பள்ளிகள் திறப்பு; அசம்பாவிதங்களை தவிர்க்கும் சூழலை உருவாக்க வேண்டும்!

By காமதேனு

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல் நாளிலேயே மூன்று மாணவர்கள் உட்பட நான்கு பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

பெருந்தொற்றுக்கு நடுவே பள்ளி செல்வது குறித்த அச்சம், பள்ளிக்குச் செல்ல தாமதமானது என்பன உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்தத் தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த இந்தச் சம்பவங்களை வைத்து பொதுவான ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ள முடியாது என்றாலும், பரிசோதனைச் சூழலில் இருக்கும் நமக்கு இவை முக்கியமான பாடங்கள் என்பதையும் மறுக்க முடியாது.

அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசித்த பின்னரே பள்ளிகளைத் திறந்திருக்கிறது அரசு. முதல் ஓரிரண்டு நாட்களுக்கு மாணவர்களை உளவியல் ரீதியாக ஊக்கமளிக்கும் விதத்திலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. எனினும், பல மாதங்களுக்குப் பின்னர் பள்ளிக்குத் திரும்ப வேண்டிய சூழல், தேர்வுகள் குறித்த அச்சம் எனப் பல்வேறு அழுத்தங்கள் மாணவர்களிடம் இருப்பதை உணர முடிகிறது. தவிர, சக மாணவர்களிடமிருந்து தனித்து இருக்க வேண்டிய சூழலும் மாணவர்களின் மனதில் இனம்புரியாத குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.

இப்படியான சூழலில், பள்ளியிலும், பள்ளிக்கு வெளியிலும் மாணவர்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும். மாணவர்களின் வசிப்பிடங்களுக்குச் சென்று பெற்றோர்களிடம் பேசுவது, பெருந்தொற்றுக்கு நடுவிலும் வாழ்க்கையைத் தொடர வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்துவது போன்ற முன்னெடுப்புகளை ஆசிரியர்கள் மேற்கொள்ளலாம். அதற்கு அரசின் சார்பில் தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE