நீதித் துறை வெகுவேகமாக டிஜிட்டல்மயமாகி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். நீதிபதிகள் வழக்கு விசாரணையை வீடியோ சந்திப்பு மூலமும் நடத்தத் தொடங்கியிருக்கின்றனர். கரோனா தொற்று பாதிப்புக்கு நடுவே, நவீனத் தொழில்நுட்பம் மூலம் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் இது.
வழக்கு தொடர்பான ஆவணங்களை உருவாக்கித்தருவது முதல், சட்ட ஆலோசனைகள் வழங்குவது வரை, பல்வேறு சட்டப் பணிகளை ஏ.ஐ திறன் கொண்ட மென்பொருட்கள் இன்றைக்குச் செய்து முடிக்கின்றன. வழக்குக்கு முந்தைய விவரங்களை ஆலசி ஆராய்ந்து தகவல் அளிப்பதோடு, குறிப்பிட்ட வழக்கின் முடிவு எப்படி இருக்கும் என கணித்துச் சொல்லக்கூடிய ஏ.ஐ சாதனங்களும் பயன்பாட்டுக்கு வந்தாயிற்று. சுருக்கமாகச் சொன்னால், ஏ.ஐ நுட்பம் சட்டத் துறையைத் தலைகீழாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
வழக்கறிஞர்களின் நவீன துணை
நவீன வழக்கறிஞர்கள் சட்டப்புத்தகங்களைப் புரட்டுவதோடு, சட்ட மென்பொருள் சேவைகளையும் அதிக அளவில் பயன்படுத்திவருகிறார்கள். அதுமட்டுமல்ல, தானியங்கி நீதிபதிகள், ரோபோ வழக்கறிஞர்கள், சட்ட அரட்டை மென்பொருட்கள் என நீதித் துறையிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
வழக்குகளைக் கையாளும் சட்ட நிறுவனங்கள் போலவே, சட்ட செயல்பாடுகளைச் செயற்கை நுண்ணறிவு வாயிலாக எளிமையாக்கும் ‘ஸ்டார்ட் - அப்’ நிறுவனங்களும் இப்போது பிரபலமாகி வருகின்றன. உதாரணமாக, கனடாவைச் சேர்ந்த ‘புளூ ஜே லீகல்’ நிறுவனம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த வழக்கு முடிவு கணிப்பு இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. வரிகள் சார்ந்த வழக்குகளில் இந்தச் சேவை, 90 சதவீதம் துல்லியத்துடன் முடிவுகளைக் கணிக்கும் திறன் கொண்டிருப்பதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது.
நீதிமன்றப் படி ஏறுவதற்கு முன்பே, வழக்கு தொடுப்பதா, வேண்டாமா என தீர்மானிக்க, இந்த வழக்கு கணிப்பு மென்பொருட்கள் உதவும் என நீதித் துறையினர் கூறுகின்றனர். “அடுத்த பத்தாண்டுகளில், இந்தச் சட்ட அல்கோரிதம் தொழில்நுட்பங்கள் வழக்கு ஆலோசனைகளுக்கான இயல்பான தொடக்கப் புள்ளியாக அமையும்” என்கிறார் ‘புளு ஜே லீகல்’ சி.இ.ஓ பெஞ்சமின் அலாரி. ‘லிடிகேஷன் ஃபைனான்ஸ்’ எனப்படும், வழக்குகளுக்கு நிதி அளிக்கும் துறையிலும், இத்தகைய மென்பொருட்கள் உதவிக்கு வந்துள்ளன.
உலகளாவிய முன்னெடுப்புகள்
இதேபோல, இருதரப்பினருக்கு இடையிலான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கும் இப்போது ஏ.ஐ நுட்பத்தை நாடலாம். ஒப்பந்தங்களைச் சரி பார்ப்பதிலும் ஏ.ஐ முக்கியப் பங்கு வகிக்கிறது. அமெரிக்காவின் லாகீக்ஸ் (Lawgeex), கிளாரிட்டி (Klarity), கிளியர்லா (Clearlaw) உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கான தீர்வுகளை உருவாக்கி வருகின்றன. ஒப்பந்தங்களைப் பரிசீலித்து அவற்றை முழுவதுமாக அலசி ஆராய்ந்து சொல்லும் வகையில் இயற்கையான மொழியைப் புரிந்துகொள்ளக்கூடிய திறன் படைத்த ஏ.ஐ மென்பொருள் சேவைகளை உருவாக்கும் முயற்சியில் இந்நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்தத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேஸ்டெக்ஸ்ட் (Casetext) உருவாக்கியுள்ள கேரா (CARA) மென்பொருள் எதிராளியின் அடுத்தகட்ட நகர்வுகளைக் கணித்துச் செயல்படும் செஸ் கணினி போல, எதிர் வழக்கறிஞர்கள் முன்வைக்கக்கூடிய வாதங்களைக் கணித்துச்சொல்லும் திறன் கொண்டுள்ளது. முந்தைய வழக்குகளில், வழக்கறிஞர்கள் எடுத்துவைத்த வாதங்களை அலசி ஆராய்வதன் மூலம் இந்த மென்பொருள் இதைச் செய்கிறது.
இதேபோல, ஜுடிக்டா (Judicata) நிறுவனத்தின் மென்பொருளான ‘கிளார்க்’, சட்ட ஆவணங்களைப் படித்துப் பார்த்து, அதன் சாதக, பாதக அம்சங்களின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி அடுத்தகட்ட நடவடிக்கைக்கு வழிகாட்டுகிறது. முதல்கட்டமாக, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் செயல்படக்கூடியதாக இந்த மென்பொருள் அமைந்துள்ளது.
ஜெர்மன் செயற்கை நுண்ணறிவுக் கழகத்தின் துணை நிறுவனமான லீவர்டன் (LEVERTON), ரியல் எஸ்டேட் ஆவணங்களை ஏ.ஐ நுட்பம் மூலம் அணுகி ஒப்பந்தங்கள் மற்றும் குத்தகைப் படிவங்களைத் தயாரிக்கும் சேவையை வழங்குகிறது. இ-பிரேவியா (eBrevia) நிறுவனம், வழக்கறிஞர்கள் ஆயிரக்கணக்கான பக்கங்களைப் படிக்க வேண்டிய சுமையைக் கணிசமாகக் குறைக்கிறது. துரிதமாக ஆவணங்களை ஆராய்ந்து அவற்றின் சாரத்தை மட்டும் எடுத்து வைக்கிறது.
ரோபோ வழக்கறிஞர்
இந்தியாவிலும் சட்டம் சார்ந்த ஏ.ஐ மென்பொருள்களும், சேவைகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ராஸ் இன்டெலிஜன்ஸ் (ROSS Intelligence) எனும் சட்ட ஆய்வு மென்பொருள், வழக்கு விஷயங்கள் தொடர்பான கேள்விகளுக்கு எளிமையான நேரடி பதில்களை அளிக்கிறது. மும்பை நீதிமன்ற வழக்கு தொடர்பான கேள்வியைக் கேட்டால் இந்த மென்பொருள் நொடிப்பொழுதில் பதில் அளிக்கிறது. லெக்ஸ் மெஷினா (Lex Machina) எனும் மென்பொருள் இன்னும் ஒரு படி மேலே சென்று, முந்தைய தீர்ப்புகள் தொடர்பான தரவுகளை ஆய்வுசெய்து, குறிப்பிட்ட நீதிமன்றம், நீதிபதி, வழக்கறிஞர், எதிர் வழக்கறிஞர், வழக்கின் வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட அனுமானங்களை அளிக்கிறது. ஸ்பாட் டிராப்ட் (Spotdraft) மற்றும் பீகில் (Beagle) மென்பொருட்கள் ஒப்பந்த ஆவணங்களை உருவாக்குவதில் உதவி செய்கின்றன. கான்ட்ராக்ட் எக்ஸ்பிரஸ் (ContractExpress) மென்பொருள், பயனாளிகளிடம் கேள்வி கேட்டு அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் ஒப்பந்தத்தை உருவாக்கித் தருகிறது.
இன்னொரு பக்கம் பார்த்தால், ஸ்மார்ட் போனிலிருந்தே வழக்குகளை வாதாடக்கூடிய செயலிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ‘டூ நாட் பே’ (DoNotPay) எனும் செயலி இவ்விஷயத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கிறது. போக்குவரத்து விதிமீறல் புகார்களைப் பயனாளிகளின் சார்பாக தானாக வாதாடும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அரட்டை மென்பொருள், உலகின் முதல் ரோபோ
வழக்கறிஞர் என்றும் வர்ணிக்கப்படுகிறது. இதே பிரிவில் இன்னும் பல மென்பொருட்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
சட்டத் துறையில் செயற்கை நுண்ணறிவின் சாதக, பாதகங்களைத் தொடர்ந்து அலசலாம்!
(தொடரும்)