கட்டக்காளை - 6

By மதுரை ஒ.முருகன்

ஊருக்குள்ள இருக்கிற காளியாத்தா கோயிலுக்கிட்ட வந்தப்பறந்தான்... வண்டி வேகத்தக் கொறைச்சிட்டு நெதானமாச்சு... தெருவில ரெண்டு பக்கமும் பெருவாரியா சோளத்தட்ட, தரகுவச்சு மேஞ்ச கூரவீடுகெ... வருசையா இருக்கு. அஞ்சாறு வீடு தள்ளி சுண்ணாம்புக் காரைவச்சுக் கட்டுன பெரிய வீடுதான் கட்டக்காளை வீடு.

கட்டக்காளை வீட்டுல மட்டும், வெங்கல வெளக்கு எரிஞ்சிட்டுருக்கு… வீட்டு மின்னாடி நீட்டத் திண்ணையில கழுச்சியாத்தா மட்டும், சீல முந்தானியப் பொத்தி ஒக்காந்திருந்தா.

வண்டி வீட்டு மின்னாடி வந்து நிக்க, கட்டக்காளை சொரத்தில்லாம எறங்கினான்…  “ஏப்பே… இம்புட்டு நேரம்… போன பிள்ளைகளக் காணமின்டு தவிச்சுப் போனேன்” சொல்லிக்கிட்டே கழுச்சியாத்தா தண்ணி மோந்துக்கார வீட்டுக்குள்ள போனா.

தோள்ல கெடந்த துண்டெடுத்து ஒதறிட்டு, தாவாரத் திண்ணையிலயே ஒக்காந்துட்டான். அது கெழமேலா அஞ்சு தூணு வச்சுக்கட்டுன தாவாரத் திண்ணை… கெழக்கோரமா அடப்படுத்த கோழி… ரெக்கையைச் சிலுப்பி,  ‘க்குர்ர்ர்ர்ர்ன்னு’ கத்தி… ஆருங்கிட்ட வரப்பிடாதின்டு எச்சரிக்கிது.

எந்தப் பிரிப்புமில்லாம இருக்கிற ஒச்சுக்காளை மனசுல, வெசத்த வெதைக்கத் தெரிஞ்சானேன்ற ஆத்திரம் ஒருபக்கம்... குடிகாரப்பயலப் போயி, அடிச்சுக் கீழ தள்ளி விட்டுட்டு வந்துட்டானே… செத்துக்கித்து போயிருவானோன்ற பயமொருபக்கம்… கட்டக்காளை மண்டக்குள்ள கொழப்புது.

கும்பால வரகரிசிச் சோத்தயும், செம்புல தண்ணியயும் கொண்டுக்காந்து வச்சா கழுச்சியாத்தா. அத கட்டக்காளை ஏறுட்டுக் கூட பாக்கல…
நடந்த சம்பவத்தயே நெனச்சிட்டுருந்தான்…  “கையக் கழுவிட்டு… கஞ்சியக் குடிப்பே… பச்சமொச்சக் கொழம்பு வச்சிருக்கேன்… அம்புட்டு ருசியாருக்கு…” கழுச்சியாத்தா கட்டக்காளைகிட்ட சொன்னது, ஒச்சுக்காளை காதுலவிழுக…

‘பச்ச மொச்சக் கொழம்பக்கூட, கெழவி மீன் கொழம்பு கெணக்கால்ல வைக்கும்…’ நெனச்சப்பவே ஒச்சுக்காளைக்கு, அரப்பசி கொறப்பசி… கொலப்பசியாயிருச்சு.

“வாத்தாய்… வகுறு பசிக்கிதேய்…” சத்தம் போட்டுக் கூப்பிட்டான். கஞ்சி காச்சிர வீட்டுக்குள்ள போன ஒச்சுக்காளைக்கும், தெரட்டி வச்சிருந்த வரகரிசி சோத்து உருண்டையில, நாழெடுத்து பெரியகும்பால்ல வச்சு, பச்சமொச்சக் கொழம்ப அகப்ப நெறயா மோந்து ஊத்துனா.

கொழம்பு ஊத்துறப்பவே, நாக்குல சொரந்த எச்சிய முழுங்கின ஒச்சுக்காளை, உருண்டைய பிச்சு கொழம்பில பெசஞ்சு சாப்பிடும்போது நாக்கு இன்னும் வேணுமின்டு கேக்குது…

ஒச்சுக்காளை நாக்கு சப்புக்கொட்டிருதப் பாத்த கழுச்சியாத்தா, இன்னரெண்டு உருண்டைய எடுத்து பிச்சு வச்சா… வகுத்துக்குச் சாப்பிட்ட ஒச்சுக்காளை, துப்புட்டிய எடுத்து தோள்ல சுத்திப் போட்டுக்கிட்டு, வேலுக்கம்ப கையிலெடுத்த மேனிக்கா தோட்டத்துக்கு கெளம்பிட்டான்.
ஊருள அம்புட்டுச்சனமும் ஒறங்கிருச்சு... அப்புறமும் கட்டக்காளைக்கு பசிக்கவுமில்ல ஒறக்கம் புடிக்கவு மில்ல... அப்படியே ஒக்காந்திருக்கான்.

கட்டக்காளைக்கு ஊரச்சுத்தி ஏகப்பட்ட தோட்டந்தொரவு… காடுகரண்டு இருந்தாலும் மொண்டிக்கரட்டு அடிவாரத்திலருக்கிற ரெட்டக் கமலத்தோட்டத்திலதான்… வெள்ளாம வெளச்ச செழிப்பாருக்கு. ஒரு பக்கம் கல்லச்செடி, இன்னொரு பக்கம் வாழத்தோப்பு… அந்த ஏரியாவுலயே… கட்டக்காளை தோட்டத்தில மட்டும்தான் வாழ நட்டுருக்காக.

வண்டி நெறய வாழத்தார வெட்டி சந்தையில வித்துட்டுத்தான் இன்னைக்கு வந்திருக்காங்க.

இன்னொத்த தண்ணியப் பாச்சினாப் போதும், கல்லச் செடிய புடுங்கிப்புடலாம்… கல்ல நல்லா முத்திப் போயிருச்சின்றதனால காட்டுப் பன்னிக கண்ட மேனிக்க எறங்கிருது… நாலஞ்சு குறுக்கத்த நாசம் பண்ணிப் புடிச்சு. அதுகல காட்டுக்குள்ள எறங்கவிடாம பாத்தாத்தான் முழு வெள்ளாமையும் எடுக்க முடியும். அதுக்குத்தான் கெளம்பிட்டான் ஒச்சுக்காளை.

தோள்ல கெடந்த துப்பட்டியெ இறுக்கிப் பொத்தின ஒச்சுக்காளை, பாம்புகீம்புன்டு, ஏதாச்சும் பூச்சிபட்ட குறுக்கால ஊடடிச்சா… ஒதுங்கிப் போகட்டுமின்டு, கையில வச்சிருந்த வேல்கம்பால தட்டிக்கிட்டே தெப்பத்துக்கு அங்கிட்டுருந்த சின்ன ஓடைக்குள்ள எறங்குனான்…
‘க்ர்ர்…க்ர்ர்…’ ன்டு, தவக்கா சத்தம் அங்கொண்ணும் இங்கொண்ணுமா போட்டி போட்டுக் கத்துது…

‘சலசல’ன்டு ஊத்தெடுத்து ஓடுற ஓடத்தண்ணியில கால நனச்சான் ஒச்சுக்காளை.  “ஸ்…ஆ…” ன்டுகிட்டே… வச்ச கால விசுக்குன்டு எடுத்திட்டான். சில்லுன்டு மேலு பூராம் கூதடிக்க, நடுங்கிப்போனான், துப்பட்டிய இன்னமும் இறுக்கிப் பொத்திக்கிட்டு தண்ணிக்குள்ளயே பொத்துனாப்புல நடந்தான்…

ரெண்டு எட்டுக்கூட எடுத்து வைக்கல… பொதருக்குள்ளருந்து  ‘சரசர’ன்டு ஒரு சத்தம்… சுதாரிச்சு நின்ட ஒச்சுக்காளை திரும்பிப்பாத்தான். ஒண்ணும் பொலப்படல. பம்மி ஒக்காந்தான்… கையில வச்சிருந்த வேல்கம்ப இறுக்கிப் புடிச்சான்.

சத்தம் வந்த தெசயில கண்ணச்சிமிட்டாம உத்துப் பாத்தான் ஒச்சுக்காளை. வெள்ளிவெளிச்சத்துக்கும் அதுக்கும்… கத்தாழை மறவுல பளிப்பளின்டு மின்னுறது என்னான்டு தெரிஞ்சு போச்சு…

கல்லக்காட்டப் பூராம் நாசம் பண்ணிட்டுத்திரிஞ்ச காட்டுப் பன்னி… மாடுமாரி பெரும்போடுசா நிக்கிது. கூட்டமா வந்திருக்கா… ஒத்தயா வந்திருக்கான்டு, அசையாம நின்டு, கண்ணு முழிய மட்டும், சொழட்டிப் பாத்தான் ஒச்சுக்காளை. நிக்கிறது ஒத்தப்பன்னி மட்டுந்தான்.
ஒத்த ஆனையும், ஒத்தப் பன்னியும் வசங்கெட்டதுக… அசந்தா சோலிய முடிச்சுப்புடும்… கட்டக்காளை வேட்டைக்கு போறப்ப சொன்னது ஒச்சுக்காளைக்கு நாபகத்துக்கு வந்துச்சு.

சுதாரிச்ச ஒச்சுக்காளை, இதா நம்மலான்டு இன்னைக்கிப் பாத்துருவோமிடான்டு, தானா சொல்லிக்கிட்டே பன்னிக்கிட்ட நெருங்குனான். வேல்கம்ப இறுக்கமாப் புடிச்சு குறிபாத்து வீசுனான்…

பன்னி முதுகிலபட்ட வேல்கம்பு தெரிச்சி விழுந்திருச்சு…  ‘வீல்’ன்னு கத்திக்கிட்டு அங்கிட்டுங்கிட்டும் ஓடுன பன்னி, திரும்பி நேருக்கு நேரா ஓடியாருது…

ஒரே தாவில கீழ விழுந்த வேல்கம்ப கையில எடுத்தான் ஒச்சுக்காளை… பன்னிக்கு காயம்பட்டிருக்கும் போல மூர்க்கமாருக்கு.
ஆங்காரத்தில அலைபாஞ்ச பன்னி, நேருக்கு நேரா ஓடியாந்து ஒச்சுக்காளைய ஒரே முட்டுல தூக்கி வீசிருச்சு… ஓடத்தண்ணியில நனைஞ்சிருந்த காலு, பெலங்குடுக்காம வழுக்கிருச்சு… கீழ தடுமாறுனவன்  அதே வேகத்தில பன்னிகூட மோதுறதுக்கு தயாராயிட்டான்.

நெனச்சாமாரியே காட்டுப் பன்னி ஒச்சுக்காளை பக்கம் திரும்பி பொயல்காத்து கெனக்கா பாஞ்சு வருது… காலு ரெண்டையும் அகட்டி நின்டு, வேல்கம்ப கெட்டியாப் புடிச்சுக்கிட்டு, ஓடியாந்த பன்னிய குறி பாத்து ஒரே போடு…  ‘வீல்’ன்டு கத்திக்க்கிட்டு… வேல்கம்போட ஒச்சுக்காளையயும் சேத்து முன்னாடி இழுத்துக்கிட்டு தடுமாறி ஓடுது. அவன் அப்பையும் விடல… வெல்கம்ப இறுக்கிப் புடிச்சு… ஓங்கி அமிக்கி… ஒரு திருகுத் திருகுனான்… அம்புட்டுதான்… காட்டுப் பன்னியோட சோலி முடிஞ்சிருச்சு.

தூக்கமாட்டாமா பன்னியத் தூக்கிட்டு வீட்டுக்கு வந்தான்… குத்துப்பட்ட பன்னியிலருந்து வடிஞ்ச ரத்தம்… ஒச்சுக்காளை முதுகுவழியா சாரை சாரையா வடிஞ்சுக்கிருக்கு.

விடியக்காலமிருந்து சந்தையில அலைஞ்ச கெறக்கத்திலயும், கினிங்கட்டி மாயங்கூட நடந்த சம்பவத்தயும் நெனச்சுக்கிட்டே இருந்த கட்டக்காளை ஒக்காந்தபடியே அசந்து ஒறங்கிட்டுருந்தான்…

‘சொத்து’ ன்டு விழுந்த சத்தத்தக் கேட்டு, முழிச்சுப்பாத்த கட்டக்காளை முன்னாடி, வேர்த்து விறுவிறுக்க, அய்யனார் சாமிமாரி நிக்கிறான் ஒச்சுக்காளை. ஒடம்புல அங்கெங்க ரத்தங் வடிஞ்சிருக்கு... மேமூச்சு, கீமூச்சு வாங்குறான்... நிக்கிற தினுசப் பாத்து நெலகொழஞ்சு போனான் கட்டக்காளை.

"கல்லக்காட்ட நாசப்படுத்திக்கிருந்த பன்னியக் கொண்டுபுட்டனப்பாய்..." ஒச்சுக்காள சொன்னது கட்டக்காளைக்கு கேக்கல...சிந்தன தடுமாறிட்டான்.

"எப்பாய்..." தோளத் தட்டி உசுப்பவும் ஒடம்பு லேசா சிலுத்து, நெதானத்துக்கு வந்தான் கட்டக்காளை. "இம்புட்டு நாளா கல்லக்காட்ட ஒலப்பிக்கிட்டுருந்த பன்னிய, வேல்கம்புல… ஒரே குத்து சாச்சுப்புட்டேன்ல… இந்தா பாரு…" பகுமானமாச் சொன்ன ஒச்சுக்காளைய ஏறுட்டுப் பாத்தான் கட்டக்காளை.

சத்தங்கேட்டு எந்திரிச்சு வந்த கழுச்சியாத்தா,வெங்கல வெளக்கு எடுத்துக்கிட்டு வெளிய வந்து பாத்தா… வீட்டு மின்னாடி கெடந்த மொரட்டுப் பன்னியப் பாத்து பதறுனா...

"யாத்தேய்..." நெஞ்சுலடிச்சு கதறுன கழுச்சியாத்தா, "நம்ம சாமிக்கு ஆகாததக் கொண்டுக்காந்து இங்கன எவென்டா போட்டவென்... சாமிக்கு ஆகாதே…”

“காழாஞ்சிக்கருப்பா... செல்லங்கருப்பா... சின்னா… சின்னஞ் சிறுசு தெரியாமச் செஞ்சுபுட்டான்... ஓங்காரத்த காமிச்சுராத சாமி... தாங்கமுடியாது... 

ஆத்தா ஒச்சாயி,பேச்சி, மாயா... நீங்கதான் தொனச்செய்யணும்" சத்தமாச் சொல்லி இருக்குற சாமியெல்லாத்தயும் கும்பிட்ட கழுச்சியாத்தா, கொலசாமி இருக்கிற தெசய நோக்கி நெடுஞ்சாங்கெடையா விழுந்து கும்புட்டு.., மண்ண அள்ளி நெத்தியில பூசுனா.

காழாஞ்சிக் கருப்பன் எல்லையில, பன்னிய கொண்டாந்து போட்டது, சாமி குத்தமாயிருமோன்டு ஒச்சுக்காளைக்கும் பயங்குடுத்திருச்சு... அவன அறியாமலேயே, மேலுப்புல்லறிச்சு நிக்கிது. என்னா செய்யிறதுன்டு தெரியாமா முழுச்சான்.

“நமக்குத்தாண்டா ஆகாது… குவ்வாங்கிட்ட குடுத்திரு…” கட்டக்காளை அதட்டுன அதட்டுல, பன்னியத் தூக்கமாட்டாம தூக்கிக்கிட்டு குவ்வாங் வீட்டுக்குப் போனான் ஒச்சுக்காளை.

ஊருக்கெ தெக்காரோமா பத்து பதினஞ்சு கூரவீடுகள்ல ஒத்த வீட்லதான் குவ்வான் பொஞ்சாதி புள்ளையோட குடியிருக்கான்… அங்கருக்கிற சனங்களுக்கு நல்லது கெட்டது அம்புட்டும் குவ்வான் சொல்லுப்படிதான் நடக்கும்…

குவ்வான்டுல்லாம அங்கெருக்கிற அம்புட்டு சனத்துமேலயும்… பாசங்காட்டுற கட்டக்காளை சொல்றதுதான் அவுகளுக்கு வேதவாக்கு. சடங்கு சம்பிரதாயத்தில வேத்தும இருந்தாலும்… எல்லாத்தயும், ஒண்ணா மண்ணா பிரிப்பில்லாம பாத்திக்கிருவான் கட்டக்காளை.
குவ்வான் வீட்டச் சுத்திலும் தென்னமட்டய வச்சு மறப்புக் கட்டி படலு வச்சு அடச்சிருந்தான். “குவ்வாங் …எலேய்… குவ்வாங் …” சத்தம்போட்டு கூப்பிட்டுக்கிட்டே படலத்தொறந்து உள்ள போயி வீட்டு மின்னாடி காட்டுப் பன்னிய எறக்கி வச்சான் ஒச்சுக்காளை.

வீட்டலருந்து வெளிய வந்த குவ்வான் பொஞ்சாதி மாரியாத்தாளுக்கும்… பொல்லாச் சந்தோசம். “ஏதாப்பா”ன்டு குவ்வான் கேக்க… ஒச்சுக்காளை பன்னிய வேட்டயாடுன வித்தைய பகுமானமா சொல்லிட்டுருந்தான்…

"காட்டுப் பன்னி... நெய்யாருக்குமில்ல" குவ்வான் பொண்டாட்டி மாரியாத்தா சொல்லிக்கிட்டே... வீட்டுக்குள்ள போயி அறுக்கறதுக்குத் தோதா கத்திய எடுத்துக்காந்து கொடுத்தா.

கொழு... கொழுன்டு... நூறு கெலாவாச்சும் எட இருக்கும்... அந்தப் பன்னியத் தூக்கிப் போட்டு பாலம் பாலமா அறுத்த குவ்வான், சோட்டயன், கும்மக்கத்தாள, சின்னன்டு அங்க குடியிருந்த பத்து பதினஞ்சு வீட்டாளுகளுக்கும், குடும்பத்துக் தக்கன கூறு போட்டுக் குடுத்தான். வாங்கிட்டுப்போன சனம், விடியுறதுக்குள்ளாம் ஆக்கித்தின்டது போக, மிச்சமிருந்த கறிய உப்புக்கண்டம் போட்டு வீட்டுவீட்டுக்கு தோரணம் கட்டி காயவச்சிருச்சு…

கினிங்கட்டிமாயன் செத்துப் போயிருந்தான்டா? தாம்மட்டுமே தஞ்சமின்டு அண்டிவந்த நல்லப்பன் மகன் ஒச்சுக்காளை மேல கொலபாதகம் வந்திருச்சின்டா? ராத்திரிப் பூராம் இதெயே நெனச்சுக்கிருந்த கட்டக்காளை, விடிஞ்சு வெகு நேரமாகியும் திண்ணையிலருந்து எந்திரிக்கல… கட்டக்காளை மனசு, புயல்ல சிக்குன புழுதி கெனக்கா தவிச்சிக்கிட்டுருக்கு.

(தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE