குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in
சசிகலா விடுதலையால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று அழுத்தி அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்த அதிமுக முகாம் அலறிக் கொண்டிருக்கிறது.
சின்னம்மா வருகிறார் என்றதுமே அவசர அவசரமாய் அம்மா நினைவிடத்தை மூடியவர்கள் அடுத்ததாக, ‘சசிகலாவை அதிமுக கொடியை பயன்படுத்தாமல் தடுக்க வேண்டும்’ என்று டிஜிபி-யிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். ஆனால், எத்தனை தடை வந்தாலும் “அதிமுக கொடியோடு தான் தமிழ்நாட்டுக்குள் வருவேன்” என்று தீர்க்கமாக இருக்கிறார் சசிகலா.
ஜனவரி 27-ம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, 31-ம் தேதி கரோனா சிகிச்சைகள் முடிந்து விக்டோரியா மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனாலும் இளவரசிக்கு 5-ம் தேதி தான் விடுதலை என்பதால் அவரையும் அழைத்துக் கொண்டே சென்னை திரும்பும் முடிவில் இருந்தார். அதுவரை சசிகலா தங்கியிருப்பதற்காக பெங்களூரு தேவனஹள்ளி பண்ணை வீடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் டாக்டர் வெங்கடேஷ்.