இனி எல்லாமே ஏ.ஐ - 17: மண் வளமும், ஏ.ஐ கண் பார்வையும்!

By சைபர்சிம்மன்

செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால், நவீன விவசாயத்தின் முகமே மாறிக்கொண்டிருக்கிறது எனக் கடந்த வாரம் பார்த்தோம். இந்தப்போக்கை இன்னும் சற்று விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

செயற்கை நுண்ணறிவு, அதன் முக்கிய அங்கமான இயந்திரக் கற்றல் மற்றும் இணையத்துடன் பேசும் திறன் கொண்ட சென்ஸார்கள் உள்ளிட்டவைதான் நவீன விவசாயத்தின் முக்கிய அம்சங்களாக மாறியிருக்கின்றன. இவற்றின் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் மண் வளத்தை ஆய்வுசெய்வதிலிருந்து, பயிர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதுவரை கைகொடுத்து மகசூலைப் பெருக்கிக்கொள்ள வழிசெய்கின்றன.

ஆக, வேளாண்மையின் ஒவ்வொரு கட்டத்திலும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தைப் பார்க்கலாம். மண் வளத்தைக் கணிப்பதிலிருந்து இது தொடங்குகிறது. எந்த வகை பயிர் செய்யலாம் என்பதிலும், அந்தப் பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்து அளிப்பதிலும் மண் வளம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மண் வளத்தை அறிய பாரம்பரிய வழிகள் முதல் விஞ்ஞான வழிமுறைகள் வரை பல வழிகள் இருக்கின்றன.

ட்ரோன் துணை

விஞ்ஞான வழியில் மண் மாதிரியை ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பிவைத்து சோதனை செய்தால், அதில் உள்ள சத்துக்கள் மற்றும் குறைபாடுகளை அறிந்துகொள்ளலாம். பயிர் திட்டமிடலில் இது உதவும் என்றாலும், ஒரு பறவைப் பார்வையில் மண் வளத்தைக் கணித்து அதற்கேற்ப பயிர் செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்?

ட்ரோன் வழி கண்காணிப்பு இதைத்தான் செய்கிறது. ஆளில்லா விமானங்கள் என வர்ணிக்கப்படும் இந்த சின்னஞ்சிறிய பறக்கும் வாகனங்கள், வயல்வெளியின் வரைபடத்தை உள்வாங்கிக்கொண்டு அதன் மீது வட்டமடித்து படமெடுக்கிறது. இந்தப் படக் காட்சிகளை எல்லாம் கணினிக்கு மாற்றிவிட்டால் போதும், அதன் பிறகு இயந்திரக் கற்றல் அல்கோரிதம் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும்.

இயந்திரக் கற்றல் என்பது, முந்தைய மற்றும் இப்போதைய தரவுகளை வைத்துக்கொண்டு அவற்றில் ஒளிந்திருக்கும் வார்ப்பைக் கண்டறிந்து செயல்படக்கூடியது. வயல்வெளிக் காட்சிகளைப் பொறுத்தவரை, இயந்திரக் கற்றல் கொண்டு பார்க்கும்போது, மொத்தப் பயிர்களில் ஆரோக்கியமாக இருப்பவை மற்றும் பாதிப்புக்கு உள்ளானவற்றை எளிதாக அடையாளம் காணலாம். பாதிப்புக்குள்ளான பயிர்கள் தரும் தரவுகளின் அடிப்படையில் மண்ணில் உள்ள குறிப்பிட்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்டறிந்து, அதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். அதுமட்டுமல்ல, ஆரம்ப நிலையிலேயே இந்தப் பாதிப்பைக் கண்டறிந்து சரி செய்யலாம். இதே முறையில், பயிர்களைத் தாக்கக்கூடிய நோய்களையும் முன்னதாகவே கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாம்.

ட்ரோன்கள் மூலம் எடுக்கப்படும் படங்களோடு மண்ணில் புதைக்கப்பட்ட சென்ஸார்கள் மூலம் தகவல்களைச் சேகரிக்கலாம். இவற்றை இணையத்தில் பகிர்ந்துகொள்ள வழி செய்து, இந்தத் தரவுகளையும், ட்ரோன் வழி தரவுகளையும் இணைத்து துல்லியமான கணிப்புகளை மேற்கொள்ளலாம்.

கைகொடுக்கும் செயலி

ட்ரோன்களை இயக்குவது என்பது நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில்தான் சாத்தியம். எனவே, சிறு விவசாயிகளுக்கு ட்ரோன் பயன்பாடு என்பது எட்டாக்கனியாக இருக்கலாம். ஆனால், இதற்கும் கையடக்க தீர்வு இருக்கிறது. ஆம், ‘பிளான்டிக்ஸ்’ (Plantix) எனும் செயலி, ஸ்மார்ட்போன் வாயிலாகவே இந்தக் கண்காணிப்பைச் சாத்தியமாக்குகிறது.

விவசாயிகள் ஸ்மார்ட்போனில் இந்தச் செயலியை நிறுவிக்கொள்ளலாம். அதன் பிறகு எப்போது மண் வளம் அல்லது பயிர்களின் நிலை குறித்து ஆலோசனை தேவை என்றாலும், செயலி மூலம் பயிர்களைப் படம்பிடித்து அனுப்பிவைத்தால் போதும். படக்காட்சியை வைத்தே, பாதிப்பின் தன்மை கண்டறியப்பட்டு அதற்கான தீர்வும் பரிந்துரைக்கப்படுகிறது. இயந்திரக் கற்றலின் அடிப்படையில் செயல்படும் இந்தச் செயலி, காட்சி ஆய்வு மூலம் கணிப்பை மேற்கொண்டு அதற்கேற்ற தீர்வை வழங்குகிறது.

தமிழில் சேவை உண்டு

ஜெர்மனியைச் சேர்ந்த PEAT எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தச் செயலி, சர்வதேச அளவில் செயல்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அளவில் விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டு, நம் நாட்டுக்கான சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நம் விவசாயிகள் இந்தச் செயலியைத் தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் அணுகலாம். ‘கிராப் டயக்னாசிஸ்’ எனும் நிறுவனமும் இதேபோன்ற சேவையை வழங்கி வருகிறது.

இதேபோல, அமெரிக்காவின் ‘டிரேஸ் ஜினோமிக்ஸ்’ நிறுவனம் மண் வள ஆய்வு தொடர்பான சேவையை வழங்கிவருகிறது. ட்ரோன் வழியே வயல்வெளியைப் படம் பிடித்து மண் வளத்தை ஆய்வுசெய்யும் நுட்பத்தை, அமெரிக்காவின் ‘ஸ்கைஸ்கொரில் டெக்னாலஜிஸ்’ வழங்கிவருகிறது.

மண் வளத்தில் உதவுவது போலவே, பயிர்களைத் தாக்கும் பூச்சிகளையும் நோய்களையும் அகற்றுவதிலும் ஏ.ஐ கைகொடுக்கிறது. பாதிக்கப்பட்ட பயிர்களைக் கண்டறிந்து, அந்தப் பகுதியில் மட்டும் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்த வழி செய்வதால், பூச்சிக்கொல்லிப் பயன்பாடும் குறைந்து பக்கவிளைவும் கட்டுப்படுத்தப்படுகிறது. களை அகற்றுவதிலும் இதே வகையான நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

விலைப் போக்கையும் நிர்ணயிக்கலாம்

இதே அடிப்படையில், வானிலை கணிப்பு மற்றும் விளைச்சல் கணிப்பிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வானிலை சார்ந்த பல ஆண்டு தரவுகளைக் கொண்டு, தற்போதைய வானிலைப் போக்கைக் கணிக்க முடிவதால், அதற்கேற்ற பயிர்ரகங்களைத் தேர்வு செய்வது சாத்தியம். அதோடு, விதைப்பதற்கான சரியான காலத்தையும் தேர்வு செய்யலாம்.

பாசனத்திலும் இதே வகை நுட்பம் பயன்படுத்தப்பட்டு, தண்ணீர் தேவை முறைப்படுத்தப்படுகிறது. பயிர் வளர்ச்சி தொடர்பான தரவுகள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதன் பயனாக, விளைச்சலின் அளவையும்கூட கணிப்பது சாத்தியமாகிறது. இதன் நீட்சியாக, சந்தைப் போக்கின் அடிப்படையில் விலையின் போக்கையும் கணிக்கலாம். இவை எல்லாமே விவசாயிகளுக்குச் சரியான நேரத்தில் அறுவடை செய்து சரியான விலைக்கு விற்க உதவுகின்றன.

செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை வயல்வெளிக்குக் கொண்டுவருவதில், இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் முன்னணியில் நிற்கின்றன என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்!

ரோபோ விவசாயிகள்!

மண் வளம் சார்ந்த கணிப்புகளை மேற்கொள்வதோடு அல்லாமல், வயலில் இறங்கி வேலை செய்வதிலும் செயற்கை நுண்ணறிவு சளைத்துவிடவில்லை. ஏற்கெனவே, கதிரடிப்பது, களை பறிப்பது போன்றவற்றுக்கு இயந்திரங்கள் வந்துவிட்ட நிலையில், விவசாய ரோபோக்கள் இந்தப் பணிகளை மேலும் சிறப்பாகச் செய்து முடிக்கின்றன.

கணினிப் பார்வை கொண்ட இயந்திரங்கள், கச்சிதமாகக்களை எடுத்துத் தருவதோடு, அறுவடையும் செய்கின்றன.

செயற்கை நுண்ணறிவு மூலம் தானியங்கியாகச் செயல்படக் கூடிய இயந்திரங்கள், வயல்வெளியில் பயிர்களுக்கு நடுவே இயங்கி, களைகளை அகற்றுவதையும், உரம் தெளிப்பதையும் செய்து முடிக்கின்றன. தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சினைக்கும் இது சரியான தீர்வு!

(தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE