இசைவலம்: தாசரின் தாலாட்டு!

By காமதேனு

வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

திரைப் பாடலாக இருந்தாலும் சரி, கர்னாடக இசைக் கச்சேரியாக இருந்தாலும் சரி, பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பின்பாட்டுப் பாடுவதாக இருந்தாலும் சரி, தன்னுடைய இனிமையான சாரீர வளத்தாலும் ஸ்ருதி சுத்தமான ராக சஞ்சாரத்தாலும் எந்தப் பாணி இசைக்கும் நியாயம் செய்பவர் பாம்பே ஜெயஸ்ரீ. அவர் தன்னுடைய ‘மூன் சைல்ட்’ யூடியூப் சேனலில் என்றென்றைக்கும் நம் நினைவில் நிறுத்திப் போற்றத்தக்க பாடல்களைப் பாடிப் பதிவேற்றி வருகிறார். அந்த வரிசையில், ‘ஜோ ஜோ ஜோ சாதுவன்டா’ எனத் தொடங்கும் பாடல் கர்னாடக இசை உலகில் மிகவும் பிரசித்தமானது.

கர்னாடக இசையின் பிதாமகராகப் போற்றப்படுபவர் புரந்தர தாசர். உலகத்தின் எல்லா ஜீவராசிகளுக்கும் தந்தையும் தாயுமானவனுமான இறைவனுக்கே ஒரு தாயின் அரவணைப்போடு புரந்தர தாசர் தாலாட்டுப் பாடுவதுதான் இந்தப் பாடலின் சிறப்பு. ‘உலகின் அனைத்து உயிர்களுக்குமான ரட்சகனே, படித்தவர் பாமரர் அனைவரும் போற்றும் திருவுருவே, கருட வாகனத்தில் பயணிப்பவனே...’ என்று அனந்தசயனனான பெருமாளுக்கே தாய் உள்ளத்தோடு தாலாட்டுப் பாடுகிறார் புரந்தர தாசர்.
பாடலின் ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவான உச்சரிப்போடு மந்திர ஸ்தாயியில் பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருப்பதைக் கேட்டால், நம்முடைய அன்றாடப் பரபரப்புகள், கோபங்கள், சிடுசிடுப்புகள் மறைந்து அமைதியின் ஆழத்தை உணர முடியும். ஆர்ப்பரிக்கும் நம் மனதை அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்போல் ஆக்கிவிடுகிறது சௌரப் ஜோஷியின் இசை. குறிப்பாக, பாடலின் இரண்டாவது சரணத்துக்கான இடையிசையில் ஒலிக்கும் லலித் தல்லூரியின் வேணு கானம்... விவரிப்பில் அடங்காதது!

அமைதியின் ஆனந்தத்தில் திளைக்க: https://www.youtube.com/watch?v=kUvYeK189jU

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE