விக்கி
readers@kamadenu.in
பத்து ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்துகூடப் பார்த்திராத பல விஷயங்கள், இணையத்தின் உபயத்தால் இன்றைக்குச் சாத்தியமாகியுள்ளன. பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவுவது, பொதுஜனப் போராட்டத்துக்காக மக்களைத் திரட்டுவது என எங்கும் இணையத்தின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. அதிமுக்கியமான காரணிகளின் பின்புலமாக இணையம் இருந்தாலும், அதில் கேளிக்கைக்கும் வேடிக்கைக்கும் பஞ்சமே இல்லை. குட்டிக் குட்டி மீம்ஸ்கள் முதல் உலகையே வியக்கவைக்கும் பல வேடிக்கைகள் வரை ஏகப்பட்ட விஷயங்கள் இணையத்தால் சாத்தியமாகியுள்ளன. அப்படி சமீபத்தில் நடந்த ஒரு சுவாரசிய விஷயம்தான் ‘பேட்டில் ஆஃப் ஜோஷஸ்’.
வெட்டி ஆபீசர் செய்த வேலை
2020 ஏப்ரல் மாதம் கரோனா பெருந்தொற்றால் உலகம் முழுக்க மக்கள் வீட்டுக்குள் முடங்கிய சமயத்தில், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த ஜோஷ் ஸ்வெய்ன் என்ற இளைஞர் பொழுதுபோகாமல் ‘ஜோஷ் ஸ்வெய்ன்’ என்ற பெயர் கொண்ட பலரை ஒரு ஃபேஸ்புக் மெஸஞ்சர் குழுவில் இணைத்தார். அதன் மூலமாக “உங்கள் அனைவரையும் ஏன் இந்தக் குழுவில் இணைத்தேன் என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். நான் இங்கே குறிப்பிடும் இடத்தில் சரியாக ஒரு வருடம் கழித்து 2021 ஏப்ரல் 24-ல் சந்திப்போம், அனைவரும் நமக்குள் சண்டையிடுவோம். யார் வெற்றி பெறுகிறாரோ, அவர் ஜோஷ் ஸ்வெய்ன் என்ற பெயரைத் தக்கவைத்துக்கொள்ளலாம். மற்றவர்கள் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு வருடம் அவகாசம் இருக்கிறது. அனைவரும் தயாராகுங்கள்” என்று அக்குழுவில் இருக்கும் அனைவருக்கும் வேடிக்கையாகச் செய்தி அனுப்பினார்.