நினைவூட்டினார்... நிறைவேற்றினார்
மருத்துவர்கள் உள்ளிட்ட கரோனா முன்களப் பணியாளர்கள் கரோனா பாதித்து இறந்தால், 50 லட்ச ரூபாய் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தரப்படும் என முதலில் அறிவித்தவர் முன்னாள் முதல்வர் பழனிசாமி. ஆனால், அந்த அறிவிப்பை முழுமையாகச் செயல்படுத்த போதிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லையாம் அவர். இது விஷயமாக, ‘நாம் கொடுத்த அஷ்யூரன்ஸை செய்து கொடுக்கவில்லை என்றால் கரோனா காலத்தில் சிக்கலாகிவிடும்’ என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மூன்று முறை முதல்வருக்கு கடிதமும் எழுதினாராம். அதற்கும் தீர்வு கிடைக்காத நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றதும் இவ்விஷயத்தை முதலவர் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு சென்றாராம் ராதாகிருஷ்ணன். இதையடுத்தே, கரோனாவுக்குப் பலியான 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கும் கோப்பில் உடனடியாகக் கையெழுத்திட்டாராம் முதல்வர் ஸ்டாலின்.
வாரியம் கேட்கும் அன்சாரி க்ரூப்!
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலையில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆன மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்தார். தொகுதி ஏதும் வழங்கப்
படவில்லை என்றபோதும் “திமுக கூட்டணியின் வெற்றிக்காக உழைப்போம்” என அறிவித்து களப்பணியாற்றினார் அன்சாரி. இதையெல்லாம் சுட்டிக்காட்டும் அவரது ஆதரவாளர்கள், ‘பல கோடி மதிப்புள்ள வஃக்பு சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டும், அபகரிக்கப்பட்டும் உள்ளது. அதையெல்லாம் மீட்டுத்தர தமிமுன் அன்சாரி தகுந்த நடவடிக்கைகளை எடுப்பார் என்று முஸ்லிம் சமுதாயம் நம்புகிறது. எனவே, மனிதர்களை மதிக்க தெரிந்த இந்த மனிதருக்கு வஃக்பு வாரிய தலைவர் பதவியை வழங்க வேண்டும்’ என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.