சிறை மீளும் சிங்கம்: அதிர்வைக் கிளப்புமா லாலுவின் விடுதலை?

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

தும்கா கருவூல வழக்கில்,  லாலு பிரசாத் யாதவை ஜாமீனில் விடுதலை செய்ய ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ராஷ்ட்ரிய ஜனதா தளம் முகாமை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கால்நடைத் தீவன ஊழல் வழக்குடன் தொடர்புடைய இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தி ருப்பதைத் தொடர்ந்து, லாலு சிறையிலிருந்து வெளி வரும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ஜார்க்கண்டில் லாலு மீது ஐந்து வழக்குகள் இருந்தன. நான்கு வழக்குகளில் ஏற்கெனவே அவருக்கு ஜாமீன் வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. லாலு விடுதலையாகும் செய்தி வெளியானதும் பாட்னாவில் லாலுவின் வீட்டு முன்பாகக் குவிந்த அவரது ஆதரவாளர்கள், இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள். ‘லோ ஆகயா ஷேர்’ (இதோ வந்துவிட்டது சிங்கம்) என அவரை வரவேற்கும் பாடல்கள் சமூக வலைதளங்களில் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

ராஞ்சியின் ஹோட்வார் சிறையில் இருந்த காலத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் லாலு. அவரது உடல்நலம் மேலும் மோசமானதைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அங்குதான் தொடர் சிகிச்சையில் இருந்துவருகிறார். ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிப்பது உள்ளிட்ட பணிகள் மிச்சமிருக்கின்றன. அந்நீதிமன்றத்தின் பல வழக்கறிஞர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால், நீதிமன்றப் பணிகள் முடங்கியிருக்கின்றன. ஏப்ரல் 24-ல் லாலுவின் வழக்கறிஞர் ஆவணங்களைச் சமர்ப்பிப்பார் என்று சொல்லப்படுகிறது. பின்னர் அது தொடர்பான ஆணை ஹோட்வார் சிறைக்கு அனுப்பப்படும். அங்கிருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தகவல் சென்றவுடன் லாலு பாட்னாவை நோக்கிப் பயணமாவார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE