கட்டக்காளை - 14

By மதுரை ஒ.முருகன்

வைக்கிற வெள்ளாமையா இருந்தாலும், வாழ்ற வாழ்க்கையா இருந்தாலும்… அந்தந்தப் பருவத்தில, அதது நடந்தாகணும். சின்னவயசுல, தறிகெட்டுத் திரிஞ்ச கட்டக்காளை, இன்னைக்கு நாலு பேரு மதிக்கிற மனுசனா வாழ்ந்தாலும், அஞ்சாறு வருசமா… பிள்ளையில்லாம தவிச்ச தவிப்பும், காதுல கேட்ட வார்த்தைகளும் சொல்லி மாளாது. அத்தனையும் தாங்கிட்டுத் திரிஞ்ச கட்டக்காளைக்கு, இப்ப வம்சம் விரித்தியாகிருச்சுன்ற பூரிப்பு…

‘ஒத்தப் பிள்ளைகொடு சாமி’ன்டு கோயிலு கோயிலா அலைஞ்ச கட்டக்காளைக்கு, சாமி, ரெட்டப் பிள்ளையாக் குடுத்துருச்சுன்றத நெனச்சு மகுந்து போயிருந்தா கழிச்சியாத்தா.

பேரங்கள எப்பப் பாக்கப் போகணுமின்ற நெனப்பாவே இருந்தா. பேருகாலமான வீட்டுல, மாசந்திரும்பற வரைக்கும் அன்னந்தண்ணி பொழங்கமாட்டாளுகன்டு, நாள் நட்சத்திரம் வரட்டுமின்டு காத்துக் கெடக்கவா முடியும்… தவிச்சுப்போனா.
வாரிசு இல்லாம போயிருமோன்டு இருந்த கட்டக்காளைக்கு, ரெட்ட மாட்டுக்காளை கெணக்கா ரெண்டு பிள்ளைக பேரு சொல்ல வந்திருச்சின்ற தெம்பு வந்தாலும், நடவு நடணுமின்டு தேக்கி வச்ச தண்ணிய ஒடச்சு, கலவரத்த தூண்டத் தெறிஞ்ச, காரணத்த தேடி மனசு அலையிது…

பத்தாளுகள கூட்டிக்கிட்டு அரமணைக்கு போனான் கட்டக்காளை…

நடந்த விஷயத்தச் சொல்லி, “கம்மாமடைய ஒடைக்க அரமணைதான் உத்தரவு போட்டதா சொல்றாங்க பாண்டியா… அரமணை கோபத்துக்கு ஆளாகிறமாரி, ஆரும் எதுஞ் செய்யலயே…நெல்லு நட ஆசப்பட்ட சனத்த, வகுத்துல அடிச்சதுமாரி செஞ்சுபிட்டாங்
களே…”ன்டு கட்டக்காளை கேட்டான்.

அரமணையிலயே வந்து கேள்வி கேக்கிற தாட்டியம் வந்திருச்சான்ற கோபம் வந்தாலும்… பழய அதிகாரம், அரமணைக்கு இல்லன்றத வெளிக்காட்டாம… மடைய ஒடச்ச எரம்மநாயக்கரு, கினிங்கட்டிமாயன் மத்த ஆளுகளையும் கூட்டியாரச் சொன்னார் பாண்டியன்.

 “அரமணைப் பேரக் கெடுக்கிற காரியத்த, ஏன்டா செஞ்சீங்க… படவா”ன்டு அவனுகள எச்சரிச்சு அனுப்பி வச்சாரு.
கம்மா மடைய ஒடச்சு, கலவரத்த உண்டு பண்ணப் போட்ட திட்டத்த இல்லாம பண்ணியாச்சுன்ற நிம்மதி இருந்தாலும், கமலையில எறச்சு, கூடுன வெள்ளாம செய்ய முடியலன்ற ஏக்கம், சனத்த வாட்டி வதைக்கத்தான் செய்யிது.

ஆசப்பட்டவெள்ளாமயச் செய்யமுடியாம நெல்லுக்கஞ்சிக்கு அலமலந்து கெடக்கிற சனத்த நெனச்சு வேதனப்பட்ட கட்டக்காளை, அதுக்கான வழியத் தேடிக்கிருந்தான்.

 “பிள்ளப் பெறந்து முப்பதுவர, இந்த உசுறு காத்துக் கெடக்காதுப்பே… இப்பயே அஞ்சாறு நாளாச்சு… இன்னமும் போயிப் பாக்காம இருந்தா மெச்சிக்கிருவாளுகளா…” கழிச்சியாத்தா கேட்டா.

கண்ணுக்குள்ளயே இருக்கிற தாம் பேரங்களைப் பாக்கப் போகணுமின்ற நெனப்பு அவள ஒரெடத்துல இருக்கவிடல…
எனக்குச் சொல்லல, ஒனக்குச் சொல்லலன்டு, ஆரும் விக்கிக்கிட்டும், வெடச்சிக்கிட்டும் திரியப்பிடாதின்டு, மூணாம் பங்காளி வரைக்கும் ஒண்ணு விடாமச் சொல்லி வச்சிட்டா கழிச்சியாத்தா…

விடியக் கெளம்புனமின்ற திட்டம்… ஒறக்கம் புடிக்கல… எப்படா விடியுமின்டு தாவாரத்தூண்ல சாஞ்சமானிக்க ஒக்காந்திருந்தா.
விடிவெள்ளி… கெழக்காம ‘மினுக்மினுக்’ன்டு, மின்னிக்கிருக்கு…

கொட்டத்துலயும், மரத்துலயும் அடஞ்சு கெடந்த கோழி, ஒண்ணுக் கொண்ணு கொத்திக்கிட்டிருக்கு… ‘கெக்…கெக்…’ன்டு கோழிச் சத்தம் கழிச்சியாத்தாளுக்கு நாபகப்படுத்திருச்சு… தலமசுற ஒதறிக் கொண்ட போட்டுக்கிட்டு எந்திரிச்சா.
 “அடியே… பின்னாயி…”

கழிச்சியாத்தா ராகம் போட்டுக் கூப்பிட்ட சத்தம் பின்னாயிக்கு தோராட்டுற மாரிக் கேக்க, எந்திரிக்க மனசில்லாம ஒறக்கத்தில பெரண்டு பெரண்டு படுத்தா…

“யே… அன்னத்தாயி… அடியே… பின்னாயி எந்திரிங்கடி… விடிஞ்சு போச்சு”

 பெலக்கா அதட்டிச் சத்தம்போட்டுக் கூப்பிட்டா…

“இந்நேரத்துக்கு எதுக்கு கூப்பிடுறா…” ன்டு சொல்லிக்கிட்டே பின்னாயி எந்திரிச்சு வந்தா.

அவகிட்ட, “ஏண்டி… என்னென்னத்த எடுத்து வைக்கணுமின்டு அம்பிட்டயும் தயாருப் பண்ணி வச்சமே… கோழியப் புடிச்சு கவுத்து வைக்கணுமின்றத விட்டுட்டோம் பாத்தியா…” ன்டு சொன்னா கழிச்சியாத்தா.

அவ சொன்னப் பெறகுதான் பின்னாயிக்கே புடிபட்டுச்சு… பாதி ஒறக்கச் சாடையில கண்ணத் தொடச்சுக்கிட்டு வந்த அன்னத்தாய கூட்டிக்கிட்டு கோழியப் புடிக்கப் போனா பின்னாயி.

வெடக்கோழி, குஞ்சுத் தாக்கோழி, சேவல்ன்டு கொட்டத்தில அடஞ்சு கெடக்கு… சம்சாரி வீடுன்டா சகலமும் இருகணுமின்றது கட்டக்காளை வீட்டிலதான் சரியா இருக்கு.

வெள்ளையும், கருப்புங்கலந்த நெறத்தில, வட்டக்கண்ண உருட்டி ‘கெக்..கெக்..’ ன்டு கொக்கரிச்சுக்கிட்டே… கழுத்த ஒரு சிலுப்பு சிலிப்பி, எந்திரிச்சு நின்டத வெளக்கு வெளிச்சத்திலப் பாத்த அன்னத்தாயி, மயிலா சேவலான்டு செத்த வெடம் தெகச்சுப்போனா…
 “சின்னப்புள்ள கெணக்கா வேடிக்க பாத்துக்கிட்டு நிக்காம… பொத்துனாப்பில போயி புடி… பறந்து ஓடிறப்போது…”ன்டு சொல்லி பின்னாயி எச்சரிச்சா.

வேடிக்க பாக்கிறத விட்டுட்டு கோழியப்புடிக்க ஆரம்பிச்சா அன்னத்தாயி.

கோழி புடிக்கிறதுல, பின்னாயி கெட்டிக்காரின்றதால விசுக்குவிசுக்குன்டு புடிச்சு பஞ்சாரக்கூடையில அடச்சு வச்சா…
பத்துக் கோழியாச்சும் புடிச்சிருப்பா

“நெத்தம் ஒண்ண அடிச்சுக் குடிக்கட்டும்… ரெண்டு பிள்ளைக்கும் பாலு வேணுமில்ல…” சொல்லிக்கிட்டே வந்த பின்னாயி…  “போயித் துணிய மாத்திக்கிட்டு வாடி, வெரசாக் கெளம்பணும்…”ன்டா.

பளப்பளன்டு விடிஞ்சிருச்சு. புதூர் தொத்தமாயி வண்டியும், எடையப்பட்டி பெருமாக்கோனாரு வண்டியும் வீட்டு முன்னால வந்து நின்றுச்சு…

 ஒச்சுக்காளையும் வண்டி மாட்டக் குளுப்பாட்டி காத்திருந்தான்…

பிள்ள பெறந்தத பாக்கப் போற சொந்த பந்தமெல்லாம் வந்துட்டாக… ஒச்சுக்காளை, வீரனன், அன்னத்தாயி, பின்னாயி, பக்கத்து வீட்டு மாயக்கா, பேச்சின்டு ஆளாளுக்கு சாமாஞ்செட்ட ஒரு வண்டியில ஏத்துனாக.

 மத்தவண்டியில ஆளுக ஏற எல்லாத்தயும் ஒழுங்கு பண்ணிவச்ச கழிச்சியாத்தாளும், கட்டக்காளையும் கடசி ஆளா வண்டியில ஏறி ஒக்கார, ஓட்டமும் நடையுமா வண்டி, ஓனாப்பட்டிக்கு வந்து சேர்ந்தாச்சு…

ஆம்பளப்புள்ள பெத்துப்பிட்டமின்ற வெறப்பும் வீராப்பும் நடந்து வரதோரணையிலயே தெரியுது…

பின்னத்தேவன் வீட்டாளுக வாசல்ல காத்திருந்து வரவேத்தாக…

உள்ளுத் திண்ணையில கட்டுல்ல ஒக்காந்திருந்த லச்சுமாயி, தனக்கும், தாம் புள்ளைக்கும் பெருமை சேக்க வந்த கூட்டத்தப் பாத்துப், பூரிச்சுப் போனா… லச்சுமாயிக்கு ஒத்தாசையா அவுக அக்காக ஊடாமாடா வேல செஞ்சுக்கிட்டுருந்தாக.

கொண்டு வந்த சாமானெல்லாம் எறக்கி வச்ச வெரசு தெரியல… அம்புட்டுப் பேரும் ஓடிப்போயி, கட்டுல கெடந்த பிள்ளைகளத் தூக்கி கொஞ்ச ஆரம்பிச்சுட்டாக…

 “ஏம்பேரன… நாம்பாக்கணுமிடி… வெலகுங்க…” சொல்லிக்கிட்டே ஒரு பிள்ளையத் தூக்குன கழிச்சியாத்தா, “அப்பிடியே… அவுக சிய்யான உறுச்சுவச்சிருக்கான்… ஏஞ்செல்லம்…”ன்டு கொஞ்சுனா.

 “கண்ணு வச்சுப்பிடாதீங்கடி… போங்க,போயி ஆக வேண்டிய மத்த வேலையப்பாருங்க…” ன்டா.

 “ம்க்கும்… ஓம் பேரங்களப் பாத்த ஒடனே, மத்தாளுகெல்லாம் ஒனக்குத் தெரியாதே… பிள்ளப் பெத்தவள ஆராச்சும் வெசாரிச்சீங்களா… அங்க பாரு, மூஞ்சியத் தொங்கப் போட்டுக்கிருக்கு...”

அன்னத்தாயி கழிச்சியாத்தாள சீண்டிப்பாத்தா…

 “ஆத்தே… ஏம்மருமக இல்லாமலா…”ன்டு சொல்லிக்கிட்டே கண்ணத்தத் தடவி நெஞ்சோட அணைச்சிக்கிட்டா.

“முட்டு வீட்டுல சாப்புடமாட்டமின்ற மருளாளிக ஆருமில்லையில்லடி… இங்கனயே சோறாக்கலாமில்ல…”
கழிச்சியாத்தா கேட்டா.

 “அதெல்லாம் சாப்புடலாம்… எங்கனயும் ஆக்கு…” எல்லாப் பொம்பளைகளும் ஒண்ணு சொன்னா மாரிச் சொன்னாக.
கொண்டுக்காந்த கோழியப் புடிச்சு அறுக்க ஆரம்பிச்சிட்டா அன்னத்தாயி…

பிள்ளைகள கட்டுல்ல படுக்க வச்சிட்டு எந்திரிச்சு வந்த கழிச்சியாத்தா, வெள்ளப்பூட உருச்சு, நல்ல எண்ணெயவிட்டு வதக்கி பக்குவமா எடுத்துவச்சா... பின்னாயி கருப்பட்டியத் தட்டி எடுத்துவச்சா.

ஆளாளுக்கு ஒரு வேலைய மும்பரமா பாக்க ஆரம்பிச்சாட்டாக.

காயங்கருப்பட்டிய நெத்தமும் இத்துனூன்டு திண்டுக்கந்தா, பிள்ளப் பெத்த ஒடம்புல இருக்கிற கெட்ட கழிவிலருந்து, உள்ளுக்காயம் வரைக்கும் எப்பேர்ப்பட்ட நோவும் காணாமப் போயிருமிண்டு பெரியாளுக சொல்லிருக்காங்க. அதனால, பிள்ளப் பெத்தவகளுக்கு, காயம்கருப்பட்டி செஞ்சுகுடுக்கிணுமின்றது வழக்கம்.

இதுக்காகவே கடமருந்துன்டு, வால்மொளகு, கருமொளகு, வெள்ளமொளகு, சித்தரத்த, குதிரஓமம், தவிட்டோமம், சுக்கு, திப்பிலி, லேசாவரமின்டு என்னெனத்தையோ வாங்கியாந்து, வரையோட்டுல போட்டு, பதமா வறுத்தா கழிச்சியாத்தா.

வறுத்த கடச்சரக்கு எல்லாத்தையும், ஒரல்ல போட்டு மாவா இடிச்சு, சொளகுல போட்டு தெள்ளிப்பொடச்சு எடுத்து, நல்லண்ணெய ஊத்தி, வதக்கிவச்ச வெள்ளப்பூடயும், தட்டிவச்சக் கருப்பட்டியயும் சேத்து நல்லா பெசஞ்சமின்டா… அப்படி ஒரு வாசனை.

 மூக்குக்குள்ள முணுமுணுன்ட, நாக்குச் சொட்டாம் போடும்… நெல்லிக்கா சைசுல, ஒத்தொத்த உருண்டையா வச்சுவச்சுத் திங்கலாம்.
இத்தன சேருமானமுஞ் சேந்த உருண்டைய வாயில போட்டமிண்டா… உள்நாக்கு வரைக்கும் சுருச்சுருங்கும்.

மொதல்ல லச்சுமாயிகிட்ட குடுத்து திங்கச் சொன்ன கழிச்சியாத்தா, ஒரு உருண்டைய வாயில போட்டுக்கிட்டு, மத்த ஆளுகளுக்கும் குடுத்தா.

எல்லாரும் வாங்கி லபக்கின்டு வாயில போட்டுச் சப்பிக்கிட்டே இருந்தாக…

கல்லு அடுப்புல வச்ச சோத்த வடிச்சு முடிக்க… கோழி கொழம்பும் கொதிக்க சரியா இருந்துச்சு.

 தீயக்கொறச்சு வச்ச பெருமாயி, கொதி அடங்கவும், கொழம்புச் சட்டிய பொத்துனாப்பில எறக்கிவச்சா.

 சின்ன ஒலம்பட்டியில கோழிக் கொழம்ப ஊத்தி, ரெண்டு ஈரலயும், பல்லுக்கு எதமா நாலு கறித்துண்டையும் தேடிப்புடிச்சு எடுத்துப்போட்டு, நல்ல எண்ணெய ஊத்தி சுடச்சுட லச்சுமாயிய குடிக்கச்சொன்னா.

சின்ன வெங்காயம், சீரகம், குரு மொளகு எல்லாம் சேத்து அரைச்சு வச்ச கோழிக் கொழப்புச்சாறக் குடிச்சமின்டா… ஒடம்புல இருக்கிற எல்லா சளியும் வெளியேறி, ஒடம்பு தெளிச்சியாயிருமாம். அதாங், லச்சுமாய, சுடச்சுட கோழிக் கொழம்பக் குடிக்கச் சொன்னா பெருமாயி.

அதே சூட்டோட, வந்திருந்த சம்மந்தகாரகளயும் சாப்பிடச் சொல்லி சோத்தப் போட்டுவச்சா…

போட்டு வச்ச சோத்த, ஒரு வாயி எடுத்துவைக்கல… கொல்ல நாளா சடவாத்திருஞ்ச லச்சுமாயி அண்ணன் மலராமன்… சீரில்லாம வந்து வாசல்ல நின்டுக்கிருக்கான்.

(தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE