வீட்டுக்கு ஒண்ணு... விசுவாசிக்கு ஒண்ணு!
காரைக்குடியில் போட்டியிட, கடந்த ஒரு வருடமாக பணத்தை வாரி இறைத்து வந்தார் சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளர் செந்தில்நாதன். கட்சி நிர்வாகிகளுக்கும் பண்டிகை நாட்களில் தாராள கவனிப்புகளை நடத்தினார். ஆனால், எச்.ராஜா குறுக்கே புகுந்து ஆட்டையைக் கலைத்துவிட்டார். ராஜாவுக்காக காரைக்குடியை பிடிவாதமாகக் கேட்டு வாங்கியது பாஜக தலைமை. அதனால், செந்தில்நாதனை சிவகங்கை தொகுதிக்குத் திருப்பிவிட்டது அதிமுக தலைமை.
இதனிடையே, செந்தில்நாதன் காரைக்குடியில் களமிறங்கினால் தனக்கு கஷ்டம் என நினைத்து காரைக்குடிக்கு தனது விசுவாசியான வேலுச்சாமியையும் விருப்ப மனு கொடுக்க வைத்தார் சிட்டிங் எம்எல்ஏ-வும் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவருமான கே.ஆர்.ராமசாமி. இப்போது காரைக்குடி, திருவாடானை இரண்டுமே காங்கிரஸுக்குக் கிடைத்துவிட்டதால் திருவாடானையில் தனது மகன் கருமாணிக்கத்தையும் காரைக்குடியில் வேலுச்சாமியையும் நிறுத்த பிளான் போடுகிறாராம் கே.ஆர். காரைக்குடிக்கு கார்த்தி சிதம்பரம் தரப்பிலிருந்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாங்குடியை சிபாரிசு செய்திருக்கிறார்களாம்.