இனி எல்லாமே ஏ.ஐ - 12: அதிநவீன ஷெர்லாக் ஹோம்ஸ்

By சைபர்சிம்மன்

துப்பறியும் கலையில் நிகரில்லாத வல்லுநராகக் கொண்டாடப்படும் ஷெர்லாக் ஹோம்ஸ், ஒரு கற்பனைப் பாத்திரம்தான். ஒருவேளை, அப்படி ஒரு பாத்திரம் ரத்தமும் சதையுமாக, இன்றைக்கு நம் முன்னர் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இன்றைய நவீன யுகத்தில் ஷெர்லாக்கின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?

ஷெர்லாக் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கில்லாடியாக இருப்பார். விக்டோரியா காலத்திலேயே அப்போதைய தொழில்நுட்பப் புதுமையான தந்தி சேவையைத் திறம்படப் பயன்படுத்தியவர், தற்காலத்தில் கணினியையும், ஸ்மார்ட்ஃபோனையும் வைத்துப் புகுந்து விளையாடுவார் என்று நம்பலாம்.

மிக முக்கியமாக, தனக்காகத் தகவல் சேகரிக்கும் பணிக்காகவும், தன்னிடம் உள்ள தரவுகளிலிருந்து தேவையான தகவலைப் பிரித்துத் தரும் வகையிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருட்களை ஷெர்லாக் நிச்சயமாகப் பயன்படுத்துவார். கூடவே, “வாட்ஸன், உங்களுக்குத் தெரியுமா? குற்றவாளிகளின் மனநிலையை ஆய்வுசெய்யும் புதிய ஏ.ஐ மென்பொருளை உருவாக்கியிருக்கிறேன்” என்று தன் சகாவிடம் ஷெர்லாக்பெருமிதத்துடன் சொல்வார். “தீர்க்கமுடியாத மர்மத்தை விடுவிப்பதுதான் என் வேலை. மற்றபடி தரவுகளைத் திரட்டுவதை எல்லாம் மென்பொருளிடம் விட்டுவிடலாம்” என்றும் தனது பாணியில் வாட்ஸனிடம் அவர் கூறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

காவல் துறையில்...

ஷெர்லாக்கை விடுங்கள்... நவீன காலத்து காவல் துறையினர், செயற்கை நுண்ணறிவு சேவையைச் சிறப்பாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். ஆம்! பிற துறைகளைப் போலவே காவல் துறையிலும் ஏ.ஐ நுட்பம் அற்புதங்களை நிகழ்த்தத் தொடங்கியிருக்கிறது.

மற்ற துறைகளைவிட தாமதமாகவே காவல் துறையில் ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. எனினும், குற்றப் புலனாய்வில் தொடங்கி, குற்றங்களைத் தடுப்பது, குற்றவாளிகளைத் தேடுவது, தடயங்களை ஆய்வுசெய்வது, சந்தேகத்துக்குரியவர்களைக் கண்காணிப்பது எனப் பலவிதமான பணிகளில் உலகம் முழுவதும் உள்ள காவல் துறையினர் ஏ.ஐ நுட்பத்தை ஆர்வத்துடன் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.

இதில் ஆச்சரியம் கொள்ளவும் அவசியம் இல்லை தான். ஏனெனில், காவல் துறைச் செயல்பாடு என்பது ‘இன்ஃபர்மேஷன்’ எனப்படும் தகவல்கள் சார்ந்ததாகவே இருக்கிறது. கடந்தகால வழக்குகள், குற்றவாளிகளின் நடத்தைப் போக்குகள் என ஏராளமான தரவுகள் காவல் துறையினருக்கு முக்கியமானவை. தகவல்கள், தரவுகள் இந்த இரண்டும்தான் ஏ.ஐ மென்பொருட்களுக்கான அடிப்படைத் தேவை. எனவே, காவல் துறைச் செயல்பாடுகளில் ஏ.ஐ நுட்பத்தின் பயன்பாட்டை இயல்பான ஒன்றாகவே எடுத்துக்கொள்ளலாம்!

மூன்றாவது கண்

உதாரணமாக, கண்காணிப்புப் பணியையே எடுத்துக்கொள்வோம். பெரிய நகரங்களில், எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் ரோந்து சுற்றுவது என்பதோ, குற்றம்செய்யத் திட்டமிடுபவர்களைக் கண்காணிப்பது என்பதோ காவல் துறைக்குச் சாத்தியம் இல்லாத ஒன்று. ஆனால், தற்காலக் காவல் துறைக்கு இந்த விஷயத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உதவிக்கு வருகின்றன.
ஏ.ஐ யுகத்தில், கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளைக் காவலர்கள் கண் வலிக்கப் பார்க்க வேண்டிய தேவையும் கிடையாது. சந்தேகத்துக்குரிய நபர் அதில் இருக்கிறாரா என்பதை அறிய வேண்டும் எனில், அவரது புகைப்படத்தைக் கொடுத்துவிட்டால் போதும். நாட்கணக்கில் பதிவான காட்சிகளை அலசிப்பார்த்து, அந்த நபர் இருக்கிறாரா, இல்லையா என்பதை மென்பொருள் தெளிவாகச் சொல்லிவிடும். மனித முகங்களை அறிந்து கொள்ளும் நுட்பம் (ஃபேஷியல் ரிகக்னேஷன்) இதைச் சாத்தியமாக்குகிறது.

தேடப்படும் குற்றவாளி பெருங்கூட்டத்தில் ஒருவராகமறைந்திருந்தாலும் அந்த மென்பொருள், அந்த ஆசாமி யைக் கண்டுபிடித்துவிடும். அதேபோல், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பது அல்லது வாகன லைசன்ஸ் எண்ணை அலசுவது போன்றவற்றிலும் இந்த நுட்பம் கைகொடுக்கும்.

புலனாய்வில் புதுமை

குற்றம் நடந்த இடத்துக்குக் காவல் துறை அதிகாரிகள் புலனாய்வுக்குச் செல்லும்போது, சம்பவ இடத்தை வெகுகவனமாக ஆராய வேண்டும். அங்கு இருக்கும் பொருட்களில் தடயங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த புலனாய்வு அதிகாரிக்கே சவாலான பணிதான் இது. கண்ணில் தெரியும் காட்சியில் எந்தப் பொருளைக் குறித்துக் கொண்டோம் என்பதும், எவை எல்லாம் பார்வையில் படாமல்போயின என்பதும் உறுதியாகத் தெரியாது.

இதுபோன்ற இடங்களிலும் ஏ.ஐ மென்பொருளை உதவிக்கு அழைக்கலாம். குற்றம் நிகழ்ந்த இடத்தை, கேமரா கண்களால் மென்பொருளால் பார்க்க வைத்தால், மனிதக் கண்களுக்குத் தெரியாத பொருட்களையும் அது, குறித்துவைத்துக்கொள்ளும். அதுமட்டுமல்ல, ஒரு காட்சியை, இதற்கு முன் நடைபெற்ற இதேபோன்ற குற்ற வழக்குக் காட்சிகளோடு ஒப்பிட்டுப்பார்த்து, தேவையான தடயங்களைத் துல்லியமாக இனம் காட்டிவிடும். சம்பவ இடத்தில் துப்பாக்கி சுடும் ஒலி கேட்டதா போன்ற கேள்விக்கும் ஏ.ஐ பதில் சொல்லிவிடும்.

பொதுவாக, துப்பாக்கி சத்தம் கேட்டது தொடர்பானவிவரங்கள் குற்ற வழக்குகளில் தெளிவாக அமைவதில்லை.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்களால்கூட, தோட்டா வெடித்த சத்தம் வந்த இடத்தைத் துல்லியமாக விவரிக்க முடிவதில்லை. ஆனால், சென்சார்களில் பதிவான விவரங்களை அலசுவதன் மூலம் ஏ.ஐ இதைக் கச்சிதமாக செய்துவிடுகிறது.

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது

அதுமட்டுமா, பொது இடங்களில் திருடர்களைக் கண்காணிக்கவும் ஏ.ஐ உதவி செய்யும். திருவிழா போன்ற கூட்டமான நிகழ்வுகளில் கண்காணிப்புப் பணியிலும் முகமறிதல் சார்ந்த நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளன. இந்த நுட்பங்களைக் கொண்டு, குற்றம் நடைபெறுவதற்கு முன்னரே, குற்றவாளிகளைப் பிடித்துவிட முடியும்.

இப்படிப் பலவிதங்களில் காவல் துறையில் செயற்கை நுண்ணறிவு வேகமான பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தாலும், இவற்றில் பல அம்சங்கள் சர்ச்சைக்குரியவையாக இருப்பதையும் மனதில் கொள்ள வேண்டும். குறிப்பாக, காவல் துறையின் முகமறிதல் நுட்பப் பயன்பாடு அண்மைக் காலமாகக் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இதில் உள்ள பிரச்சினைகள் என்ன எனத் தொடர்ந்து  அலசுவோம்!

ஏ.ஐ தரும் விடுதலை

சிறையிலிருந்து விடுதலையாகும் நபர்கள், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் கடமையும் காவலர்களுக்கு உண்டு. சில நேரங்களில், ஒருவரை எப்போது விடுதலை செய்வது சரியாக இருக்கும் எனும் கேள்வியும் எழலாம். இந்தச் சிக்கலுக்குத் தீர்வாகவும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த காலக் குற்றச் செயல்பாடுகள் சார்ந்த தரவுகளின் அடிப்படையில், குற்றவாளிகளை அலசி ஆராய்ந்து, அவர்கள் மீண்டும் குற்றத்தில் ஈடுபடுவதற்கான இடர் தன்மையை இந்த மென்பொருள் தெரிவித்துவிடும். இதன் அடிப்படையில் காவலர்கள் முடிவெடுக்கலாம்!

(தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE