இப்படியெல்லாம் இந்தியைத் திணிக்க வேண்டுமா?

By காமதேனு

சென்னை வானிலை மையத்தில் சில அறிவிப்புகள் இந்தியில் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. இந்தி பேசும் பணியாளர்கள் பெருகிவிட்டதால் இந்தியில் அறிவிப்பு வெளியானதாக வானிலை மைய உயரதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இந்தித் திணிப்பு முயற்சிகளை முறியடித்த மண்ணான தமிழகத்தில், தொடர்ந்து மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் விமர்சனத்துக்கு வழிவகுக்கின்றன.

மத்திய அரசு அலுவலகங்களில் இந்திப் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியை மத்திய அரசு இதுவரை கைவிடவில்லை. தமிழகத்தின் சிற்றூர்களில் பயணிகள் ரயில்களுக்கான அறிவிப்பில்கூட இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் அப்படியான ஒரு பிரச்சினைதான். தேசிய நெடுஞ்சாலைகளில், தமிழ், ஆங்கிலத்துடன் மூன்றாவதாக இந்தியும் இடம்பெறுவதைக்கூட நடைமுறை சார்ந்த விஷயம் என்று கருத முடியும். ஆனால், வானிலை அறிக்கையை மாநில மொழியிலோ ஆங்கிலத்திலோ வெளியிடுவதுதானே பொருத்தமாக இருக்கும்?

1930-களிலேயே இந்தித் திணிப்புக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்த மாநிலம் தமிழகம். 1955-ல், மூன்றாவது மொழியாக இந்தியைக் கொண்டுவர மொழி ஆணையம் மூலம் மத்திய அரசு முயற்சித்தபோது தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் தொடர்ச்சியாகத்தான், இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பாதவரை இந்தி திணிக்கப்படாது என்று நேரு உறுதியளித்தார். அதன் பின்னரும் இன்றுவரை இந்தித் திணிப்பு முயற்சிகள் தொடர்கின்றன. ஒருபுறம் வரைவு அறிக்கைகள் மூலம் இந்தித் திணிப்பு முயற்சிகளை மேற்கொண்டுவரும் மத்திய அரசு, மறுபுறம் நடைமுறை சார்ந்த விஷயங்களில் சத்தமே இல்லாமல் இப்படியான திணிப்புகளை அரங்கேற்றிவருகிறது.

தர்க்க அடிப்படையிலும், நியாய அடிப்படையிலும் பொருத்தமில்லாத வாதத்தை முன்வைத்து இந்தியைத் திணிக்கும் வேலைகளை மத்திய அரசு நிறுவனங்கள் கைவிட வேண்டும். ஏற்கெனவே எண்ணற்ற பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்துக்கு இதுபோன்ற குறுக்கீடுகள் மூலம் மேலும் சிக்கல்கள் ஏற்படுவதைச் சம்பந்தப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE