ஹாட் லீக்ஸ்: காங்கிரஸ் தோற்க காசுகொடுத்த காங்கிரஸார்!

By காமதேனு

காங்கிரஸ் தோற்க காசுகொடுத்த காங்கிரஸார்!

ஓட்டுக்குக் காசு கொடுக்கும் வழக்கம் எச்.ராஜாவின் தேர்தல் வரலாற்றில் இதுவரை நடந்ததே இல்லை. ஆனால் இந்தமுறை, ராஜாவும் பெட்டியைத் திறந்துவிட்டார். காரைக்குடி தொகுதியில் பெரும்பாலான இடங்களில் ராஜாவின் 500 ரூபாய் கவரும் கடைசி நேரத்தில் சுற்றில் வந்தது. இவருக்கு நிகராக அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியும் 500 ரூபாய் நோட்டுகளை இறக்கினார். களத்தில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு கையில் இருப்பு குறைந்து போனதால் 300 ரூபாய் கொடுத்தார். இதில் வேதனை கலந்த வேடிக்கை என்னவென்றால்... மாங்குடியை ஜெயிக்க வைக்க திமுகவினர் மன்றாடிக் கொண்டிருக்க, காங்கிரஸுக்குள்ளேயே ஒரு கோஷ்டி மாங்குடியை வீழ்த்த அஞ்சாம் படை வேலை பார்த்தது தான். இம்முறை மாங்குடி ஜெயித்தால் கார்த்தி சிதம்பரத்தின் கை ஓங்கிவிடும் என கணக்குப் போட்ட இந்தப் படை, மடியில் பணத்தைக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியது. இவர்களும் சில இடங்களில் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்தார்கள். கொடுத்துவிட்டு என்ன சொன்னார்கள் தெரியுமா... “நீங்க யாருக்கு வேணும்னாலும் ஓட்டுப் போடுங்க. ஆனா, மாங்குடிக்கு மட்டும் போடாதீங்க!” இந்த லட்சணம் தெரிந்துதானே இவர்களுக்கு 25 சீட் ஒதுக்கவே யோசித்தது திமுக!

அடுத்த சபாநாயகர் சுப்புலட்சுமி?

மொடக்குறிச்சி தொகுதியில். முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு திமுகவில் சீட் கொடுத்ததை எதிர்த்து சொந்தக் கட்சியிலேயே சிலர் கிளர்ச்சி செய்தார்கள். அதையெல்லாம் சமாளித்து வெற்றிமுகத்தில் இருக்கிறாராம் அக்கா. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இருந்தவர் என்பதால் சுப்புலட்சுமிக்கு முப்பதுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்ததாம். அத்துடன் எதிர் முகாமில் அதிமுக போட்டியிடாமல் பாஜக களத்தில் நிற்பதும் இவரது வெற்றியை மேலும் உறுதிப்படுத்துகிறதாம். சுப்புலட்சுமி வென்றால் மீண்டும் அமைச்சர் தானே என்று கேட்டால், “அதற்கான வாய்ப்பு கம்மி தான். அனுபவம் வாய்ந்த அக்காவை சபாநாயகர் இருக்கையில் அமரவைக்க திமுக மேல்மட்டத்தில் பேச்சு நடக்கிறது. அப்படி நடந்தால் தமிழகத்தின் முதல் நிரந்தர பெண் சபாநாயகர் என்ற அந்தஸ்து சுப்புலட்சுமி அக்காவுக்கும் அதற்கு வாய்ப்பளித்த பெருமை திமுகவுக்கும் கிடைக்கும்” என்கிறார்கள் சுப்புலட்சுமியின் ஆதரவாளர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE