வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக, மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட பின்னரும், அக்கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையிலான மோதல் முற்றுப்பெறவில்லை. மே 20-ல் பிரதமர் மோடி நடத்திய காணொலிக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மாநில முதல்வர்கள் கைப்பாவைகளைப் போல் அமரவைக்கப்படுகிறார்கள். பேசவே அனுமதிக்கப்படுவதில்லை” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியது இரு தரப்புக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்திருப்பதை அழுத்தமாக உணர்த்தியிருக்கிறது.
வெடித்துச் சீறிய தீதி
“மாநில முதல்வர்களை அழைத்துவிட்டு, மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளிடம் மட்டும் மோடி பேசிக்கொண்டிருந்தது ஏன்?” என்பது மம்தா தரப்பின் கோபம். ஆனால், “ஊரகப் பகுதிகளில் கரோனா பரவல் அதிகமாக இருக்கும் சூழலில், முதல்வர்களின் முன்னிலையில் மாவட்ட நீதிபதிகளிடம் பிரதமர் நேரடியாக உரையாற்றுவதில் என்ன தவறு?” என்பது பாஜக ஆதரவாளர்களின் வாதம். உண்மையில், பிப்ரவரியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் மோடி நடத்திய காணொலிக் கூட்டங்கள் எதிலும் மம்தா பங்கேற்கவில்லை.