குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in
ஆட்சியை இழந்தாலும் 66 இடங்களில் வெற்றிபெற்றதன் மூலம் அதிமுகவுக்கு கவுரவமான இடத்தைப் பெற்றுத் தந்திருப்பதாக எடப்பாடி பழனிசாமியை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம், “எடப்பாடியாரின் எடுத்தேன் கவிழ்த்தேன் முடிவுகளால் தான் அதிமுக ஆட்சியை பறிகொடுத்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் நிதானமாக செயல்பட்டிருந்தால் இம்முறையும் ஆட்சியைத் தக்கவைத்து வரலாற்றுச் சாதனை படைத்திருக்கலாம்” என்ற அதிருப்திக் குரல்களும் அதிமுகவுக்குள் கேட்கவே செய்கின்றன. இதையெல்லாம் அதிமுகவின் இரட்டைத் தலைமை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? அதிமுக செய்தித் தொடர்பாளர் பெங்களூரு வி.புகழேந்தியிடம் பேசினோம்.
அதிமுக ஆட்சியை இழக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?
ஆட்சியும் அதிகாரமும் ஜனநாயகத்தில் யாருக்கும் நிரந்தரம் அல்ல. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துகொண்டிருக்கின்றன. அதன்படி பார்த்தால் 2016-லேயே திமுக ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அப்போது கூட்டணி இல்லாமலேயே புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சாணக்கியத்தனமாக செயல்பட்டு அதிமுகவுக்கே மீண்டும் வெற்றிகளைக் குவித்தார்கள். இயக்கம் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டது. மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள் என்பதை நாம் பணிவோடு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அதேசமயத்தில், இந்த முறையும் நாம் இன்னும் கொஞ்சம் சாணக்கியத்தனமாக செயல்பட்டிருந்தால் வெற்றிவாய்ப்பை இழந்திருக்க மாட்டோம்.