கட்டக்காளை - 18

By மதுரை ஒ.முருகன்

பேறுகாலத்துக்குப் போயிருந்த கட்டக்காளை பொண்டாட்டி லச்சுமாயி, அவுக அப்பென் ஆத்தாளோட, தாம் பெத்த பிள்ளைகளையும் தூக்கிக்கிட்டு, புருசன் வீட்டுக்கு வந்து சேந்துட்டா.

பிள்ளப் பெத்த ஒடம்பு, புதுச்சத்துப் புடிச்சு மினு மினுன்டு லச்சனமா தெரிஞ்சா லச்சுமாயி.

ஊருப் பொம்பளைக எல்லாம் கூடிட்டாக… லச்சுமாயி பிள்ளைகள ஆளாளுக்குத் தூக்கிக் கொஞ்சுராக. மொழு மொழுன்டு அதுக காலுங் கையும் ஒதறிக்கிட்டுச் சிரிக்கிறதப் பாத்து மூக்குல வெரல வக்கிது சனம்.

பிள்ளைக இடுப்புல கெடந்த வெள்ளி அருணா அஞ்சு சுத்துக்கு வாரமாரி சுத்திக் கட்டிருக்கதையும், குஞ்சு மணி, நாய்க்காசு, மாங்கா காசுன்டு வெதவெதமான வெள்ளிக்காசுகள அதுல கோர்த்துப் போட்டுருக்கிறதயும், ‘சலக் சலக்’கின்டு கேக்குறாமாரி நெறையா முத்து வச்ச சப்பச் சலங்கையையும், கழுத்தில மின்ற தங்கச் சங்கிலியையும் உத்து உத்துப் பாத்து சிலபேரு உள்ளுக்குள்ளயே உமுரு முழுங்கிறாளுக.

“தோராட்டுறதுக்கு தொட்டிச்சீல, விரிகம்பு, நட வண்டின்டு எல்லாமே, ரெட்ட ரெட்டயா செஞ்சு போட்டுருக்கே எங்கண்ணென்…” பின்னத்தேவன் காதுல விழணுமின்டு கொஞ்சம் பெலக்காவே சொன்னா கச்சம்மா…

“ஓங் கொல்லிக்கண்ண கொண்டுபோய் அடுப்பில வைக்க… எதெல்லாம் உத்துப் பாத்திட்டுருக்காளுக பாரு… வந்தம்மா பாத்தம்மான்டு இல்லாம உமுரக் குடிச்சுக்குத் திரியிறாளுக… ஏஞ் சம்மந்தகாரக கொடி கொழுசு எடுத்துப் போடக்கூட வக்கத்தவகளா… போங்கடி அங்கிட்டு…” கோவிச்சா கழிச்சியாத்தா.

பிள்ளைகள மொறப்படி கொண்டாந்து விட்ட பின்னத்தேவனுக்கும் அவென் பொண்டாட்டி பெருமாயிக்கும் எடுத்து வச்சிருந்த புதுத்துணிகள குடுக்க… மக வீட்டுச் சீதனமா சுங்கடிச் சீலயும், வேட்டி சட்டயும் வாங்கின பகுமானத்தில ரெண்டு பேரும் ஊருக்கு கெளம்பிட்டாக.

லச்சுமாயி வந்த பத்து நாளும் கட்டக்காளை வீடே கலகலன்டு சந்தோசமாருக்கு.

நேத்துங்கிட்டமாரி, காளாஞ்சிக் கருப்பனுக்கு ரெட்டக் கெடா வெட்டணும். ஊராளுகளுக்கும் நெல்லுக்கஞ்சி ஊத்தணுமின்டு முடிவு பண்ணுன கட்டக்காளை, கெடா வாங்கியாரச் சொல்லி, ஒச்சுக்காளையயும், வீரணனையும் எடையபட்டி பெருமாக்கோனாரு கிட்ட அனுப்பிருக்கான்.

மருதக் கோட்டையில தாங்கண்ட வெளிச்சத்த, இந்த ஊராளுகளும் பாக்கட்டுமின்டு நெனச்சான். ஊருக்கு கரன்டக் கொண்டுக்கார வழி மொறையத்தேட ஆரம்பிச்சான்.

செட்டியாரு சொல்லிவிட்ட கரென்டு ஆபீசர்களப் பாத்து, ஆக வேண்டிய வேலைகளப் பாத்தான்.

மருதைக்கி போயிட்டு வந்த நாள்லருந்து, பத்துப் பதினஞ்சு நாளா இதே வேலையாத்தான் அலையிறான்.

ஊருக்கு ஒதுக்குப் பொறத்திலதான் எடையபட்டி பெருமாக்கோனாரு வீடு. 

வீட்ட ஒட்டுனாப்பில, மூங்கித் தப்பையில மரிச்சுக் கட்டுன ஆட்டுக்கொட்டம்.

நூறு ஆட்டக்கூட ஒரே விசையில அடைக்கத் தோதான பெரிய கொட்டம்…

துள்ளிக் குதிச்சு வெள்ளாடுற குட்டி ஆடுகள தனியாவும் இப்பயோ பெறகோன்டு ஈத்தழிச்சுக்கிட்டுத் திரியிற சென ஆடுகளத் தனியாவும், மறப்புக் கட்டி அடச்சு வச்சிருந்தான்.

செனைக்கு மருகிற ஆட்ட, ஒரெடத்தில நிக்க விடாம, பொழிச்சக் கெடா ஒண்ணு ஒதட்டப் பிதுக்கிக்கிட்டு பின்னாடியே வெரட்டிக்கித் திரியிது.

“கீதாரி மாமேய்… ரெண்டு கருங்கெடா வேணும், கெடா வெட்டப்போறோம்…”ன்டு ஒச்சுக்காளை சொல்ல, “திடுதிப்புன்டு என்னா கெடாவெட்டு?  நல்லநாச் சாட்டலயே…” பெருமாக்கோனாரு சந்தேகமாக் கேட்டாரு.

 “பிள்ளப் பெறந்தா கெடா வெட்டணுமின்டு எங்க அண்ணனுக்கு நேத்திக் கடன் அதான்.”

தோள்ல கெடந்த துண்டெடுத்து தலையில இறுக்கி உருமாக் கட்டுன பெருமாக் கோனாரு, ஆடு வெளிய போயிறாம வச்சிருந்த அடப்புத் தொறப்ப இழுத்துத் தொறந்தாரு.

படுத்துக் கெடந்த ஆடுக வெறிச்சு… எந்திரிச்சு, அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுது… தாய் ஆட்டக் காணமின்டு குட்டி ஆடுக கத்திக்கிட்டு தேடுது.

மாங்குட்டி கெணக்கா, ஒராளு மட்டத்துக்குத் தவ்வுன, கரேண்ட கெடாய துள்ளவிடாம, லபக்கின்டு பின்னங்காலப் புடிச்சுக் குடுத்தாரு பெருமாக்கோனாரு.

ஒரே மட்டத்தில இருந்த இன்னொத்தக் கெடாயயும் தேடிப் புடிச்சவரு, “ந்தாயா மாப்ளேய்… இதப் பாரு, ரெண்டும் ஒண்ணு சொன்னாப்பில இருக்கா…” ன்டாரு.

வீரணனும், ஒச்சுக்காளையும் ஆளுக்கொரு கெடாய வாங்கிப் புடிச்சு, புளிச்சநாறுக் கயித்தில அங்கனருந்த கல்லுக்கால்ல கட்டிவச்சாங்க.

கெடாப் புட்டானிய இறுக்கிப்புடிச்ச ஒச்சுக்காளை, என்னா எட வருமின்டு பாத்தான். அதே கெடாயத் தூக்கியும் பாத்தான்.
 “மாமெங்… கண்ணுலயே எட போட்டுறவன்றது சரியாத்தான் இருக்கு. ரெண்டும் நூலுப்புடிச்சாமாரி இருக்கே…” பெருமையாச் சொன்னான்.

அதப் பத்தி பெருசாக் கண்டுக்கிறாம, ஆட்டுப் புழுக்கையையும், மூத்திரத்தையும் மிதிச்சு ஒழப்பிக் கிட்டே வந்த கோனாரு, “போதும்மாய்யா…” ன்டு கேட்டாரு.

 “பத்தாது மாமு… இன்னம் நாலு மருக்கயப் புடி. கொழு கொழுன்டு ஈனாத மருக்கயாப் பாத்துப்புடி. அப்பத்தான் ருசியா இருக்கும்…” ஒச்சுக்காளை படபடன்டு சொன்னான்.

“கெடாவெட்டப் போறிகளா... ஆடு வளக்கப் போறிகளா எதுக்கு இத்தன…?” புரியாமக் கேட்டாரு கோனாரு.

“சொந்தஞ் சொருத்து நெறயா வருவாக… ரெண்டு கெடாப் பத்தாதின்டு,எங்கண்ணன், நாலு ஆட்டச் சேத்து வாங்கியாரச் சொல்லுச்சு…”

ஒச்சுக்காளை இப்டிச் சொல்லவும், விசுக் விசுக்கின்டு அவென் கேட்டமாரி நாலு ஆட்டப் புடிச்சுத் தூக்கியாந்து குடுத்தாரு கோனாரு.
ஒச்சுக்காளையும், வீரணனும் ரெண்டு கெடாயயும் கையில புடிச்சுக்கிட்டு… மத்த ஆடுகளயும் சேத்து ஓட்டிக்கிட்டு வீடு வந்து சேந்துட்டாங்க.

“வார அம்மாசிக்கு கெடாவெட்டி நேத்திக்கடனத் தீத்துப்பிடணுமித்தாய்…” ன்டு சொன்னான் கட்டக்காளை.

“எம்புட்டு நெல்ல அவிச்சுக் குத்த முடியுமோ அம்புட்டக் குத்தச் சொல்லுத்தாய்…” சொல்லிக்கிட்டே சொந்த பந்தங்களுக்கு தாக்கச் சொல்லக் கெளம்பிட்டான்.

பின்னாயி, அன்னத்தாயி, பேச்சின்டு, நாலஞ்சு பொம்பளைக பெரிய குலுக்கயிலருந்த நெல்ல, ஆளுக்கொரு கூடய வச்சு அள்ளியெடுத்து… பெரிய பெரிய அண்டாவுலயும்  தண்ணித் தொட்டியிலயும் கொட்டி ஊறவச்சாக.

ஒரு நாப் பொழுதுக்கும் நெல்லு ஊறுனாத்தான், அவிக்கிறப்ப விரிஞ்சு குடுத்து மணக்கும். அவிச்ச நெல்ல பக்குவமா, நெழல்ல காய வச்சு ஒரல்ல போட்டு நெல்லுக் குத்துனா குருண படாம… முழு முழு அரிசியா இருக்கும். அதுக்குத்தான், நெல்ல தண்ணியில ஊறவச்சு அவிச்சு நெழல்ல காயப்போடுறது.

கெடா வெட்டப் போறாகன்ற சேதி ஊரு பூராம் பரவிருச்சு…

லச்சுமாயி வீட்டாளுகளுக்கும், தாக்கச் சொல்லிக் கூட்டியாரணுமின்டு ஒச்சுக்காளையக் கூட்டிக்கிட்டு ஓனாப்பட்டிக்கு வந்துட்டான் கட்டக்காளை.

பின்னத்தேவன் வீடு தொறந்து கெடக்கு… வீட்டுக்குள்ள வந்த கட்டக்காளை, “எக்காய்…எக்காய்…”ன்டு சத்தமாக் கூப்பிட்டான்…
உள்ளு வீட்டுக்குள்ள என்னத்தயோ ஒதுங்க வச்சிக்கிருந்த பெருமாயி,  “வாங்கப்பா… ”ன்டு சொல்லிட்டு, கொட்டத்துப் பக்கமா போயி  பின்னத்தேவன கையோட கூட்டியாந்துட்டா.

 “ஏய்… மருமகனுக்கு எனத்தயாச்சும் 

குடுத்தியா” ன்டு சொல்லிக்கிட்டே வீட்டுக்குள்ள வந்தான் பின்னத்தேவன்.

 “வார அம்மாசிக்கு கெடா வெட்டளாமின்டு முடிவு பண்ணிருக்கு மாமா… அதான் சொல்லிட்டுப் போகலாமின்டு வந்தேன்…” வந்த வெவரத்தச் சொல்லிட்டு, அடுத்த சொந்தங்களுக்கும் சொல்லக் கெளம்பிட்டான் கட்டக்காளை.

லச்சுமாயோட நல்லப்பன், பெரியப்பன், மூணாம் பங்காளிக வரைக்கும் தாக்கல் சொன்ன கட்டக்காளை,  “லச்சுமாயி அண்ணன் மலைராமன் வீட்டுக்கும், ஒரெட்டுப் போயிட்டு வந்திருவோமிடா வா…”ன்டு ஒச்சுக்காளையக் கூட்டிக்கிட்டு, ஊருக்குத் தெக்கோரத்தில இருக்கிற மலைராமன் வீட்டுக்கு கெளம்புனாங்க.

 “நாளைக்கு கரென்டு ஆபீசரப் பாத்து அவுகளயும் வரச் சொல்லணுமிடா… நாவகப்படுத்து. கெடா வெட்டுக்குல்லார கரென்டக் கொண்டுக்காந்திரணும்…” ஒச்சுக்காளைக்கிட்ட சொல்லிக்கிட்டே நடந்தான்.

சாப்பு எறக்கின ஓட்டு வீடு. சுத்திலும் மரஞ்செடி, பாக்குறதுக்கே ஆசாரமா தெரிஞ்ச வீட்டு முன்னாடி, வெள்ளாண்டுக்கிருந்த பையங்கிட்ட,  “இதான மலைராமன் வீடு”ன்டு கேட்டான் கட்டக்காளை.

மூஞ்சிய உத்துப் பாத்துக்கிட்டே இருந்த அந்தப் பையன், பதிலுச் சொல்லாம திடுதிடுன்டு வீட்டுக்குள்ள ஓடுனான்...

“யப்பாய்… ஆரோ ஒன்னியத்தேடி வந்திருக்காக…” அந்தப் பொடியன் மூச்சிரைக்கச் சொல்லி முடிக்கல…

 “என்னய்யா உள்ள வரலாமா…” சொல்லிக்கிட்டே வீட்டுக்குள்ள வந்த கட்டக்காளையப் பாத்த மலைராமனுக்கு, கையும் ஓடல காலும் ஓடல.

 “என்ன மச்சான் திடுதிப்பின்டு…” மலைராமன் கேக்க, “கெடா வெட்டப்போறோம்… மொதக் கெடாவ நீதான் வெட்டணும்… குடும்பத்தோட வந்திரணுமிய்யா” ன்டு கட்டக்காளை சொன்னான்.

‘மூஞ்சியில முழிக்கவே கூடாதுன்டு தன்ன வீட்டுக்குள்ள சேக்காத அப்பென் அங்க வருவாரே... மச்சினம் மாமென் வீட்டுல பெரச்சனை வந்தா அசிங்கமாப் போகுமே... இவங்கட்ட வாரமின்றதா... மாட்டமின்றதா?’ சொல்ல முடியாம தவிச்சான் மலைராமன்.
அவென் ஓசிக்கிறதப் புரிஞ்சிக்கிட்ட கட்டக்காளை, “ நீ வந்தாத்தான் கெடா வெட்டு… பிள்ளகுட்டியக் கூட்டிக்கிட்டு, வெள்ளனா வந்து சேருங்க”ன்டு சொல்லிட்டு விருட்டுன்டு ஒச்சுக்காளையக் கூட்டிக்கிட்டு கெளம்பிட்டான்.

இத்தன வருசங் கழிச்சு மொத மொறையா வீடு தேடி வந்து கூப்பிடுற மச்சினன் வீட்டுக்குப் போகாட்டி குத்தமாயிருமேன்டு நெனச்சுக் குழம்புன மலைராமன்,  கட்டக்காளை போற தெசயவே பாத்துக்கிருந்தான்!

 (தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE