ரஜினி சரிதம் 15: ஆறிலிருந்து எழுபது வரை: கையில் காசு இல்லாமல் நடந்த ரஜினி!

By திரை பாரதி

கே.பாலசந்தர் தயாரிப்பில் மூன்று படங்களில் நடித்துக் கொடுத்தார் ரஜினி. அதற்காக ரஜினிக்கு நன்றிக் கடன்பட்டிருப்பதாக நெகிழ்ந்தார் பாலசந்தர். ஆனால், ரஜினி அதை ஏற்கவில்லை. “யாருக்கு யார் நன்றிக் கடன்பட்டிருக்கிறார்கள்? அப்படிச் சொல்வது இயக்குநர் சிகரத்தின் பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால், நான் பணம் வாங்கிக்கொண்டுதானே நடித்தேன்?! எனக்கு அப்படங்கள் பணத்தை மட்டுமல்ல; எத்தனைப் புகழைக் கொண்டுவந்து சேர்த்தன. இது திரையுலகத்துக்கும் மக்களுக்கும் தெரியுமே! 

‘நெற்றிக்கண்’ படத்தில் சக்கரவர்த்தி கதாபாத்திரம் எனக்குப் பெற்றுத் தந்த புகழ், ‘அண்ணாமலை’ பெற்றுத் தந்த ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்து, ‘முத்து’ பெற்றுத் தந்த கடல் கடந்த ஜப்பானிய அங்கீகாரம்... இவை அனைத்தையும் எப்படி என்னால் மறக்க முடியும்? உண்மையில் நான்தான் அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்” என்று தன்னுடைய ‘மாஸ்டர்’ கே.பாலசந்தர் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் ரஜினி.

அப்படிப்பட்ட கேபி, ‘அவர்கள்’ படத்தில் ரஜினிக்கு அளித்த ராமநாதன் கதாபாத்திரம், அன்றைக்கு எம்.ஆர்.ராதாவின் ஆணாதிக்க வில்லத்தனங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும்விதமாக இருந்தது. பெண்ணடிமைத்தனத்தின் ஒட்டுமொத்த உருவமாக மாறி, சுஜாதாவைப் பார்த்து, “நீ கதறக் கதற அழணும்... அதை நான் பாக்கணும்” என்று வசனம் பேசிய ரஜினியைத் திரையரங்கில் திட்டித் தீர்க்காத பெண்கள் இருக்கவே மாட்டார்கள்.

சொதப்பிய ரஜினி

அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஒரு சம்பவம். காட்சிப்படி, அலுவலகத்துக்குக் கிளம்பும் ரஜினி, தனது ஃபைல் ஒன்றை மாடியில் வைத்திருப்பதாகக் கூறி, அதைப் போய் எடுத்துவரும்படி மனைவி சுஜாதாவிடம் சொல்வார். அப்போது குழந்தையை ரஜினியிடம் கொடுத்து, வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு மாடிக்குச் செல்வார் சுஜாதா. அப்போது ரஜினி, “என்ன... இன்னைக்குக் குழந்தை என்னைப் பார்த்து அழவே இல்ல... நான்தான் அப்பான்னு இன்னைக்குத்தான் புரிஞ்சுக்கிட்டானா? அனு... அப்பனை அப்படியே உரிச்சு வெச்ச மாதிரி குழந்தை பொறந்துட்டா மனைவி மேல சந்தேகம் வர்றதுக்குச் சான்ஸே இல்ல. இவன் உனக்கு வந்து பொறந்துருக்கானே... டேய்... உன்னை எப்படிடா நம்புறது?” என்று கொடுஞ்சொற்களை மனைவியிடம் கொட்டியபடி குழந்தையை வாங்கி வைத்துக்கொள்வார்.

அப்போது ரஜினி அணிந்திருக்கும் மேல் கோட்டைக் குழந்தை ஈரப்படுத்திவிடும். அந்தச் சமயத்தில் குழந்தையின் அந்தச் செயலால் அருவருப்படைந்தபடி... கேமரா இருக்கும் வலப்புறம் கொஞ்சமாகத் திரும்பி, தன்னுடைய முகத்தில் குழந்தை மீதான ஒவ்வாமையை ரஜினி ரியாக் ஷனாகக் காட்ட வேண்டும் என்றார் கேபி.

ஆனால், அப்படி கேமராவுக்கு ஃபேவர் செய்து ரியாக் ஷன் காட்ட வேண்டுமா என்பதில் ரஜினிக்கு ஒரு தயக்கம். இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் ரஜினி கேமரா பக்கம் கொஞ்சமாகத் திரும்ப வேண்டும் என்பதை நினைவில் வைத்திருந்தும்... ஏனோ அடுத்து எடுத்த 3 ரீடேக்குகளிலும் அதை மறந்துபோனார். கேபி கோபமாகிவிட்டார். “சிவாஜி… இதுக்கு மேல எடுக்க மாட்டேன். நான் சொன்னபடி கேமராவுக்குப் ஃபேவர் பண்ணு” என்று வெடித்தார். ஆனால், நடிப்பில் இருந்த கவனம் கேமரா பக்கம் திரும்ப வேண்டும் என்பதில் ரஜினி மீண்டும் கோட்டைவிட்டார்.

நெகிழ்ந்துபோன கேபி

கேபிக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. “டேய் சர்மா! இவனுக்கு நடிப்பே வராதுடா... மத்தியானம் அந்த ஜெய்கணேஷைக் கூட்டிட்டு வந்துரு... பிரேக்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். ரஜினி வியர்த்து விறுவிறுத்துத்தான் போனார். ‘மூன்று படங்களில் நடித்துவிட்டால் நீ என்ன அவ்வளவு பெரிய நடிகனா? பேசாமல் இயக்குநர் சொல்வதைச் செய்துவிட்டுச் செல்வதில் உனக்கு என்ன சிக்கல்?’ என்று ‘மூன்று முடிச்சு’ மனசாட்சிபோல ரஜினி தன்னையே கேட்டுகொண்டார்.

பிரேக் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியபோது, “சார் இந்த முறை சரியா செய்துடுறேன். ரொம்ப சாரி சார்!” என்று கேபி முன்னால் போய் நின்று சொன்னார் ரஜினி. உடனே கேபி, “டேய் சர்மா! பார்த்துக்கோடா... இதாண்டா உண்மையான ரஜினி” என்று ரஜினியைப் பார்த்து நெக்குருகிவிட்டு, “ரஜினி… இதுவரை எடுத்த மூணு ஷாட்ல எது பெட்டரா இருக்கோ அதையே யூஸ் பண்ணிக்கலாம் விடு. அதை மறுபடியும் எடுக்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அடுத்தக் காட்சியைப் படமாக்கத் தயாராகிவிட்டார்.

இயக்குநர்களின் நடிகர்

மொத்தப் படப்பிடிப்பும் முடிந்து, எடிட்டிங் பணிகள் முடிந்த வடிவமான ‘மேரிட் பிரின்ட்’ (Married print) தயாரானதும் படத்தைப் பார்த்த கேபி, “நீ செஞ்சதுதான் கரெக்ட் ரஜினி. கேமராவுக்குக் கொஞ்சம் ஃபேவர் ரியாக் ஷன் காட்டியிருந்தா நல்லா இருந்திருக்கலாம். ஆனா, அதைவிட இந்த ‘நாட் ஓகே!’ ஷாட்லதான் இயல்பு இருக்கு. நீ டைரக்டரோட ஆக்டர்” என்று பாராட்டினார். ஆனாலும் ரஜினியை அன்றைக்குத் திட்டிவிட்டோமே என்கிற வருத்தம் கேபி-யின் மனதில் இருந்துகொண்டேதான் இருந்தது.

பின்னர் ‘தில்லுமுல்லு’ படப்பிடிப்பில் ஒரு சந்தர்ப்பம். “ரஜினி... ‘அவர்கள்’ ஷூட்டிங்ல உன்னை ரொம்பத் திட்டிட்டேன்பா!” என்று குரல் தாழ்ந்து ரஜினியிடம் கேபி சொல்ல, “ஆமா சார்... ஜெய்கணேஷைக் கூப்பிடச் சொல்லிட்டீங்க. எனக்கு வயிறு கலங்கிடுச்சு” என்று கள்ளமில்லாமல் ரஜினி சிரிக்க... மனதால் ரஜினி ஒரு குழந்தை என்பதை உணர்ந்த கேபியும் சேர்ந்து சிரித்தார்.

தயங்கிய தயாரிப்பாளர்கள்

வரிசையாக வெற்றிகளைக் கொடுத்து வந்த கேபி, சமூகத்தின் மீது சாட்டையைச் சுழற்றும் படங்களின் வழியாகத் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தை நிறுவியிருந்தார். ‘பாலசந்தர் அந்த இன்ஸ்டிடியூட் பையனுக்குத் தொடர்ந்து வாய்ப்புக் கொடுக்குறார்னா... அவனுக்குத் திறமை இல்லாமலா கொடுப்பார்?’ என்று ‘அவர்கள்’ படத்தின் படப்பிடிப்புக்குப் பல தயாரிப்பாளர்கள் படையெடுத்தார்கள். ரஜினியைத் தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய வந்தவர்கள், அவரை நேரில் பார்த்ததும், ‘அட! என்னய்யா இது? ஆளு அட்டக்கரியாக இருக்கான்’ என்று ஓடிப்போனார்கள்.

‘அவர்கள்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ரஜினி ராயப்பேட்டையில் குடியேறியிருந்தார். தன்னுடன் நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் படித்த சக மாணவ நண்பன் முரளியின் வீடு ராயப்பேட்டையில் மியூசிக் அகாடமியின் பின்னால் இருந்தது. அந்த வீட்டின் மொட்டை மாடியில் தென்னங்கீற்று வேய்ந்த குடிசை போன்ற சிறிய போர்ஷன் இருந்தது. அதைப் பார்த்த ரஜினிக்கு அது பிடித்துப்போய், அங்கே தனது ஜாகையை மாற்றிக்கொண்டார்.

பரட்டை உருவான கதை

அந்தச் சமயத்தில் அவரிடம் கதை சொல்ல வந்தார் சின்னச்சாமி என்கிற ஓர் உதவி இயக்குநர். வந்தவர், “என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்றார். ரஜினியோ “ஆமாம்.. நீங்கள் ‘கதா சங்கமா’ படத்தில் புட்டண்ணா சாரிடம் பணியாற்றினீர்கள் அல்லவா?” என்றார். ‘என்னவொரு நினைவாற்றல்!’ வியந்துபோன சின்னச்சாமி, “புட்டண்ணாவின் ‘கதா சங்கமா’ மூன்று கதைகளின் தொகுப்பு. நான் ஒரே கதையை எடுக்கிறேன். பெயர் ‘மயில்’. ‘கதா சங்கமா’ போல இதுவும் கலைப் படம்தான். அந்தப் படத்தின் கடைசி கதையான ‘முனித்தாயி’யில் நீங்கள் செய்த கேரக்டர் எப்படி அங்கே உங்களுக்குப் பெயர் பெற்றுக் கொடுத்திருக்கிறதோ... அதேபோல இந்தக் கேரக்டர் தமிழ்நாட்டில் பெயர் பெற்றுத்தரும். ‘முனித்தாயி’யில் நீங்கள் நடித்த கதாபாத்திரத்தின் சாயல்கூட இந்தக் கேரக்டரில் கொஞ்சம் உண்டு.

கலைமணி என்கிற என்னுடைய நண்பன் வசனங்களை எழுதியிருக்கிறான். நீங்கள் இன்ஸ்டிடியூட் மாணவர். உங்களுக்குத் தெரியாதது அல்ல; இந்தப் படத்தை விருதுக்காக எடுக்கிறோம். குறைந்த பட்ஜெட். அதற்கேற்ப உங்கள் சம்பளத்தை வாங்கிக்கொள்ள வேண்டும்” என்று கெஞ்சலாகச் சொன்னார் சின்னச்சாமி. ரஜினி அவரிடம், “எவ்வளவு தருவீர்கள்?” என்றார். “மூவாயிரம் வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார். ரஜினியும் சம்மதித்தார். ஆனால், படத்தை முடிக்கும்போது அந்தச் சம்பளத்திலும்கூட 500 ரூபாயைக் கொடுக்க முடியாத நிலை தயாரிப்பாளருக்கு ஏற்பட்டது.

5 லட்சம் ரூபாயில் ‘மயில்’ கதை திரைப்படமாகி விட்டது. ‘மயில்’ என்கிற தலைப்பு இருந்தால் வியாபாரம் ஆகாது என்று பலரும் சொன்னதால் ‘16 வயதினிலே’ எனத் தலைப்பை மாற்றியும் பார்த்துவிட்டார்கள். படம் பார்க்க வந்த விநியோகஸ்தர்கள் ‘படம் ஒரு பைசாவுக்குக்கூட தேறாது’ என்று கூறிவிட்டுப்போனார்கள். அறிமுக இயக்குநர் சின்னச்சாமி…. மன்னிக்கவும் பாரதிராஜா துடித்துப்போனார். ஆனால், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு நம்பிக்கையோடு சொந்தமாக ரிலீஸ் செய்தார். படம் தாறுமாறான வெற்றி. ‘அபூர்வ ராகங்களும் ‘மூன்று முடிச்சு’ம் படித்த நடுத்தர வர்க்கப் பார்வையாளர்களிடம் ரஜினியைக் கொண்டுபோய் சேர்த்தன என்றால், ‘16 வயதினிலே’ ரஜினியைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்த்தது.

‘இது எப்படியிருக்கு?’ என்று ரஜினி பேசிய பன்ச் வசனம், எளிய மக்களின் மனதில் பச்சென்று ஒட்டிக்கொண்டது. அப்படிப்பட்ட ‘16 வயதினிலே’ படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ‘ஹவுஸ்ஃபுல்’ காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் ஏ.வி.எம் ஸ்டுடியோவிலிருந்து கையில் காலணா பணமில்லாமல், பேருந்தில்கூட பயணிக்க முடியாத இக்கட்டான நிலையில் வீட்டை நோக்கி நடந்தே சென்றுகொண்டிருந்தார் ரஜினி.

அப்போது ரஜினியை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் சிலர், “ஏ பரட்டை... இது எப்படியிருக்கு?” என்று அவரைப் பார்த்து கத்தினார்கள். சிலர் ஓடி வந்து கைகுலுக்கினார்கள். தன்னை ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டதற்காக சந்தோஷப்படுவதா... கையில் பணமில்லாமல் இப்படி நடந்து செல்வதற்காக வருத்தப்படுவதா? ரஜினியின் கண்கள் அப்போது கலங்கித்தான் போயின.
படங்கள் உதவி: ஞானம்

(சரிதம் பேசும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE