கோவையில் உருவான கொரோனா தேவி!- ஆன்மிகமா... விளம்பரமா?

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

ஊரெங்கும் வேப்பிலை தோரணங்கள் கட்டி, மஞ்சள் கரைத்து தெளித்து, குங்குமம் பூசி வழிபட்டபோதெல்லாம் கடவுளாகாத பெருந்தொற்று, ‘கொரோனா தேவி’ என ஒரு சிலை பிரதிஷ்டை செய்து யாகத்தில் வைத்தவுடனே இணையதளங்களில் உலக ட்ரெண்டிங் ஆகிவிட்டது. ‘ஏன், அது பெண் வடிவமாகத்தான் இருக்க வேண்டுமா? ஆண் வடிவில் கொரோனா தேவனாக இருக்கக்கூடாதா?’ என்று வலைப்பதிவர்கள் கலாய்க்கும் அளவுக்கு இது உச்சகட்ட வைரலாகியிருக்கிறது.

சீனாவிலிருந்து வந்த கரோனாவுக்கு சிலை செய்து அம்மனாக்கி வைரல் ஆக்கியவர் காமாட்சிபுரி ஆதீனம் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டார் சிவலிங்கேஸ்வர சுவாமிகள். யார் இந்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள். எங்கே இருக்கிறது அந்த காமாட்சிபுரி ஆதீனம்?

கோவை - திருச்சி சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஒண்டிப்புதூர். இதற்குள்ளிட்ட சிறு கிராமம் காமாட்சிபுரம். இங்கே ஓடும் நொய்யாலாற்றங்கரையில் இருந்த நாகப்புற்றை மையமாக வைத்து லிங்க வழிபாடு நடத்தி வந்தார் பாலகன் ஒருவர். பின்னாளில் அதையே அங்காள பரமேஸ்வரர் என்று சொல்லி, அதற்கு சிறிய கோயிலைக் கட்டி, சின்னதாக ஒரு மடமும் நிறுவி தன்னை சிவலிங்கேஸ்வர சுவாமிகள் என்றும், அந்த மடத்துக்குத் தான்தான் காமாட்சிபுரி ஆதீனம் என்றும் அறிவித்துக்கொண்டார்.
1991 மற்றும் 2001-க்குப் பிறகு ஜெயலலிதா ஆட்சி செழித்து, அதில் சசிகலா குடும்பம் தழைத்த காலங்களில் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி கொண்டாடப்படும் நாளன்று, அங்கே யார் இருக்கிறார்களோ இல்லையோ இந்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள் நிச்சயம் இருப்பார். ஜெயலலிதாவுக்கும், அவர் பின்னால் நிற்கும் சசிகலாவுக்கும் விபூதி, சந்தனம், குங்குமம் பிரசாதம் தரும் ஜடைமுடியுடன் கூடிய சாமியாராக இவரைப் பார்த்து காமாட்சிபுரம் உள்ளூர்வாசிகள் ஆச்சரியப்பட்டார்கள். ஒருகட்டத்தில், பல நூறாண்டுகள் பெருமைமிக்க ஆதீனங்கள், மடாதிபதிகள் கூடும் கூட்டங்களிலும், கோயில் வைபவங்களிலும் சிவலிங்கேஸ்வர சுவாமி களுக்கும் முக்கிய இடம் கிடைத்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவரின் ஆன்மிகச் சேவையும் தொடர்ந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE