இனி எல்லாமே ஏ.ஐ - 6: நோய் நாடி... அல்கோரிதம் நாடி..!

By சைபர்சிம்மன்

சிகிச்சையில் மருத்துவர்களுக்கு உதவும் வகையில் மட்டுமே ஏ.ஐ சார்ந்த தீர்வுகள் அமைகின்றன என்பதால், இந்தத் தொழில்நுட்பம் மருத்துவர்களுக்கு முற்றிலும் மாற்றாக அமைந்துவிடாது என்பதைக் கடந்த இதழில் பார்த்தோம். அதேபோல், மருத்துவத் துறையில் ஏ.ஐ நுட்பம் முக்கிய இடம்பிடிக்கப்போவது என்று நாம் சொல்வதை, சிகிச்சை முறைகளை முழுமையாக இந்த நுட்பம் கைக்கொண்டுவிடும் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவும் வேண்டியதில்லை.

நோயைக் கண்டறிவதிலும், சிகிச்சைக்கான திட்டமிடலிலும் ஏ.ஐ நுட்பம் மருத்துவருக்கு உதவியாக இருக்கும். அதாவது, மருத்துவத்தின் மையமாக மருத்துவரே தொடர்வார். ஆனால், ஏற்கெனவே உள்ள மருத்துவ உதவியாளர்களுடன் டிஜிட்டல் உதவியாளராக மென்பொருள் அமைப்புகளும், அல்கோரிதம்களும் செயல்படும். இவற்றின் உதவியோடு, மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை மேம்படும். தற்போதுள்ள பல போதாமைகளையும் களையலாம்.

அல்கோரிதமா... அப்படியென்றால் என்ன?

அல்கோரிதம்களை ‘படிமுறை’ எனக் குறிப்பிடலாம். அடிப்படையில் அல்கோரிதம் என்பது, ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அல்லது ஒரு செயலைச் செய்து முடிப்பதற்கான படிப்படியான வழிமுறை எனப் புரிந்துகொள்ளப்படுகிறது. தொழில்நுட்பத் துறையில், எந்த ஒரு விஷயத்தையும் செய்து முடிக்க கணினிகளுக்குக் கட்டளையிட அல்கோரிதம்கள் பயன்படுகின்றன.

இ-காமர்ஸில் தொடங்கி போக்குவரத்து நெரிசல் கணிப்பு வரை எண்ணற்ற இடங்களில் அல்கோரிதம்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் எல்லா அல்கோரிதம்களும் ஏ.ஐ திறன் பெற்றவை எனச் சொல்லிவிட முடியாது. தனக்குக் கொடுக்கப்பட்டதைச் செய்து முடிப்பதோடு, அதிலிருந்து தானாகச் சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கும் அல்கோரிதமே புத்திசாலித்தனமானதாகக் கருதப்படுகிறது. அதாவது, அந்த வகை அல்கோரிதம்கள் செயற்கை நுண்ணறிவுத் தன்மை கொண்டுள்ளன.

ஆனால், தானாகச் சிந்தித்து செயல்படும் திறன் என்பதை ஒரு உதாரணமாகப் புரிந்துகொள்ள வேண்டுமே தவிர மனிதச் சிந்தனைக்கு நிகரான பொருளில் புரிந்துகொள்ளக்கூடாது. ஏனெனில், ‘சூப்பர் கம்ப்யூட்டர்’ உள்ளிட்ட எந்த இயந்திர அமைப்புக்கும் அத்தகைய திறன் இன்னும் சாத்தியமாகவில்லை. எனினும், இடப்பட்ட கட்டளையைச் செய்து முடிப்பதோடு, கொடுக்கப்பட்ட தரவுகளிலிருந்து தாமாகப் புரிந்துகொள்ளும் திறன் பெற்றுள்ள புரோகிராம்களும் இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவின் ஒரு அங்கமான இயந்திரக் கற்றல் மூலம், இவை தரவுகளிலிருந்து தாமாகக் கற்றுக்கொள்கின்றன. இந்தக் கற்றலின் அடிப்படையில் தாமாக முடிவுகளை மேற்கொள்கின்றன.

மருத்துவத் துறைப் பயன்பாடு

இத்தகைய புத்திசாலி அல்கோரிதம்களே மருத்துவத் துறையிலும் உதவிக்கு வந்துள்ளன. பொதுவாக மனிதப் புத்திசாலித்தனம் தேவைப்படும் விஷயங்களைச் செய்துமுடிக்கும் வகையிலான அல்கோரிதம்களை உருவாக்கிவிடலாம். உதாரணமாக, நோயாளிகளின் ஸ்கேன் படங்களைப் பார்த்து, அதிலிருந்து நோய்க்கூறு தன்மையைக் கண்டறிவதற்கான அல்கோரிதமை உருவாக்கிவிடலாம். ஆனால், இத்தகைய மருத்துவ அல்கோரிதம்கள் செயல்பட இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று, நோய்க்கூறு தொடர்பான தரவுகள். இன்னொன்று, அந்த தரவுகளைப் புரிந்துகொள்வதற்கான உதாரணங்கள்.

ஒருவிதத்தில் பார்த்தால் மருத்துவ மாணவர்கள், மருத்துவக் கல்லூரி வகுப்பறையிலும் பயிற்சியிலும் எப்படிக் கற்றுக்கொள்கின்றனரோ, அதேபோல் அல்கோரிதம்களும் தங்களுக்குக் கொடுக்கப்படும் தரவுகளிலிருந்தும், உதாரணங்களிலிருந்தும் கற்றுக்கொள்கின்றன. மருத்துவரோடு ஒப்பிட்டால் அல்கோரிதம்களுக்கு இதில் போதாமை உள்ளது என்றாலும், வேகத்திலும், செயல்படும் பரப்பிலும் அவை மருத்துவர்களை மிஞ்சிவிடும்.

ஏனெனில் மருத்துவரால் குறிப்பிட்ட அளவு தரவுகளை மட்டுமே மனதில் கொள்ள முடியும். அவரது அனுபவத்தின் அடிப்படையில் தொடர்புடைய மற்றும் முந்தைய மருத்துவ உதாரணங்களைப் பொருத்திப் பார்க்க முடியும். ஆனால், அல்கோரிதம்களை இயக்கும் மென்பொருள் அமைப்புகள், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான தரவுகளைக் கையாளும் திறன் கொண்டிருப்பதோடு, ஒரு மருத்துவர் வாழ்நாளில் பார்த்திருக்க வாய்ப்புள்ள உதாரணங்களைவிட பல ஆயிரம் மடங்கு உதாரணங்களை நொடிப்பொழுதில் பரிசீலிக்கக்கூடிய திறனும் பெற்றிருக்கும். எனவே தான், குறிப்பிட்ட சூழலில் நோய்க்கூறு கண்டறிவதில் அவை சிறப்பாகச் செயல்படுகின்றன.

இப்போது மருத்துவத் துறை டிஜிட்டல் மயமாகியிருப்பதால் நோயாளிகள் மற்றும் நோய்கள் தொடர்பான தரவுகளுக்குக் குறைவே இல்லை. ஒரு நோயாளி சிகிச்சைக்கு வருகிறார் என்றால், அவரது மருத்துவ வரலாற்றை மின்னணு வடிவில் அணுகினால், ஆண்டுக்கணக்கில் அவரது ரத்த அழுத்த விவரம், உடல் வெப்பநிலை, இதயத்துடிப்பு தன்மை உள்ளிட்ட தரவுகளைச் சேகரிக்கலாம். இப்படி சேகரிக்கப்படும் மருத்துவத் தரவுகளை ஆய்வு செய்து தேவையான முடிவுகளைப் பரிந்துரைக்கக்கூடிய அல்கோரிதம்களை உருவாக்குவதும் சாத்தியமே. இதுதான் தற்போது மருத்துவத் துறையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

அடுத்தடுத்த கட்டங்களில்...

பொதுவாக, தொடர்ந்து ஒரே மாதிரியான செயல்பாடுகள் கொண்ட விஷயங்களைக் கையாள்வதில், மனிதர்களைவிட ஏ.ஐ சூரப்புலியாக இருக்கிறது. இத்தகைய பணிகளுக்காக ஏ.ஐ நுட்பம் நாடப்படும்போது அது சிறப்பாகச் செயல்படுவதோடு, ஒரே மாதிரியான அந்தச் செயல்பாட்டிலிருந்து மனிதர்கள் விடுபடுவதும் சாத்தியமாகிறது.

சுருக்கமாகச் சொன்னால் தானியங்கிமயமாக்க கூடிய செயல்களை எல்லாம், புத்திசாலி அல்கோரிதம்களிடம் ஒப்படைத்துவிட்டு, தீவிரக் கவனம் தேவைப்படும் நோயாளிகளிடம் மருத்துவர்கள் உரிய நேரத்தைச் செலவிடலாம். இதைச் சாத்தியமாக்குவதே, மருத்துவ ஏ.ஐ நுட்பத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இவை தவிர, மருந்து கண்டுபிடிப்புக்கான ஆய்வு உள்ளிட்ட பலவேறு துறைகளிலும் ஏ.ஐ முக்கிய அங்கம் வகிக்கிறது.

மற்ற துறைகளில் ஏ.ஐ நுட்பத்தின் தாக்கத்தைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அல்கோரிதம் சார்பு

அல்கோரிதம்களின் ஆற்றல் அவற்றுக்கு அளிக்கப்படும் தரவுகள் மற்றும் பயிற்சி சார்ந்தே அமைகிறது. இந்தத் தரவுகள் ஒருதலைபட்சமாக இருந்தால், அல்கோரிதம் செயல்பாடும் ஒருதலைபட்சமாக அமையலாம். இதை ‘அல்கோரிதம் சார்பு’ என்கின்றனர். உதாரணமாக, புகைப்படங்களைக் கண்டறிவதற்கான அல்கோரிதமுக்குக் குறிப்பிட்ட வகையான மனிதர்கள் படங்களை மட்டும் தரவுகளாகச் சமர்ப்பித்தால், அவை அளிக்கும் முடிவும் குறிப்பிட்ட வகை மனிதர்கள் சார்ந்ததாக இருக்கும். மேலும், அல்கோரிதம்களுக்கான நிரல்களை உருவாக்குபவரின் மனதில் உள்ள சார்புகள் அவரது நிரலில் பிரதிபலிக்காமல் இருப்பதும் அவசியம். மருத்துவ அல்கோரிதம்களுக்கும் இது பொருந்தும். ஏ.ஐ உலகில் இது தற்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மருந்து கட்டுப்பாடு அமைப்புகள் மருத்துவ அல்கோரிதம்களுக்கு அனுமதி அளிக்கும்போது, இந்த அம்சத்தையும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

(தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE