இனி எல்லாமே ஏ.ஐ - 16: வேளாண்மை வளர்க்கும் செயற்கை நுண்ணறிவு

By சைபர்சிம்மன்

‘ஐபேடு’ போன்ற பலகைக் கணினி அல்லது ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களைக் குறிப்பிட்டதும் உங்கள் மனதில் தோன்றும் காட்சி என்னவாக இருக்கும்? பிக் டேட்டா, கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனல்டிக்ஸ், சென்ஸார் மானிட்டரிங் போன்ற தொழில்நுட்பப் பதங்களைக் கேள்விப்பட்டதும், உங்களுக்கு முதலில் நினைவுக்கு வரும் துறை எது?

அதிநவீன விவசாயி இந்தக் கேள்விகளுக்கான பதிலை யோசித்தபடி, இப்படி ஒரு காட்சியைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். பச்சை பசேலென நெற்கதிர்கள் விளைந்திருக்கும் வயல்வெளி மீது, ஒன்றிரண்டு ட்ரோன்கள் பறந்துகொண்டிருக்கின்றன. சற்று தொலைவில் இருக்கும் வீட்டினுள் அமர்ந்திருப்பவர், தனது கையில் இருக்கும் பலகைக்கணினியில் தெரியும் காட்சியை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார். விவசாயியான அவர், தன் வயலின் மீது பறந்துகொண்டிருக்கும் ட்ரோன்கள் படமெடுத்து அனுப்பும் காட்சியைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆம், அவர் தனது வயல் பரப்பின் மீது ட்ரோன் வழி கண்காணிப்பை மேற்கொண்டிருக்கிறார்.

அன்றைய தினம், பயிர்களுக்கு எப்போது, எவ்வளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும், உரம் போட வேண்டுமா, வேண்டாமா என்பன போன்ற விஷயங்களை அவர் தனது பலகைக் கணினியைப் பார்த்தே தீர்மானித்துவிடுவார். அதோடு, அதிலிருக்கும் ஒரு செயலியை இயக்கினால், இந்தப் பருவத்துக்கான விளைச்சல் எப்படி இருக்கும் என்பது தொடர்பான கணிப்பும் அவருக்குக் கிடைத்துவிடும். அப்போது சந்தையின் தேவை என்னவாக இருக்கும்? விளைச்சலுக்குக் கிடைக்கக்கூடிய விலை என்னவாக இருக்கும் என்பது தொடர்பான தெளிவான புரிதலும் அவருக்கு இருக்கிறது.

இப்போது மேலே கேட்ட கேள்விகளுக்கும் உங்களுக்குப் பதில் கிடைத்திருக்குமே! ஆம், இப்போது விவசாயமும் நவீனமயமாகி இருப்பதால், பலகைக் கணினிகள், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடு விவசாயிகள் மத்தியில் இயல்பாகியிருப்பது போல, பயிர் செய்வதில் பிக் டேட்டாவும், அதன் நெருங்கிய சகாவான டேட்டா அனாலிசிஸும், முக்கிய பங்காற்றத் தொடங்கியிருக்கின்றன.

ஆம், ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு மற்ற துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதுபோல, வேளாண்மையிலும் இரண்டற கலக்கத் தொடங்கியிருக்கிறது. விதை விதைப்பது முதல் அறுவடை செய்வது வரை எல்லாமே ஏ.ஐ மயமாகியிருக்கிறது.

தானியங்கிமயமாகும் விவசாயம்

மனித குலத்தின் ஆதி தொழில்களில் ஒன்றான விவசாயத்தில் நவீனத் தொழில்நுட்பம் எப்போதுமே தாக்கம் செலுத்திவருகிறது என்றாலும், அண்மைக் காலமாக ஏற்பட்டுவரும் மாற்றம் நம்ப முடியாததாக இருக்கிறது. சொல்லப்போனால், நவீனத் தொழில்நுட்பம் இனி வருங்காலத்தில் விவசாய செயல்முறையையே தலைகீழாக மாற்றிவிடும் வாய்ப்பிருக்கிறது.

நவீனத் தொழில்நுட்பம் என இங்கே கொள்ளப்படுவது செயற்கை நுண்ணறிவைத்தான். டிராக்டர், அறுவடை இயந்திரங்கள், கதிரடிக்கும் கருவிகள் என விவசாயம் இயந்திரமயமானதன் தொடர்ச்சியாகத் தற்போது வேளாண் செயல்பாடுகள் அனைத்தும் தானியங்கிமயமாகிக் கொண்டிருக்கின்றன. இதன் பயனாகத்தான், வயல்வெளிகள் மீது ட்ரோன்கள் பறக்கின்றன. விவசாயிகள் தங்களுக்கான பிரத்யேகச் செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். மண் சார்ந்ததாகவும், இயற்கையோடு நெருங்கிய தொடர்புகொண்டதாகவும் கருதப்படும் விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை எப்படிப் புரிந்துகொள்வது? இதற்கான தேவை என்ன? இதன் விளைவுகள் என்ன?

இந்தக் கேள்விகளுக்கான பதிலைப் புரிந்துகொள்ள விவசாயத்தின் அடிப்படையும், அதன் சமகாலப் பிரச்சினைகளையும் புரிந்துகொள்ள வேண்டும். விவசாய செயல்பாடு என்பது, மண்ணை வளமாகத் தயார்செய்வதில் தொடங்கி, விதைப்பது, உரம் அளிப்பது, பாசனம் செய்வது, பூச்சிகளை அழிப்பது, அறுவடை செய்வது, விளைச்சலைச் சேமிப்பது என்பது வரையான செயல்களைக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் தொடர் சுழற்சியாகவும் இருக்கின்றன. இந்தச் சுழற்சிக்காக மண்ணையும் வானையும் நம்பியிருக்கும் விவசாயிகள், பயிர் செய்வதில் ஒவ்வொரு கட்டத்திலும் எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மண் வளத்தைப் பேணிக்காப்பது சவாலாக இருக்கிறது என்றால், நீர் பற்றாக்குறையால் பாசனம் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதோடு, உரம் அளித்தல் மற்றும் பூச்சிக்கொல்லிப் பயன்பாடும் அவற்றுக்கான பிரத்யேகமான சிக்கல்களைக் கொண்டுள்ளன. இவற்றோடு வானிலை மாறுதல் மற்றும் சந்தையின் ஏற்ற இறக்கமும் விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடுகின்றன.  பயிர்களுக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைக்கச் செய்வதும், களைகள் பாதிக்காமல் பாதுகாப்பதும் முக்கியப் பிரச்சினைகளாக இருக்கின்றன.

இன்னொரு பக்கம் பார்த்தால், பெருகிவரும் மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரித்தாக வேண்டிய பொறுப்பும் விவசாயிகளுக்கு இருக்கிறது. 2050-ம் ஆண்டுவாக்கில் உலகின் மக்கள்தொகை மேலும் 2 பில்லியன் அதிகரித்து 9 பில்லியனுக்கும் (900 கோடி!) கூடுதலாக இருக்கும் என ஐநா சபை கணித்துள்ளது.

உழவுக்குக் கைகொடுக்கும்

ஒரு பக்கம் அதிகரிக்கும் பிரச்சினைகள். இன்னொரு பக்கம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு. இந்த இரண்டையும் விவசாயம் எப்படி எதிர்கொள்ளும்?

இந்தப் பின்னணியில்தான், விவசாயத் துறை செயற்கை நுண்ணறிவின் தேவையை உணரத் தொடங்கியுள்ளது. ஆரோக்கியமான பயிர்களை விளைவிப்பதில் தொடங்கி, மண் வளத்தைக் கண்காணிப்பது, பூச்சி மற்றும் களைகளைக் கண்டறிந்து களைவது, விவசாயிகள் பணிச்சுமையைக் குறைப்பது, விளைச்சலைக் கணித்து சந்தை நிலைக்கு ஏற்பச் செயல்பட வழி செய்வது என பலவிதங்களில் செயற்கை நுண்ணறிவு விவசாயத்தில் கைகொடுத்து வருகிறது. வானிலை மாறுபாடு முதல் சந்தையின் ஏற்ற இறக்கம் வரையான சவால்களை எதிர்கொள்ளவும் வழி செய்கிறது.

விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் பரந்து விரிந்திருந்தாலும், அடிப்படையில் வானிலை - விளைச்சல் கணிப்பு, மண்வளம் - பாசனம் கண்காணிப்பு, கள நிலவரத் தரவுகள் ஆய்வு, விவசாய ரோபோக்கள், துல்லிய விவசாயம் மற்றும் மண்ணில் பொதிந்த சென்ஸார்கள் ஆகிய பிரிவுகளில் இந்தச் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. இந்தப் பிரிவுகள் விவசாயத்தில் ஏற்படுத்திவரும் மாற்றத்தையும், அதனால் உண்டாகும் பலன்களையும் தொடர்ந்து பார்க்கலாம்.

தானியங்கி டிராக்டர்கள்!

டிராக்டரைவிட விவசாயத்துக்கு நெருக்கமான வாகனம் வேறில்லை. இந்த வாகனமும் காலத்துக்கு ஏற்ப மாறியிருக்கிறது தெரியுமா? ஆம், போக்குவரத்தில் எப்படி தானியங்கி கார்கள் பெரிதாகப் பேசப்படுகின்றனவோ அதேபோல விவசாயத்திலும் தானியங்கி டிராக்டர்கள் எனும் கருத்தாக்கம் அறிமுகமாகியிருக்கிறது. கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில் நிலத்தை உழுது விளைச்சலுக்குத் தயார்படுத்தக்கூடிய வகையில், ஓட்டுநர் இல்லாத வாகனமாகத் தானியங்கி டிராக்டர்கள் கருதப்படுகின்றன. புவிசார் இருப்பிடங்களை உணரக்கூடிய ஜிபிஎஸ் தொழில்
நுட்பத்திறன் கொண்ட இந்த வாகனங்கள், வயலின் தன்மையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படக் கூடியவையாக இருக்கின்றன. இந்த வகை டிராக்டர்களை, முழுவதுமாகத் தானியங்கி முறையில் அல்லது மேற்பார்வையுடன் கூடிய இயக்கத்தில் பயன்படுத்தலாம் என்பது விவசாயத்துக்கான் வரப்பிரசாதம் எனலாம்!

(தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE