தங்கத்துடன் தான் வீடு திரும்புவேன்!- தங்கத் தமிழச்சி தனலட்சுமி சபதம்

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

தேர்தல் களேபரத்தில் எத்தனையோ நற்செய்திகளைத் தவறவிட்டிருக்கிறோம். அப்படித்தான் 23 ஆண்டுகளுக்கு முன்னர் 200 மீட்டர் ஓட்டத்தில் பி.டி.உஷா செய்திருந்த சாதனையை, சமீபத்தில் முறியடித்திருக்கும் தமிழச்சி தனலட்சுமி குறித்த செய்திகளும் ஊடகங்களில் உரிய கவனம் பெறாமல் போய்விட்டன. பி.டி.உஷா, 23.30 விநாடிகளில் ஓடிக் கடந்து நிகழ்த்திய சாதனையை 23.26 விநாடிகளில் கடந்து முறியடித்திருக்கிறார் நம் தனலட்சுமி.

மார்ச் மூன்றாவது வாரத்தில், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்த 24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பைக்கான தடகளப் போட்டியில்தான் இந்த அற்புதத்தை தனலட்சுமி நிகழ்த்தியிருக்கிறார்.

இந்தப் போட்டியில் இவர் இன்னுமொரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். 100 மீட்டர் ஓட்டத்தில் தற்போது தேசிய சாம்பியன்களாக இருக்கும் ஹீமா தாஸ், துத்தி சந்த் ஆகிய இருவரையும் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்து தங்கம் வென்றிருக்கிறார் தனலட்சுமி. தங்கம் வென்று ஊர் திரும்பிய தனலட்சுமியை திருச்சியில் உள்ள சில விளையாட்டு ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மட்டுமே வரவேற்று அழைத்துச் சென்றனர். திருவெறும்பூர் தொகுதிக்குள் இவரது வீடு இருப்பதால் திமுக, அதிமுக வேட்பாளர்கள் மட்டும் வீடுதேடி வந்து வாழ்த்திவிட்டுப் போனார்கள். தங்கத் தாரகை தனலட்சுமிக்குத் தமிழகம் தந்த வரவேற்பு அவ்வளவுதான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE