கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இன்று துணை முதல்வர் என்றாலும் முதல்வர் பதவி மீதும் தனக்கொரு கண் இருக்கிறது என்பதை விளம்பரங்கள் வாயிலாக தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருப்பவர் ஓபிஎஸ். போடி தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை குறிவைத்து மீண்டும் களமிறங்குகிறார். எப்படியிருக்கிறது அந்தத் தொகுதியின் கள நிலவரம்?
ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக சிறப்பாகவேசெயல்பட்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுக்கு எந்தக் குறைச்சலும் இல்லை. காது குத்து, கல்யாணம், திருவிழா, கும்பாபிஷேகம் என்றால் முதல் மொய் ஓபிஎஸ் வீட்டில் இருந்து போய்விடுகிறது. ஆனால், அதையும் தாண்டி அவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தொகுதிக்காக இன்னும் சாதித்திருக்க வேண்டும் என்ற தொகுதி மக்களின் ஆசையை அவர் பூர்த்தி செய்யவில்லை.
திமுகவில் எப்படியோ தெரியாது, ஆனால், அதிமுகவில் முதல்வர் தொகுதி என்றால் மந்திரம் போட்டதுபோல அற்புதமாக மாறிவிடும் என்பதுதான் கடந்த கால வரலாறு. ஆண்டிப்பட்டி, ஸ்ரீரங்கம் தொகுதிகள் எல்லாம் பழைய உதாரணங்கள். எடப்பாடி தொகுதியும், கொங்கு மண்டலமும் நிகழ்கால உதாரணங்கள். ஆனால், அப்படி எதுவுமே போடி தொகுதிக்கோ, தேனி மாவட்டத்துக்கோ, மதுரை மண்டலத்துக்கோ ஓபிஎஸ் செய்யவேயில்லை என்கிற வருத்தம் இந்தப் பகுதி முழுக்க அலையாகப் பரவிக் கிடக்கிறது.