தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் தருணத்தில், எல்லாமே அரசியல் மயமாகிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில், குடியரசு தினத்தன்று நடந்திருக்க வேண்டிய கிராம சபைக் கூட்டத்துக்கு, கரோனா பரவலைக் காரணம் காட்டி தமிழக அரசு அனுமதி மறுத்திருப்பதும் அரசியல் ரீதியான நடவடிக்கைதான் எனும் விமர்சனம் எழுந்திருக்கிறது.
ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்டு 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்களில் தமிழகத்தின் அனைத்துக் கிராமப் பஞ்சாயத்துகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். இந்தக் கூட்டங்களின் மூலம் அந்தந்தக் கிராமம் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பணிகள் நடைபெறும்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் முடங்கிக்கிடந்த நிலையில், எதிர்க்கட்சிகள் அதையே அரசியல் ஆயுதமாக கையில் எடுத்தன. தற்போதும், அரசியல் காரணங்களுக்காகவே திமுக அதை ஆயுதமாகப் பயன்படுத்துவதாக சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து, ‘கிராம சபை என்ற பெயரைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தமிழக அரசு எச்சரித்தது.
அப்படியெனில், கிராம சபைக் கூட்டங்களை, தானே நடத்துவதில் அரசு முனைப்பு காட்டியிருக்க வேண்டும் அல்லவா? கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கரோனா கட்டுப்பாடு குறித்து கவலைப்படாத ஆட்சியாளர்கள், கிராம சபைக் கூட்டம் என்று வரும்போது மட்டும் கரோனாவைக் காரணம் காட்டுவதை எப்படி ஏற்க முடியும்?