புதிய அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

By காமதேனு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியிருக்கிறது. ஆக, அடுத்து அரசு அமைக்கப்போவது யார் எனும் கேள்விக்கு இந்த வாரத் தொடக்கத்திலேயே விடை தெரிந்துவிடும். ஆட்சி யார் வசம் சென்றாலும், அதைத் தீர்மானித்தது மக்கள்தான் எனும் வகையில், மக்கள் மனதில் என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கின்றன என்பதைப் புதிய அரசு பரிசீலிக்க வேண்டியது அவசியம்.

பிற மாநிலங்களைப் போலவே தமிழகம் எதிர்கொண்டுவரும் முக்கியப் பிரச்சினை கரோனா இரண்டாவது அலைதான். ஒப்பீட்டளவில் தமிழகத்தில் பாதிப்பு குறைவுதான் என்றாலும், அன்றாடம் அதிகரித்துவரும் தொற்றுகளின் எண்ணிக்கை அச்சமூட்டவே செய்கிறது. தடுப்பூசி முதல் ஆக்ஸிஜன் வரை பற்றாக்குறையோ, தட்டுப்பாடோ ஏற்படாத வகையில் தீர்க்கமான நடவடிக்கைகளைப் புதிய அரசு எடுக்க வேண்டும். கரோனா கட்டுப்பாடுகள் மக்களின் வாழ்வாதாரத்தைக் குலைக்காத வகையில் நடைமுறைச் சாத்தியம் கொண்ட நடவடிக்கைகள் அவசியம்.

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடங்கி, சாத்தியம் இருந்தால் முழு மதுவிலக்கை அமல்படுத்துவதுவரை புதிய அரசு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இலவசத் திட்டங்களை அமல்படுத்தும்போது மாநிலத்தின் நிதி வாய்ப்புகள் குறித்த சாதக பாதகங்களை மனதில் கொள்ள வேண்டும். விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

ஆணவக் கொலைகள், வழிப்பறிச் சம்பவங்கள் உள்ளிட்ட எல்லா வகையான குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்துவது புதிய அரசின் முக்கியக் கடமை. பெருந்தொற்று காலத்தில் கல்வித் துறை சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். எல்லாவற்றையும் தாண்டி, வெளிப்படைத்தன்மை கொண்ட, பிரச்சினைகளுக்குச் செவிமடுக்கின்ற, ஊழலற்ற அரசு நிர்வாகத்துக்காக மக்கள் ஏங்கிக் காத்திருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற புதிய அரசு வழிவகுக்கட்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE