கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியினரே பார்த்து வியப்பது, எடப்பாடியாரின் உச்சகட்ட உழைப்பைத் தான். தனக்கெதிராய் நின்ற அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து, தேர்தல் களத்தில் தனி ஒருவன் என முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடியார்.
80 ஆண்டு பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான கருணாநிதியே, 2016-ல் தேமுதிக தங்கள் அணிக்கு வரவில்லை என்றதும் சோர்ந்து போனார். தேர்தலுக்கு முன்பே திமுகவின் தோல்வியை ஒப்புக்கொண்டது போலவே இருந்தது அவரது பிரச்சார முறை. இதைக் கவனித்து, “நீங்கள் மற்ற கட்சிகளுக்குப் போடும் ஓட்டுக்கள் அனைத்தும் வீணாகிவிடும். எனவே, வெற்றிபெறும் எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று பேசி, வாக்குகளைக் கவர்ந்தார் ஜெயலலிதா.
‘10 ஆண்டுகளாக ஒரே ஆட்சி என்பதால் மக்களுக்கு ஏற்படுகிற சலிப்பு, எதிர்விளைவுகளை மட்டுமே தருகிற பாஜக கூட்டணி, வெற்றி நிச்சயமல்ல’ என்று திசையெட்டும் இருந்தும் வருகின்ற கருத்துக்கணிப்புகள் என்று பல பலவீனங்கள் இருந்தாலும் எடப்பாடி கே.பழனிசாமி களத்தில் கம்பீரமாக நிற்கிறார். யார் என்ன சொன்னாலும் இந்தத் தேர்தலில் அவருடைய உழைப்பு அசாதாரணமானது.