வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
கரோனா தடுப்பூசி தொடர்பான சர்ச்சைகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் வெடித்திருக்கின்றன. அதுதொடர்பான விவாதங்களும் எழுந்திருக்கின்றன. ஏழை நாடுகளைவிட அதிகமான எண்ணிக்கையில் தடுப்பூசி மருந்துகளைப் பணக்கார நாடுகள் வாங்கிக் குவித்திருப்பதாக, பருவநிலைச் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க் எழுப்பியிருக்கும் குரல் அவற்றில் மிக முக்கியமானது. உயிர் காக்கும் மருந்துகளில்கூட தங்களின் மேலாதிக்கத்தை விட்டுக்கொடுக்காத பணக்கார நாடுகளின் திமிர்த்தனத்தை, கிரேட்டா துணிச்சலுடன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம், டெலி கான்ஃப்ரன்ஸிங் முறையில் பேச கிரேட்டாவை அழைத்திருந்தது. ஏழைநாடுகளுக்குக் கரோனா தடுப்பூசி வழங்குவதற்கான நிதியில் தனது அறக்கட்டளையின் பங்காக 90.41 லட்சம் ரூபாயை உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறார் கிரேட்டா. அதையொட்டியே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்போது பேசிய கிரேட்டா, “குறைந்த வருவாய் கொண்ட நாடுகளிலும், நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளிலும் மக்கள் ஆபத்தில் இருக்கும் சூழலில், அதிக வருவாய் கொண்ட நாடுகளில் இளைஞர்களுக்கும் உடல் ஆரோக்கியம் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுமானால் அது முற்றிலும் அறநெறிக்கு எதிரானது” என்று குறிப்பிட்டார். அதிக வருமானம் கொண்ட நாடுகளில் நான்கில் ஒருவருக்குத் தடுப்பூசி கிடைத்திருக்கும் நிலையில், குறைந்த வருவாய், நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் 500 பேரில் ஒருவருக்கே தடுப்பூசி கிடைப்பதாக அவர் குற்றம்சாட்டுகிறார்.
கைகழுவும் பணக்கார நாடுகள்