கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
10 பேர் இருக்கும் இடத்தில் 8 கோஷ்டி, அந்தக் கோஷ்டிச் சண்டையில் 12 வேட்டி கிழிந்தால் அது காங்கிரஸ் கட்சி அலுவலகம் என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. அதை மறுபடியும் மானசீகமாய் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் தமிழ்நாடு காங்கிரஸார்.
ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணு பிரசாத் எம்பி தலைமையில் ஒரு கோஷ்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த, கே.எஸ்.அழகிரி தரப்போ அதைக் கண்டித்து உண்ணும் விரதம் நடத்தியது. அந்த கோஷ்டி, “விஷ்ணுபிரசாத் வாழ்க” என்று கோஷமிட்டால், இந்தக் கோஷ்டி, “அழகிரி வாழ்க” என்று கோஷமிட்டது. இதெல்லாம் ஊடகங்களில் மாறிமாறி ஒளிபரப்பாகின.
ஒரு வழியாக அன்று நள்ளிரவில் அனைவரும் தூங்கப் போனபிறகு(!) வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. 21 வேட்பாளர்களில் பெரும்பாலானோர் முன்னாள் தலைவர்கள், எம்பி-க்களின் கோட்டாவில் வந்தவர்கள். இன்னும் சிலர் வாரிசுகள், பணபலம் படைத்த தொழிலதிபர்கள். அப்படியும் முழுமையாக பட்டியலை அறிவிக்க முடியவில்லை. 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நிறுத்தி வைத்தார்கள். 6 நாள் கழித்து வெளியான அந்தப் பட்டியலிலும் முன்னாள் எம்பி-யான ஹாரூணின் மகன் ஹசன் மௌலானாவுக்கு வேளச்சேரியை ஒதுக்கி, வாரிசு அரசியலை மீண்டும் நிரூபித்தார்கள்.
பணக்காரர்களுக்கு மட்டும் சீட்டா?