ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in
இனவாத பிரச்சினை, சுற்றுச்சூழல் சீர்கேடு, இஸ்லாமிய தேச மக்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை, கரோனா பெருந்தொற்று பரவலால் கடும் பாதிப்பு, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஆகிய பிரச்சினைகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் அமெரிக்காவில் புதிய ஆட்சி மலர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் 46-வது அதிபராக வாகை சூடியிருக்கிறார் ஜோ பைடன்.
பதவியேற்ற உடனேயே இதற்கு முன்பு டிரம்ப் முரண்டுபிடித்த பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையில் இணைவது உள்ளிட்ட பல உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார் பைடன். அமெரிக்காவின் புதிய இலக்கை நோக்கிய பயணத்தில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட 20 ஆளுமைகள் ஆகப்பெரும் பங்காற்றவிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகி இருக்கும் கமலா ஹாரிஸ்.
வெள்ளை மாளிகையில் உயரிய பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையோடு முதல் தமிழ்ப் பெண், முதல் கறுப்பினப் பெண், முதல் இந்திய மற்றும் ஆப்பிரிக்க பூர்விகத்தைச் சேர்ந்த பெண், முதல் ஆசியப் பெண் என இத்தனை அடையாளங்களையும் தாங்கி நிமிர்ந்து நிற்கிறார் கமலா ஹாரிஸ்.