குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in
ஒரு காலத்தில், அதிமுகவை “முக்குலத்தோர் கட்சி” என்று கர்வமாய் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு சொன்னவர்கள் நிறையப் பேர் உண்டு. அதற்குக் காரணம், ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் இருந்த முக்குலத்துப் பெண்மணி சசிகலா.
முக்குலத்தோர் மீது எம்ஜிஆருக்கும் பாசம், பரிவு எல்லாம் இருந்தது. என்றாலும் ஜெயலலிதா காலத்தில் தான், முக்குலத்தைச் சேர்ந்த 7 பேர்அமைச்சர்களாக அதிமுக்கிய பதவிகளில் அமரவைக்கப்பட்டார்கள். ஊழல் வழக்கில் ஜெயலலிதா தற்காலிகமாக முதல்வர்
பதவியை இழக்க நேரிட்டபோதுகூட அந்த இடத்தில் முக்குலத்தோரான ஓபிஎஸ்ஸே அமரவைக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு அருகில் சசிகலா இருந்ததால் தான் இதெல்லாம் சாத்தியமானது என்று சொல்பவர்களும் உண்டு.
அதேநேரம், “ஒரு ஆட்சியையே வழிநடத்தும் இடத்தில் இருந்தாலும் ‘சசிகலா அண்ட்கோ’வால் முக்குலத்தோர் சமுதாயம் பெரிதாக எந்தப் பலனையும் கண்டுவிடவில்லை. முக்குலமும் தங்கள் பக்கம் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் தான் தங்களை (மட்டுமே) வளப்படுத்திக் கொண்டார்கள்” என்று குறைபட்டுக் கொண்டவர்களும் உண்டு. ஆனாலும் ஜெயலலிதா காலத்தில் முக்குலத்தோருக்கு இருந்த மரியாதையே தனிதான்.