அண்ணா சாலையில், பிளாசா திரையரங்க வாசலில் தாணு அமைத்திருந்த 35 அடி உயர ரஜினி கட்-அவுட்டை தலைநகர் சென்னையே அண்ணாந்து பார்த்தது. ‘பைரவி’ எதிர்பாராத வெற்றியையும் வசூலையும் அள்ளியது. கட்-அவுட் வைத்த தாணு ‘சூப்பர் ஸ்டார்’ என்று சுவரொட்டியில் அச்சிட்டு ஒட்டியது பொய்யாகவில்லை.
“எம்ஜிஆர், சிவாஜியை விட இவரு பெரிய நடிகரா?” என்று ரஜினியின் காதுபட எழுந்த முணுமுணுப்புகள் அவரைத் தொந்தரவு செய்தன. அப்போது கலைஞானத்தை அழைத்த ரஜினி, “ஸ்டைல் மன்னன்னு சொல்றதே எனக்குப் பிடிக்கல... என்னோட நேச்சரை எல்லாரும் ஸ்டைல்ன்னு சொல்றாங்க. இப்போ சூப்பர் ஸ்டார்..! எதுக்கு சார் எனக்கு இந்தத் தேவையில்லாத சுமை? இனிமே ‘சூப்பர் ஸ்டார்’னு போஸ்டர் அடிக்க வேண்டாம்னு நம்ம சென்னை டிஸ்ட்ரிப்யூட்டர்கிட்ட சொல்லிடுங்க ப்ளீஸ்... எம்ஜிஆர், சிவாஜி நடிப்பைப் பார்த்துதான் நடிக்கவே ஆசைப்பட்டேன். நான் வளர்ற நடிகன். எனக்கு இந்த பட்டமெல்லாம் வேண்டாம். கொஞ்சம் கண்டிப்பா சொல்லிடுங்க” என்றார்.
தாணுவின் தெளிவு
ரஜினியின் மனதறிந்துகொண்ட கலைஞானம், படத்தின் இயக்குநர் பாஸ்கரையும் அழைத்துக் கொண்டு போய் தாணுவைச் சந்தித்தார். “இதுவரை அடித்த போஸ்டர்கள் இருந்தால் விட்டுவிடுங்கள். ஆனா, செகண்ட் ரன்னுக்கு போஸ்டர் அடிக்கிறதா இருந்தா அதுல ‘சூப்பர் ஸ்டார்’ன்னு தயவு செஞ்சு போடாதீங்க. ரஜினி கட்டாயமா சொல்லச் சொன்னார். தப்பா எடுத்துக்க வேணாம்..” என்று இருவரும் பக்குவமாக வேண்டுகோள் விடுத்தார்கள்.
ஆனால், தாணு கேட்கிறமாதிரியில்லை. “அண்ணே... வசூலைப் பார்த்தீங்கள்ல... இப்டி பப்ளிசிட்டி பண்ணக்கூடாதுன்னு சொன்னா எப்படியண்ணே... பணம் போட்டு படம் வாங்குறோம். ரஜினிக்கு இப்போ தமிழ்ல மட்டுமில்லேண்ணே... தெலுங்கு, கன்னடத்துலயும் வசூல் அள்ளுது பார்த்தீங்கள்ல... அதை மனசுல வச்சுத்தான் போஸ்டர் போட்டேன்.. பட்டம் வேண்டாம்ன்னு சொல்றது அவரோட தன்னடக்கம். ரிப்பீட் ஆடியன்ஸ் என்ன சொல்லி தியேட்டர்ல கத்துறாண்ணு போய் பாருங்க... ‘சூப்பர் ஸ்டா’ருன்னு எஸ்டாப்ளிஷ் ஆகிடுச்சுண்ணே... நானே நினைச்சாலும் இனிமே இதைத் தடுக்கமுடியாது. ரஜினி சாரை நேரா பார்க்கும்போது நானே விஷயத்தைச் சொல்லிடுறேன். ஒரு விஷயத்தை மனசுல வெச்சுக்கோங்க... எம்ஜிஆருக்கு எப்படி ‘மக்கள் திலகமோ’, சிவாஜிக்கு எப்படி ‘நடிகர் திலகமோ’ அப்படித்தான் ரஜினிக்கு ‘சூப்பர் ஸ்டார்’” என்று இருவருடைய வாயையும் அடைத்துவிட்டார் தாணு. அதுமட்டுமல்ல... 50 நாட்கள் முடிந்து புறநகர் திரையரங்குகளில் ‘பைரவி’ படம் ‘செகண்ட் ரன்’ ஓடியபோது ‘கிரேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும்’ என்று அச்சிட்ட போஸ்டர்களையும் ஒட்டினார் தாணு.
எம்ஜிஆருக்குப் பின் ரஜினி...
தமிழ் சினிமாவில் ‘ட்ரெண்ட் செட்டர்’ என்று பெயரெடுத்த சி.வி.ஸ்ரீதர், எம்ஜிஆரை வைத்து ‘உரிமைக் குரல்’ எனும் 100 நாள் படம் கொடுத்தார். எம்ஜிஆர் கட்சி தொடங்கி தேர்தல் பரப்புரையில் ஈடுபட இருந்த நிலையில், அரசியல் பரப்புரையின் ஒரு அங்கமாக ‘அண்ணா நீ என் தெய்வம்’ என்கிற படத்தைத் தொடங்கி, 5 ஆயிரம் அடிகள் எடுக்கப்பட்ட நிலையில், அது கைவிடப்பட்டது. அதற்கு ஈடுசெய்யும் விதத்தில் அவர் முதலமைச்சர் நாற்காலியில் அமரும் முன் ஸ்ரீதருக்கு நடித்துக்கொடுத்த படம்தான் ‘மீனவ நண்பன்’. அதுவும் அதிரி புதிரி ஹிட். எம்ஜிஆரை வைத்து இரண்டு ஹிட்களைக் கொடுத்த ஸ்ரீதரின் அடுத்த தேர்வாக இருந்தவர்கள். கலைஞானி கமலும் சூப்பர் ஸ்டார் ரஜினியும்.
கமல் - ரஜினி இருவருக்கும் சமமான வாய்ப்பை அளித்த படம் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’. ரஜினியை செல்வச் செழிப்பும் தோரணையும் நவீன வாழ்க்கை முறையும் கொண்ட இளைஞனாகக் காட்டிய முதல் படம்.
25 வாரம் ஓடி, வெள்ளி விழா கொண்டாடிய இந்தப் படம்தான் எம்ஜிஆர் - சிவாஜிக்குப் பின், கமல் - ரஜினி என்கிற நட்சத்திர இணையைத் தமிழ் ரசிகர்களுக்குள் ஆழமாகப் பதியம் போட்டது. தனித்தனியாக நடித்தால் மட்டுமல்ல... கமலும் ரஜினியும் இணைந்து நடித்தாலும் அது சூப்பர் ஹிட் ஆகும் என்கிற சென்டிமென்டும் எதிர்பார்ப்பும் உருவாகப் பாதை போட்டுக் கொடுத்தது.
ரஜினி தன்னுடைய தனித்துவமான நடிப்பு பாணியை, வேகமாக வசனம் பேசுவது, உடல்மொழியில் துடிப்புடன் சுறுசுறுவென கொஞ்சம் வேகத்தை கூட்டுவது என்று அமைத்துக் கொண்டார். என்றாலும் அந்தப் பாணியில் ரஜினியிடம் காந்தமாக இழையோடும் இயல்புத் தன்மை ரசிகர்களை கட்டிப்போட்டது. ஆனால், ரஜினிக்கு தொடக்கத்தில் அமைந்த வில்லன் மற்றும் ஆக்ஷன் வேடங்கள் அவரது இயல்பான நடிப்பு பாணியை அவ்வளவாக வெளிப்படுத்தத் தடையாக இருந்தன என்றே சொல்லவேண்டும். இந்தத் தருணத்தில் ரஜினி எனும் நடிப்புக் கலைஞனுக்கு பெரும் வரமாக அமைந்த படம்தான் ‘முள்ளும் மலரும்.
காளி எனும் அடையாளம்
நடிகர் திலகம் சிவாஜி - நடிகையர் திலகம் சாவித்திரி ஆகிய இருவருக்கும் அண்ணன் - தங்கை பாசத்துக்கு உரைகல்லாக அமைந்த படம் ‘பாசமலர்’. அந்தப் படத்துக்குப் பிறகு அண்ணன் - தங்கை பாசத்தின் அடுத்த தலைமுறை அத்தியாயமாக, அழகான காட்டுக் குறிஞ்சி மலர்போல தமிழ் சினிமாவில் அபூர்வமாக மலர்ந்த படம் தான் ‘முள்ளும் மலரும்’. நடிகர் திலகத்தின் திரைப் பயணத்தில் மைல்கல்லாக அமைந்த ‘தங்கப் பதக்கம்’ படத்துக்கு வசனம் எழுதியவர் ஜான் மகேந்திரன். துக்ளக்கில் பணியாற்றிய பத்திரிகையாளரான இவர் முதன் முதலாக இயக்கிய படம்தான் ‘முள்ளும் மலரும்’.
புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பயின்ற பாலுமகேந்திராதான் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு. இளையராஜாவின் இசையில் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர். படம் வெளியாகி ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ பாடல் தமிழகமெங்கும் காற்றில் தவழ்ந்தது. பாசமும் பிடிவாதமும் மிக்க ‘காளி’யாக ரஜினி உருமாறியிருந்தார். ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே...’ என்கிற பாடல் ரஜினியை காளி எனும் அடையாளமாக மாற்றியது. படம் வெள்ளிவிழா நோக்கிப் பிய்த்துக் கொண்டு ஓடியது.
‘முள்ளும் மலரும்’ படத்தில் ரஜினியின் நடிப்பைப் பார்த்து வியந்துபோன அவருடைய ஆசான் பாலசந்தர், ‘ரஜினி எனும் சிறந்த நடிப்புக் கலைஞனுக்கு...’ என்று குறிப்பிட்டு பாராட்டுக் கடிதம் எழுதினார். ‘உன்னுடைய இயல்பான நடிப்புத் திறனை இன்னும் இன்னும் நான் பயன்படுத்திக்கொள்ளக் காத்திருக்கிறேன்’ என்று அவர் எழுதிய கடிதத்தைத் தனக்குக் கிடைத்த விருதாக எண்ணி, அதை ஃப்ரேம் போட்டு தனது வீட்டின் பூஜை அறையில் மாட்டி வைத்தார் ரஜினி. ‘முள்ளும் மலரும்’ வசூலில் மட்டுமல்ல, பாராட்டுகளையும் விருதுகளையும் கூட அள்ளிக்கொண்டு வந்தது. தன்னுடைய ஆசான் பாலசந்தரின் அழைப்பை ஏற்று அவரது இயக்கத்தில் மீண்டும் நடிக்கப் புறப்பட்டார் ரஜினி. அந்தப் படம்தான் ‘கெட்டவனாகத் தெரியும் ஒரு நல்லவன்’ என்கிற கருத்தாக்கத்தில் ரஜினியை கேபி செதுக்கி வார்த்த ‘தப்புத் தாளங்கள்’.
நண்பர்கள் எடுத்த நல்ல முடிவு
மலையாளம் தவிர, மற்ற மூன்று மொழிகளிலும் ரஜினியின் செல்வாக்கு பெருகியிருந்ததைக் கண்ட கேபி, ‘தப்புத் தாளங்கள்’ படத்தை தமிழ், கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் எடுத்தார். பெங்களூருவில் படப்பிடிப்பு. சரிதாவை அழைத்து ரஜினியிடம் அறிமுகம் செய்தார் கேபி. “ரஜினி... இவள லேசு பாசா நினைச்சுடாதே... சிங்கிள் டேக்ல ஓகே பண்ணுவா. நீ இப்போ பெரிய ஸ்டார். இவகிட்ட பல்பு வாங்கிடாதே” என்று தனக்கேயுரிய முறையில் ரஜினியை சூடேற்ற முயன்றார் கேபி. ஆனால், ரஜினி அசங்கவில்லை. ஒவ்வொரு டேக்கும் டக்.. டக்.. என்று ஓகேயானது. சரிதாவின் நடிப்புக்கு ஒருபடி மேலே நின்று தனது கதாபாத்திரத்துக்கான நடிப்பை ரஜினி ஜஸ்ட் லைக் தட் என்று கொடுத்துவிட்டுப்போக, விக்கித்து நின்றார் கேபி.
படத்தில், பாலியல் தொழிலாளியாக இருந்து, அதை உதறிவிட்டு புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிவெடுத்திருப்பார் சரிதா. அவரைத் தேடி, “சரஸ்.. சரஸ்...” என்று அழைத்தபடி இந்தி வாலாவாக வருவார் கமல். அவரை எத்துப் பல் ஒன்றை வைத்துக்கொண்டு வரும் சிறு வேடத்தில் நடிக்க வைத்திருந்தார் கேபி. கமலும் ரஜினியும் படங்களில் இணைந்திருப்பது இரட்டை லாபம் என்று அவர் நினைத்தார். அதை ‘நினைத்தாலே இனிக்கும்’ எனும் இனிமையான காதல், இசைப் படத்தில் அறுவடையும் செய்தார்.
ஆனால், நல்ல நண்பர்களாக மாறியிருந்த கமலும் ரஜினியும், “இனி நாம் இணைந்து நடிக்க வேண்டாம். நமது படங்களின் வியாபார ரீதியான வளர்ச்சிக்கு அதுதான் நல்லது” என்று கலந்து பேசி முடிவெடித்தது, இந்தப் படத்தின் போதுதான். அவர்களது இந்த முடிவு தமிழ் சினிமாவின் வியாபாரத்துக்கும் வசூலுக்கும் நன்மையாகவும் அமைந்துபோனது.
(சரிதம் பேசும்)
படங்கள் உதவி: ஞானம்