கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
மதுரை என்றால் மீனாட்சியம்மன் கோயில், சித்திரைத் திருவிழா, திருமலை நாயக்கர் மஹால் போன்ற அடையாளங்களுடன் பளிச்சென நினைவுக்கு வரும் பிரபலம் செல்லூர் கே.ராஜூ. அதிமுக அரசின் சீனியர் அமைச்சர். மதுரைக்கு மத்திய அமைச்சர்கள் வந்தால்கூட செய்திச் சேனல்காரர்கள் அதிகம் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், செல்லூரார் பேட்டி என்றால், திருவிழாக் கூட்டம்தான்.
“மதுரையை சிட்னியாக மாற்றுவேன்”, “வைகை ஆற்றில் தேம்ஸ் போல தண்ணீர் ஓடும்” என்று எதையாவது சொல்லி, தினமும் தன்னை ‘ட்ரெண்டிங்கில்' வைத்துக் கொள்ளும் கில்லாடி அமைச்சர். சில நேரங்களில் அவர் அடிக்கிற ஜோக்குகள், சீரியஸாகிவிடும்.
“அதிமுகவுக்கு அடுத்து ஒரு பெண்கூட தலைமை தாங்கலாம்” என்று ஒருமுறை பெண்கள் மத்தியில் அவர் பாட்டுக்கு ஜாலியாகப் பேசி விட்டார், கோட்டையே கிடுகிடுத்துவிட்டது. “அழகிரி மட்டும் திமுக தலைவராக இருந்திருந்தால் நாங்கள் அச்சத்துடன் இருந்திருப்போம். பாவம், ஸ்டாலின் தலைமைப் பதவிக்குத் தகுதியில்லாதவர்" என்று கருணாநிதி குடும்பத்திலும் குண்டு போட்டவர்.