ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in
இந்திய திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை கலைப்பதாக அறிவித்திருக்கும் மத்திய அரசு, திரைப்படத் தணிக்கை தொடர்பான சிக்கல்களுக்கு மேல்முறையீடு செய்ய திரைத்துறையினர் உயர் நீதிமன்றங்களைத்தான் இனி அணுக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
தியேட்டருக்கு வரும் படங்கள் கட்டாயம் திரைப்படத் தணிக்கை வாரியத்தின் சான்றிதழைப் பெறவேண்டும். அவ்வாறு தணிக்கை வாரியம் வழங்கிய சான்றிதழ் அல்லது படத்தில் நீக்கச் சொன்ன காட்சிகள் குறித்து திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மாற்றுக் கருத்திருந்தால், இந்தியத் திரைப்படச் சான்றிதழ் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வது வழக்கம். இனி அதற்கு வழியில்லை. சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடியே பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும்.
இந்த நிலையில், இத்தீர்ப்பாயம் கலைக்கப்பட்ட செய்திக்கு திரைத் துறையினர் தங்களது வருத்தத்தையும் எதிர்ப்பையும் சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் ‘ஹராம்கோர்’ திரைப்படத்துக்கு 2016-ல் தடை விதிக்கப்பட்டது. அப்போது தீர்ப்பாயத்தின் மூலம் சுமூக தீர்வு பெற்று யு/ஏ சான்றிதழுடன் படத்தை வெளியிட்டார். அதேபோல், அவருடைய ‘உட்தா பஞ்சாப்’ படத்தில் 94 காட்சிகளை நீக்கும்படி தணிக்கைத் துறை வலியுறுத்தியது. இதற்கும் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார் காஷ்யப். தீர்ப்பாயத்தின் தலைவர் விடுப்பில் இருந்தமையால், உயர் நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெற்றார். இதனை தற்போது நினைவுகூர்கிறார் அனுராக் காஷ்யப். இன்னொரு பாலிவுட் இயக்குநரான விஷால் பரத்வாஜ், “சினிமாவுக்கு இது ஒரு துக்க நாள்” என்று ட்வீட் செய்திருக்கிறார். இவரது ட்வீட்டை பகிர்ந்து பலரும் சமூக ஊடகங்களில் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.