‘ஆல் பாஸ்’ அறிவிப்பும் அவஸ்தைகளும்!

By காமதேனு

கரோனாவைக் காரணம் காட்டி, 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்திருப்பதற்கு எதிராகப் பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. பெருந்தொற்றுக்கு நடுவே பள்ளிகளைத் திறப்பது, பாடத்திட்டங்களைக் குறைப்பது என்பன உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாகத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிக்கைகள், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்திவந்த நிலையில், முதலில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், பின்னர் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் மாணவர்கள் பள்ளி சென்றுவந்த சூழலில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் இந்த அறிவிப்பைச் சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருக்கிறார். கூடவே, மிச்சமிருக்கும் பாடத்திட்டங்களை நிறைவுசெய்ய மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இந்தத் தேர்வு ரத்து அறிவிப்பானது, சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்குப் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாகக் கல்வித் துறை சார்ந்த எவரிடமும் விவாதிக்கப்படவில்லை என்பதுதான் கவலையளிக்கும் விஷயம்!

கடந்த ஆண்டும் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டிருப்பது மாணவர்களின் கல்வித் தரத்தைப் பெரிதும் பாதிக்கும் எனும் அச்சம் எல்லாத் தரப்பிலும் எழுந்திருக்கிறது. இந்நிலையில், மாணவர்களின் கல்வித் தரம், பள்ளித் தேர்வுகளையும், போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் மனவலிமை எனப் பல்வேறு விஷயங்களில் கூடுதல் கவனத்தைப் பள்ளிக் கல்வித் துறை செலுத்த வேண்டும்.

மாணவர்களைத் தேர்ச்சி செய்யும் விஷயத்தில் உரிய வழிமுறைகள் கையாளப்பட வேண்டும். ஆட்சியாளர்களின் தெளிவற்ற நடவடிக்கைகளால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்பட்டுவிட்டது எனும் பழிச்சொல்லைத் தவிர்க்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் தமிழக அரசு செய்ய வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE