணத்துக்கு மாறியிருந்த தமிழ் சினிமாவில் வழக்கொழிந்த கறுப்பு - வெள்ளையில் உருவானாலும் மனித மனங்களில் கழும்பேறிக் கிடந்த போலித்தனத்தையும் ஆணாதிக்க அழுக்குகளையும் மாற்று சினிமாவுக்கான காட்சி மொழியில் கழுவ முயற்சித்தது. சென்னை வந்திருந்த வங்கத்துப் படைப்பாளி மிருனாள் சென், ‘அவள் அப்படித்தான்’ படத்தைப் பார்த்துவிட்டு மனம் திறந்து பாராட்டியது ஊடகங்களில் செய்தியானது. ஆனால், முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தும் அன்று வணிக சினிமாவுக்கு வெளியே நின்ற படத்தைப் புரிந்துகொள்ளும் சிந்தனைப் போக்கு வெகுஜன ரசிகர்களிடம் இல்லாமல் போனதால் ஒரே நாளில் வெளியான ‘தப்புத் தாளங்கள்’, ‘தாய் மீது சத்தியம்’ படங்களுக்கு குவிந்த கூட்டம் அவள் அப்படித்தானை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அதில் ரஜினிக்கு மிகப்பெரிய வருத்தம்.
தப்பிக்க நினைத்த ரஜினி
‘தாய் மீது சத்தியம்’ வெளியாகி வசூல் அள்ளிக்கொண்டிருக்க.. அடுத்து வந்த ‘ப்ரியா’ படம் அதைவிட மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ரஜினியிடம் எப்படியாவது கால்ஷீட் வாங்கி கல்லா கட்டிவிட வேண்டும் என்று ரஜினிக்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து முண்டியடித்தார்கள் பல தயாரிப்பாளர்கள். ஆனால், ரஜினியிடம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு கால்ஷீட் இல்லை. தன்னை நெருக்கும் தயாரிப்பாளர்களிடமிருந்து தப்பிக்க தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தினார். கேட்கும் சம்பளத்தைக் கொடுக்கத் தயார் என்று அவரை மறுபடியும் முற்றுகையிட்டபோது ரஜினிக்கு கேபியிடமிருந்து அழைப்பு. “என்னப்பா சிவாஜி... எனக்கு கால்ஷீட் வேணுமின்னாலும் 3 வருஷம் காத்திருக்கணும்ன்னு கேள்விப்பட்டேன்” என்றார் கேபி. பதறிய ரஜினி, “உங்களுக்கு அப்படிச் சொல்வேனா?” என்றார்.
அவ்வளவுதான்... கமல் - ரஜினி இணையை வைத்து, இசையை மையமாக்கி, அதில் நகைச்சுவையையும் கலந்து ஒரு வெள்ளி விழா கொண்டாட்டத்தை கொடுத்துவிட வேண்டும் என்று தீர்மானித்தார் கேபி. ஒரு மெல்லிசைக் குழு சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு இசைப் பயணம் செல்வதுபோல் கதையின் களத்தை அமைத்துக்கொண்டால், சிங்கப்பூர், மலேசியாவின் நவீன அழகை திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவர வாய்ப்பாக அமையும் என்று முடிவு செய்தார் கேபி. அதற்காக, எழுத்தாளர் சுஜாதா எழுதிய கதையை மொத்தமாகப் புரட்டிப்போட்டுத் திரைக்கதை அமைத்தார். இளையராஜாவின் இசை ராஜாங்கக் கொடி பறக்கத் தொடங்கியிருந்த வேளையில், எம்எஸ்வி-யை இசையமைக்க வைத்து ‘இதுவொரு தேனிசை மழை’ என்கிற விளம்பரத்துடன் கேபி வெளியிட்ட அந்தப் படம்தான் ‘நினைத்தாலே இனிக்கும்’.
படம் வெளியாகி 30 நாட்கள் வரை அரங்கு நிறைந்த காட்சிகளாக அமளி துமளிப்பட்டன திரையரங்குகள். இதில் ரஜினியின் நகைச்சுவைத் திறமையை நன்கு வெளிப்படுத்தச் செய்திருந்தார் கேபி. ரஜினிக்கு எங்கே சென்றாலும் ஏதாவதொரு பொருளை ‘சுட்டு’ கொண்டுவந்துவிடும் ‘க்ளெப்டோமேனியா’ பிரச்சினை கொண்ட இசை மற்றும் நடனக் கலைஞன் வேடம். அதை நகைச்சுவை ரசம் பூசி நடிப்பில் வெளிப்படுத்திய ரஜினி, இந்தப் படத்துக்குப்பின் இன்னும் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை சந்தடியில்லாமல் திருடிக்கொண்டார்.
அதிநவீன ரஜினி
‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் ரஜினியும் பூர்ணம் விஸ்வநாதனும் வரும் காட்சி, தலைமுறைகள் கடந்தும் நினைவுக்கூரப்படும் ஒன்றாக மாறிப்போனது. அது ரஜினியின் சிகெரெட் ஸ்டைலுக்காகவே கேபி வைத்த காட்சி. “பத்து முறை சிகரெட்டைத் தூக்கிப்போட்டு வாயால் கவ்விப் பிடித்தால் ஒரு டொயோட்டா கார் பரிசு... பத்தில் ஒருமுறை தவறினாலும் சுண்டுவிரலை வெட்டிவிடுவேன்” என்று சவால் விடுப்பார் பூர்ணம் விஸ்வநாதன். அவரிடம் வெளிப்படும் குரூரமும் சிகெரெட்டைத் தூக்கிப்போட்டு பிடிக்க முயலும் ரஜினி சுண்டுவிரலை இழந்துவிடுவோமோ என முகம் முழுக்க பயத்தை படரவிட்ட நடிப்பும் ரசிகர்களால் மறக்கமுடியாத காட்சிகளாகிப் போனது.
அதிநவீன இளைஞனுக்குரிய ரஜினியின் தோற்றமும் அதற்காக நடிப்பில் அவர் காட்டிய வேகமும் ஸ்டைலும் ரஜினியின் புதிய பரிமாணத்தை வெளிக்காட்டின. ‘சம்போ சிவ சம்போ’, ‘நம்ம ஊரு சிங்காரி’ பாடல்களின் வெற்றி ரஜினியை மாஸ் படங்களை நோக்கி நகர வைத்தது.
இந்த சமயத்தில் நடிகர் திலகம் சிவாஜியுடன் முதன் முதலாக இணைந்து நடிக்க ரஜினிக்கு அழைப்பு. அழைத்துப் பேசியது நடிகர் திலகமே என்றால் ரஜினி ஆடிப்போவாரா மாட்டாரா..?
(சரிதம் பேசும்)
படங்கள் உதவி: ஞானம்